என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்பெருக்கு
    X
    சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்பெருக்கு

    கும்பக்கரை, சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    திண்டுக்கல், தேனியில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை, சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கும்பக்கரை, சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தமபாளையம், கூடலூர், பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல்சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பெரியகுளம், தாமரைக்குளம், வடுகபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    பருவமழை ஏமாற்றிய நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சாரலாக தொடங்கி விடிய விடிய கன மழை பெய்தது. கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி, தேனி, ஆண்டிப்பட்டி, பெரிய குளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காலை வரை நீடித்தது. தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் படிக்கட்டுகள் வரை நிரம்பி செல்வதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடையை நீட்டித்துள்ளனர். மழை காரணமாக நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடலூர், கம்பம் பகுதியில் இருந்து கேரள பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் இன்று செல்லவில்லை. முல்லைப் பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தி உள்ளார்.
    போடி அருகே தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள புலியூத்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்திலும் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்தது. கொடைக்கானலில் இரவு முழுவதும் பெய்த மழையால் புதிய அருவிகள் உருவாகி உள்ளன. எங்கும் பசுமையாக சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் உள்ளது. அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கி உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.55 அடியாக உள்ளது. 1132 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1360 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக உள்ளது. 1296 கன அடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38 அடி. 42 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.20 அடி. 31 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்தக்கது.

    மழை அளவு மி.மீ. வருமாறு:- பெரியாறு 23, தேக்கடி 16, கூடலூர் 54, சண்முகாநதி அணை 52, உத்தமபாளையம் 35.3, வீரபாண்டி 35, வைகை அணை 20, மஞ்சளாறு 38, சோத்துப்பாறை 46, ஆண்டிப்பட்டி 32, அரண்மனைப்புதூர் 20, போடி 13.4, பெரியகுளம் 57.
    தேனி மாவட்டத்தில் மொத்தம் 389.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 
    Next Story
    ×