search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ தலைவர் சிவன்"

    ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். #GSLVMark3D2 #ISRO #Sivan
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

    இந்நிலையில், விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தியா தயாரித்துள்ள ஜிசாட் 29 செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி எஸ் எல் வி மார்க் 3 டி 2 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 



    விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்தியாவின் அடுத்த மைல்கல் இது.

    இஸ்ரோவின் திறமை வாய்ந்த பணியாளர்களால் இது சாத்தியமானது. இந்தியாவின் மிக அதிக எடை கொண்ட சேட்டிலைட் இதுவாகும்.

    இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தகவல் தொடர்புக்கு பேருதவியாக இருக்கும். வடகிழக்கு பகுதிகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தவும் இது உதவும்.

    அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும். மேலும்,  வரும் 2020-ம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும் சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார். #GSLVMark3D2 #ISRO #Sivan 
    கஜாபுயல் திசை மாறினால் நாளை மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவது நிறுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #GajaCyclone #GSLVMark3 #ISRO
    வேலூர்:

    தொலைத் தொடர்பு, தொலையுணர்வு வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.

    எனினும் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் ஏவ மற்ற நாடுகளின் உதவியைத்தான் இஸ்ரோ நாட வேண்டியுள்ளது. அதை மாற்றி அமைக்கும் விதமாக நமது விஞ்ஞானிகளின் நீண்ட கால உழைப்பில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் தயாரிக்கப்பட்டது.

    இந்த ராக்கெட் 6 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்டது. இதன்மூலம் அதிகபட்சம் 4 ஆயிரம் கிலோ எடை உடைய செயற்கைக் கோள்களையும், விண்ணில் செலுத்த முடியும். பல கட்ட சோதனைக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட் 19 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

    அடுத்த கட்டமாக அதிநவீன ஜிசாட் 29 தொலைத்தொடர்பு செயற்கை கோள் மார்க்-3 ராக்கெட் மூலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து நாளை மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இதனையொட்டி இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-


    கஜா புயல் திசை மாறினால் மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவது நிறுத்தப்படும். புயல் திசை மாறாவிட்டால் திட்டமிட்டப்படி நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.

    மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக மலை மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய பணியாகும். அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகள் மிகவும் பயன்பெறும். இதில் அதிக திறன் கொண்ட கா, க்யூ பேண்ட் டிரான்ஸ் பாண்டர்கள், துல்லியமாக படம் எடுக்கும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இது தவிர எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பரிசோதனை முயற்சியில் க்யூ, வி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் இடம் பெற்றுள்ளன.

    அடுத்ததாக சந்திராயன்-2 மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய ககன்யாங்க் ஆகிய ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்-3 ராக்கெட் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.

    இஸ்ரோ தயாரித்ததில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 தான் அதிக எடை கொண்ட ராக்கெட். இதனால் அதற்கு பாகுபலி ராக்கெட் என புனைப் பெயர் வந்துள்ளது. இதையடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கஜா உடன் மோதும் பாகுபலி என பரப்படுகிறது. #GajaCyclone #GSLVMark3
    இஸ்ரோ தலைவர் சிவன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், சந்திராயன்-2 அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளார். #ISRO #Chandrayaan-2
    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திராயன்-2 செயற்கை கோளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    சந்திராயன்-2 செயற்கை கோளின் எடை 3 ஆயிரத்து 850 கிலோவாக உயர்த்தப்பட்டதால், ஜி.எஸ்.எல்.வி.எம்.கே-2 ரக விண்கலத்தில் செலுத்த முடியாது எனவும், இதற்காக ஜி.எஸ்.எல்.வி.எம்.கே 3 மறுவடிவமைப்பு செய்யப்படுவதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.



    மேலும், காலநிலை ஒத்துழைக்காவிட்டால், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 பிப்ரவரி 16-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தை அடைய இருக்கும் செயற்கை கோள்  சந்திராயன்-2 எனவும், இது 40 நாள்கள் பயணித்து தனது இலக்கான நிலவை அடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த செய்தியாளர் சந்திப்பில், மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் உடன் இருந்தார். #ISRO #Chandrayaan-2
    மேக் இன் இந்தியா திட்டத்தில் 40 ராக்கெட்டுகள் தயாரிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ISROleadersSivan #ISRO

    நாகர்கோவில்:

    இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’வின் தலைவராக இருப்பவர் சிவன். இவரது சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை ஆகும்.

    சரக்கல்விளை அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தான் சிவன் தனது ஆரம்ப கல்வியை பயின்றார். அவர் விஞ்ஞானி ஆன பிறகு தான் படித்த பள்ளிக் கூடத்திற்கு வந்து பார்வையிட்டு உள்ளார். மேலும் அவர் ‘இஸ்ரோ’ தலைவரானதும் அவருக்கு சொந்த ஊரில் வரவேற்பும் அளித்து ஊர் மக்கள் மகிழ்ந்தனர்.

    தற்போது சரக்கல்விளை அரசு பள்ளியில் ஓட்டு கட்டிடங்களை மாற்றிவிட்டு புதிதாக கட்டிடங்கள் கட்டும் பணி ரூ.40 லட்சம் செலவில் நடந்து வருகிறது. இதில் ஒரு வகுப்பறை டிஜிட்டல் வகுப்பறையாக உருவாகி வருகிறது. இந்த பணிகள் கடந்த மே மாதம் 17-ந்தேதி தொடங்கியது.

    இந்த நிலையில் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் இன்று சரக்கல்விளை வருகை தந்தார். அரசுப்பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது ஊர் மக்கள் சார்பில் அவருக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டுகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பார்வதியும் அவருக்கு வரவேற்பு அளித்தார். மேலும் அந்த பள்ளிக் கூடத்திற்கு புதிதாக சுற்று சுவர் கட்டித்தரவும், மின் வசதி, கழிவறை வசதி, வர்ணம் பூசுதல், புதிய இருக்கைகள், பூங்கா அமைத்தல் போன்ற கோரிக்கைகளை அவர் சிவனிடம் தெரிவித்தார்.

    தற்போது நடைபெறும் பணியில் இவை வருவதாகவும், பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவன் உறுதியளித்தார். இந்த கட்டிட பணிகளை திட்டமிட்டதற்கு முன்னதாக அக்டோபர் மாதமே முடிக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளதாக அவர் கூறினார்.

    அதன்பிறகு நிரூபர்களுக்கு பேட்டி அளித்த சிவன் கூறியதாவது:-

    மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன்மூலம் பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்திய வின்வெளி ஆராய்ச்சித்துறையும், மேக் இன் இந்தியா திட்டத்தில் பல திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் மேக் இன் இந்தியா திட்டத்தில் ‘இஸ்ரோ’ 40 ராக்கெட்டுகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இதில் 30 ராக்கெட்டுகள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளாகவும், 10 ராக்கெட்டுகள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ஆகவும் தயாரிக்கப்படும்.

    செயற்கை கோள்களுக்கு தேவையான சூரிய ஒளி மின் சக்தி பேட்டரிகளும் இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த பேட்டரிகள் இந்தியாவில் தயாராகும் செயற்கை கோள்களில் பயன்படுத்தப்படும்.

    இந்த திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். கிராமப் புற மாணவர்கள் கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்த பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவர்கள் கல்வி பயின்று மேன்மை அடைய இது உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ISROleadersSivan #ISRO

    ×