search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முற்றுகை
    X
    முற்றுகை

    கோத்தகிரி அருகே குடிநீர் பிரச்சினை- டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

    கோத்தகிரி அருகே குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு(டேன்டீ) சொந்தமான தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு குயின்சோலை மற்றும் தேனாடுகூப்பு பகுதிகளில் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த குடியிருப்புகளில் அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 

    இதற்கிடையில் டேன்டீ நிர்வாகம் ந‌‌ஷ்டத்தை காரணம் காட்டி குடியிருப்புகளை முறையாக பராமரிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் சீராக குடிநீர் வினியோகமும் செய்யப்படுவது இல்லை என தெரிகிறது. இதனால் அசுத்தமான தண்ணீரை குடிப்பதற்கு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று டேன்டீ அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு எஸ்.கைக்காட்டி பகுதியில் உள்ள டேன்டீ மேலாளரின் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே தொழிலாளர்களுடன், டேன்டீ மேலாளர் கவுதம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அங்கிருந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் டேன்டீ உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்று தொழிலாளர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×