search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலைரெயில் பாதையில் உருண்டு விழுந்த பாறையை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    X
    மலைரெயில் பாதையில் உருண்டு விழுந்த பாறையை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    திருப்பூர், பல்லடம், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை

    திருப்பூர், பல்லடம், கோத்தகிரி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மலை ரெயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்கிறது.

    கோத்தகிரி பகுதியில் நேற்று காலை வெயில் அடித்தது. மதியம் திடீரென வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து 2 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 3 மணி நேரம் விடாமல் பெய்தது. இதனால் அங்குள்ள பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கொடநாடு, கூக்கல்தொரை, கட்டப்பெட்டு, சோலூர் மட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக மலைக்காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தொடர் மழை பெய்து வருவதால் தேயிலை விவசாயம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர் மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மேலும் கடுங்குளிர் நிலவியது.

    இதனால் காலையில் வேலைக்கு செல்வோர் சுவட்டர் அணிந்தபடி வேலைக்கு சென்றனர்.

    இதேபோல் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடுங்குளிர் மற்றும் பனிமூட்டமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு தங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன் காரணமாக தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றனர். மக்கள், ஆட்டோ டிரைவர்கள் தங்களை குளிரில் இருந்து காத்து கொள்ள தீமுட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    நேற்று மாலை பெய்த மழையால் குன்னூர் ஹில்குரோவ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மலைரெயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்து கிடந்தன. இதனால் அவ்வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வந்த மலைரெயில் சிறிது தூரத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் 5 மணி நேரம் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர். பின்னர் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பாறைகளை அகற்றினர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைரெயில் இயக்கம் தொடங்கியுள்ளது.

    இதேபோல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை கடும் வெயில் அடித்தது. இந்தநிலையில் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. கோவை மாநகரில் மிதமான மழையும், புறநகர் பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது.

    திருப்பூர் பகுதியிலும் நேற்று மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோல் பல்லடத்தில் மாலை 3 மணி முதல் இரவு வரை கனமழை பெய்தது. அதன் பின்னர் தொடர்ந்து சாரல் மழையாக பெய்தது. இந்த மழை காரணமாக பல்லடம் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளான அண்ணாநகர் உள்பட பல இடங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

    உடுமலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் இதமான காற்றுடன் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: திருப்பூர் வடக்கு-11, திருப்பூர் தெற்கு-10, அவினாசி-1, பல்லடம்-19, ஊத்துக்குளி-14, காங்கயம்-10, தாராபுரம்-6.50, குண்டடம்-30, திருமூர்த்தி அணை-3, அமராவதி அணை-24, உடுமலை, 14, மடத்துக்குளம்-38, திருப்பூர் கலெக்டர் அலுவலகம்-14.30.
    Next Story
    ×