என் மலர்
நாகப்பட்டினம்
- 3 மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
- மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே தமிழக எல்லையில் வெவ்வேறு இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்பிடி உபகரணங்களை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்த விபரம் வருமாறு:-
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் இருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்களின் படகை வழிமறித்தனர். பின்னர், மீனவர்களின் படகுக்கு சென்று அவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் அரங்கேற்றிய இந்த தாக்குதலில் மீனவர் ராஜேந்திரனுக்கு தலையில் வெட்டுக்காயமும், ராஜ்குமாருக்கு தலையில் வெட்டுக்காயம் மற்றும் கையில் கட்டையால் அடித்ததில் காயமும் ஏற்பட்டது. மற்றொரு மீனவரான நாகலிங்கத்திற்கு உள்காயம் ஏற்பட்டது.
மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிகொடுத்து, உடலில் பலத்த காயங்களுடன் இன்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அவர்களை கண்ட சக மீனவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர்.
இதேபோல், வேதாரண்யம் அடுத்துள்ள பெருமாள்பேட்டை கிராமத்தை சேர்ந்த குமார், லட்சுமணன், ஜெகன் ஆகிய 3 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வலை, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பொருட்களையும் இழந்து, உடலில் காயங்களுடன் இன்று காலை பெருமாள்பேட்டை மீனவர்கள் 3 பேரும் கரை திரும்பினர். பின்னர் நடந்தது குறித்து சக மீனவர்களிடம் கூறி வேதனை தெரிவித்தனர்.
காற்றழுத்த தாழ்வு பகுதி, கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த நாகை மீனவர்கள் நேற்று முன்தினம் மீண்டும் கடலுக்கு சென்றனர். அவ்வாறு சென்ற மீனவர்களை அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடம் இருந்த பொருட்களையும் பறித்த சம்பவம் கோடியக்கரை மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
- இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
- அக்கம்பக்கத்தினர் உடனே கவியழகனை மீட்டு ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செம்பியன்மகாதேவியை சேர்ந்தவர் முருகதாஸ்.
இவரது மகன் கவியழகன் (வயது 13). இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நள்ளிரவு முருகதாஸ் குடும்பத்தினருடன் தனது கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் மாணவன் கவியழகன் இடிபாடுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனே கவியழகனை மீட்டு ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கவியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மதியழகன், அவரது மற்றொரு மகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.
- ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியின் பிடி இருக்கிறது.
நாகப்பட்டினம்:
நாகையில் இன்று மதியம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மதுரை பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய டங்ஸ்டன் சுரங்கம் அமைவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.
ஆனால், நாங்கள் இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். வருகிற 12-ந்தேதி டெல்லி செல்கிறோம். திரும்பி வரும்போது நிச்சயம் வெற்றி செய்தியோடு வருவோம் என்றார்.
தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மேடை ஏறி முதலமைச்சர் குறித்து பேசி உள்ளார். இதனை கேட்ட மக்கள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியின் பிடி இருக்கிறது.
மன்னர் ஆட்சி என்றால் தந்தைக்கு பின்னால் மகன், மகனுக்கு பின்னால் மகன் என்பது தான். அவர்களை துடைத்தெரியும் காலம் வந்துவிட்டது. ஆதவ் அர்ஜுனா பேச்சும், வி.சி.க. தலைவர் பேச்சும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மூங்கிலால் கட்டபட்ட மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய படகு கரை ஒதுங்கியுள்ளது.
- புயலால் கரை தட்டியதா என விசாரணை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் புஷ்பவனம் மீனவ கிராமத்தில், இன்று காலை 8 மணியளவில் மியன்மார் நாட்டை சேர்ந்த மூங்கிலால் கட்டபட்ட மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய படகு கரை ஒதுங்கியுள்ளது.
இந்த மூங்கில் படகு 40 அடி நீளம், 15 அடி அகலம், 8 அடி உயரம் கொண்டதாகவும் சுமார் 150 மூங்கல்க ளால் கட்டபட்டுள்ளது. மழை நேரங்களில் தங்குவதற்கு ஏற்றார் போல் 6 அடி நீளம் 4 அடி அகலம் 4 அடி உயரம் கொண்ட ஓலையால் ஆன கூரை ஒன்றும் உள்ளது.
இந்த படகில் மீன் பிடிக்க பயன்படுத்த கோழி தீவனம் 2 மூட்டை சுமார் 30 கிலோ உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் வேதாரணியம் கடலோர காவல் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேதாரணியம் கடலோர காவல் குழுவின் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரலட்சுமி, சுதாகர் மற்றும் போலீசார் படகை கைப்பற்றினர்.
பின்னர் அந்த படகில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் வந்தார்களா அல்லது புயலால் கரை தட்டியதா என விசாரித்து வருகின்றனர்.
- இலங்கை நாடுகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டம்.
