என் மலர்
நாகப்பட்டினம்
- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
- எந்த கட்சியும் கவுரவம் பார்க்க வேண்டாம். கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.
நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
* இதில் எந்த கட்சியும் கவுரவம் பார்க்க வேண்டாம். கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.
* அனைத்து கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்க கூடாது.
* தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை பறிக்க பார்க்கிறது பா.ஜ.க.
* பிள்ளைப்பேற்றை தள்ளிப்போடாமல் குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள்.
* மக்கள்தொகை அதிகரித்தால் தான் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரும் என்று திருமண விழாவில் மணமக்களுக்கு அவர் அறிவுரை கூறினார்.
- கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- 105 பஸ் போக்குவரத்துகளையும் தொடங்கி வைத்தார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அப்படி செல்லும் போது 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு தி.மு.க.வினரை தயார்படுத்தும் வகையில் கட்சி பணிகளையும் மேற்கொள்கிறார்.
ஆட்சிப்பணி, கட்சிப்பணி இரண்டையும் ஒருங்கே செய்து வரும் அவரது நடவடிக்கைகள் தி.மு.க. வினரையும், அதிகாரிகளையும் சுறுசுறுப்பாக மாற்றி உள்ளது.
அந்த வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். பிறகு அவர் திருச்சியில் இருந்து காரில் நாகை மாவட்டத்துக்கு சென்றார்.
நாகை மாவட்ட எல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அவர் அங்கு அரசு சுற்றுலா மாளிகையில் இரவில் தங்கி ஓய்வு எடுத்தார்.
இன்று (திங்கட்கிழமை) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்காக அவர் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
நாகை தம்பித்துரை பூங்காவில் இருந்து புத்தூர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.
சில இடங்களில் அவர் சாலையில் நடந்து சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். மக்களிடம் அவர் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
அதன்பிறகு நாகையில் நடந்த விழாவில் 38 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 700 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 105 பஸ் போக்குவரத்துகளையும் தொடங்கி வைத்தார்.
முன்னதாக நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் நாகையில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. கட்சி அலுவலகமான தளபதி அறிவாலயத்தையும் திறந்து வைத்தார்.
- அமைச்சர் அன்பில் மகேஷ் நாகை நகராட்சியில் உள்ள நடராஜன் தமயந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
- என்ன படித்தீர்களோ அதை தான் கேட்கப்போகிறார்கள்... பதட்டமில்லாமல் ஹாப்பியா எழுதுங்கள்.
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாகை நகராட்சியில் உள்ள நடராஜன் தமயந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதையடுத்து தேர்வெழுதும் மாணவ-மாணவிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
குட்மார்னிங்..
டென்ஷன் இல்லாமல் எழுத வேண்டும்.
என்ன படித்தீர்களோ அதை தான் கேட்கப்போகிறார்கள்... பதட்டமில்லாமல் ஹாப்பியா எழுதுங்கள்.
முதலமைச்சரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். உற்சாகமாக எழுதுங்கள்.. நல்லா எழுதுங்க.. ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்தினார்.
- கடல் உள்பகுதியில் சீற்றமாக காணப்படுகிறது.
- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்களில் கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
மேலும் கடல் உள்பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் இன்று 3-வது நாளாகமீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக வாவல் காலா, ஷீலா, திருக்கை, நண்டு, இறால் உள்ளிட்டஅனைத்து வகையான மீன்களும் கிடைத்து வந்தன. மீனவர்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது.
இதனால் அதிகப்படியான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்தனர். இந்நிலையில் 3 நாட்களாக கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வில்லை.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- பக்தர்கள் சிவகோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. 12 ஜோதி லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் 8-ம் நாளான நேற்று காலை நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி எழுந்தருளினார். மாலையில் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்தனர்.
சிவராத்திரியான இன்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு ராமநாத சுவாமிக்கும்-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றன. தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றன.
சிகர நிகழ்ச்சியான மகாசிவராத்திரி தேரோட்டம் காலை 9 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிவகோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு சுவாமி-அம்பாள் மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளி ரதத்தில் வீதி உலா வருகின்றனர். நாளை (27-ந்தேதி) காலை இந்திர விமானத்தில் வீதி உலாவும், பிற்பகல், மாலையில் தங்க ரிஷப வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளு கின்றனர்.
28-ந்தேதி இரவு பிச்சாடனர் எழுந்தருளர் நிகழ்ச்சியும், 1-ந்தேதி சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் பாரதி, செயல் அலுவலர் சிவராம்குமார், உதவி ஆணையர் ரவீந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் கோவில் நடை இரவு முழுவதும் திறந்திருக்கும்.
