என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சோழர் கால செப்பு பட்டயத்தை வைத்து சொத்தை மீட்ட முதியவர்
- எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.
- பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே திருச்செங்காட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 70). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.
அதில், தனது பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பெயரில் மடம் இருந்தது. இந்த மடம் மற்றும் அப்பகுதியில் உள்ள இடத்தை நாங்கள் பல தலைமுறையாக அனுபவித்து வந்தோம்.
இந்த நிலையில் அந்த மடத்தை 1996-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெயரில் வகைமாற்றம் செய்து பெயர்மாற்றம் செய்துள்ளனர். காலப்போக்கில் இதை நான் அறிந்தேன். எனவே எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர், அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு நாகை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையில் விசாரிக்கப்பட்டது. இதில் மூலப்பத்திரம் உள்ளிட்ட சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.
ஆனால் ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்த சோழர் கால செப்பு பட்டயத்தை சமர்ப்பித்தார். இந்த செப்பு பட்டயத்தை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையிலான குழுவினர் அலுவலகத்தில் இருந்த ஆவண குறிப்புகளை வைத்து சோதனை செய்தனர்.
இதில் ராதாகிருஷ்ணன் கொடுத்த சோழர் கால செப்பு பட்டயத்தை ஆதாரமாக ஏற்று அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கு சாதகமாக அரங்கநாதன் தீர்ப்பு வழங்கினார்.
இதனையடுத்து உரிய முறையில் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகத்திற்கு ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.