- சுமார் 250 நபர்கள் பயணிக்கும் வகையில் இயக்க திட்டமிட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
இந்தியா, இலங்கை நாடுகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 10-ந்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கப்பல் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் பயணிகள், கப்பலை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இதன் காரணமாக நாகையில் இருந்து இலங்கைக்கு கூடுதலாக ஒரு கப்பல் இயக்க வேண்டும் என இந்தியா, இலங்கை நாட்டு வர்த்தகர்களிடையே கோரிக்கை எழுந்தது.
இதனை பரிசீலித்த சிவகங்கை கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம், அவர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதல் சுமார் 250 நபர்கள் பயணிக்கும் வகையில் மேலும் ஒரு புதிய கப்பலை நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இயக்க திட்டமிட்டு உள்ளது.
இத்தகவலை நாகையில் நடந்த நாட்டிலஸ் ஷிப்பிங் கருத்தரங்க கூட்டத்தில் சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்தது.
அப்போது கடல்சார் துறையில் உள்ள வேலைவாய்ப்பு பணிகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் அதற்கான சிறந்த ஊதியம் உள்ளிட்டவைகள் குறித்து, மாலுமிகள், என்ஜினீயர்கள், பயனாளர்கள் மத்தியில் நாட்டிலஸ் ஷிப்பிங் நிறுவன கேப்டன், ஆர்.கே.சிங் மற்றும் சுபம் கப்பல் நிறுவன பொறுப்பாளர் கீதா ராஜராஜன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
மேலும், கடல்சார் கல்வி மற்றும் பயிற்சியை முடித்த உள்ளூர் கடலோடிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு சுற்றுலா மற்றும் வர்த்தக கப்பல்களில் வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
- இந்திய எல்லையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பாய்மர கப்பல் நின்று கொண்டிருந்தது.
- மியான்மர் மீனவர்களிடம் இருந்து பாய்மர படகு பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கடல்பகுதியில் இந்திய கடற்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது இந்திய எல்லையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பாய்மர கப்பல் நின்று கொண்டிருந்தது. உடனே கடற்படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பாய்மர கப்பலை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அதில் 4 மீனவர்கள் இருந்தனர்.
இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், மியான்மர் நாட்டை சேர்ந்த விம்சோ, ஹான் சோ, கிய் லூரின், லங்சன் ஏஜ் என்பதும், எல்லை தாண்டி இந்திய எல்லையில் மீன் பிடித்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து நாகை துறைமுகத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது 'இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னையில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட உள்ளனர். மேலும் பாய்மர படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2 மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாப்பாக தார்பாய், பனை மட்டைகளைக் கொண்டு பாதுகாத்து வந்தனர்.
- பாக்கெட் போட்டும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. 2 மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாப்பாக தார்பாய், பனை மட்டைகளைக் கொண்டு பாதுகாத்து வந்தனர்.
கடந்த ஒரு மாதமாக காலமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்ததால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் உப்பளங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் உப்பளங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது. கடந்த மாதம் 20-ந் தேதிக்கு முன்பு பெய்த மழையால் நிறுத்தப்பட்ட உப்பு ஏற்றுமதி கடந்த 22-ம் தேதி மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
2 நாள் இடைவெளியில் 23-ம் தேதி மழை துவங்கிய நிலையில் 5 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் உப்பு ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மழை பெய்து ஓய்ந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு தற்போது சேமித்து வைத்துள்ள உப்பை வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதல் வேதாரண்யம் பகுதியில் வெயில் அடித்து வருவதால் சேமித்து வைத்துள்ள உப்பை சாக்கு மூட்டைகளில் அடைத்தும், பாக்கெட் போட்டும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உப்பு ஏற்றுமதி ஒரு வார காலத்திற்குப் பிறகு துவங்குவதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறுகிறது.
இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நாகையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை குறித்து அறிவித்தார்.
- நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் அறிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் அறிவித்துள்ளார்.
தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை.
- வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிப்பு.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலியால் நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- திமுக கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி; மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய கூட்டணி.
- 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என்றார்.
நாகை:
நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க. கூட்டணி உடையாதா என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி; மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி.
கடந்த 3 நாட்களுக்கு முன் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கூட்டணிக்கு சேர்பவர்கள் ரூ.200 கோடி கேட்கிறார்கள்; 20 சீட் கேட்கிறார்கள் என கூறுகிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர்.
இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதாலும் அவருக்கு வயிற்றெரிச்சல்.
வரும் 2026 தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை மக்கள் அளித்தார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என தெரிவித்தார்.
- 3000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- கடலுக்கு செல்லாததால் வருமானம் இன்றி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும், கடலில் கடும் அலை சீற்றம் மற்றும் இடி மின்னல் ஏற்பட கூடும் என்பதாலும் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதனால் கடந்த 4 நாட்களாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் இன்று 5-வது நாளாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அக்கரை பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நம்பியார் நகர், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். 3000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 5 நாட்களாக கடலுக்கு செல்லாததால் வருமானம் இன்றி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.