- மார்ச் 1-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும்.
- சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியா பாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ந்தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன்துறைமுகத்துக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. வாரத்தில் 2 நாட்களுக்கு கப்பல் இயக்கப்பட்டு வந்தது.
பின்னர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 7.30 மணிக்கு நாகையில் கிளம்பி 11.30 மணிக்கு காங்கேசன் துறைமுகத்தை அடையும் கப்பல், அங்கிருந்து மறுமார்க்கத்தில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு நாகையை வந்தடைந்தது. இதனை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 28-ந்தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படியே நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசி வருகிறது.
மோசனமான வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இன்று 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், மார்ச் 1-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகை-இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
- அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது.
சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து கடந்த 12-ந்தேதி முதல் மீண்டும் தொடங்க இருந்தது. ஆனால், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது. காலை தொடங்கிய கப்பல் சேவையை மும்மதத்தை சேர்ந்தவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த கப்பலில் 83 பயணிகள் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தனர்.
- 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
- கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு(2024) நவம்பர் மாதம் 18-ந் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மீண்டும் கப்பல் போக்குவரத்து கடந்த மாதம்(ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சனைகள் நீடித்து வந்ததால் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பிரச்சனைகள் அனைத்துக்கும் விரைவில் தீர்வு காணப்பட்டு கப்பல் சேவை தொடங்கப்படும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 22-ந் தேதி(சனிக்கிழமை) மீண்டும் தொடங்கப்படும் என கப்பலை இயக்கும் சுபம் நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நாகை-இலங்கை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் கப்பல் போக்குவரத்து நடைபெறும். பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம். கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
- நாகை புத்தூர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் இல்ல திருமண விழா, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தி.மு.க. மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
முதலமைச்சர் வருகையை யொட்டி நாகை புத்தூர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விழா முன்னேற்பாடு பணிகளிலும் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பணிகள் நடைபெறுவதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது முன்னேற்பாடுகள் குறித்தும், போலீசார் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
- சுற்றுசுவர் அமைக்க பள்ளம்தோண்டிய போது சுமார் 3 அடி ஒரு அங்குலம் உயரம் கொண்ட ஜம்பொன் அம்மன் சிலை கிடைத்தது.
- கோவில் வளாகத்தில் இன்று மீண்டும் ஏதாவது சிலை உள்ளதா என தோண்டி பார்க்க உள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மருதூர் தெற்கில் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக கோவில் புதுபித்து கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அங்கு பணியாளர் சுற்றுசுவர் அமைக்க பள்ளம்தோண்டிய போது சுமார் 3 அடி ஒரு அங்குலம் உயரம் கொண்ட ஜம்பொன் அம்மன் சிலை கிடைத்தது.
இது குறித்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிந்து அங்கு ஒன்று கூடி சிலையை எடுத்து அபிஷேகம் செய்து கோவில் வளாகத்தில் வைத்து உள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வருவாய்துறையினர் வந்து சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கோவில் நிர்வாக அலுவலர் சக்தி கணேசன், எழுத்தர் கார்த்தி, மற்றும் வாய்மேடு போலீசார், வருவாய் துறையினர் கோவில் வளாகத்தில் இன்று மீண்டும் ஏதாவது சிலை உள்ளதா என தோண்டி பார்க்க உள்ளனர்.
- 15 மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
- சிலம்ப கம்பில் எல்.இ.டி. விளக்கு பொருத்தி சிலம்பம் சுற்றினர்.
நாகப்பட்டினம்:
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் நாகை வீர தமிழன் சிலம்பம் கலைக்கூடம் சார்பாக நாகை அடுத்த பாப்பா கோவில் தனியார் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாகை,வேலூர், திருச்சி,தஞ்சை, சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தொடர்ந்து இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர். அப்போது அவர்கள் சிலம்ப கம்பில் எல்.இ.டி. விளக்கு பொருத்தி சிலம்பம் சுற்றினர்.
நாகை வீர தமிழன் சிலம்ப கலைக்கூடத்தின் ஆசான் சரவணன் கூறும்போது,போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கு பெற செய்ததற்கான முக்கிய காரணம் இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம் போதையில்லா சமுதாயம் உருவாகிடவும், போதையினால் ஏற்படும் தீமைகளை மாணவர் பருவத்திலேயே அவர்களுக்கு விதைப்பதன் மூலம் அதன் தீமைகளை குறித்து அவர்கள் அறிந்து கொள்வதோடு சமுதாயத்திற்கும் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கிங்காங் பங்கு பெற்று மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இடைவிடாமல் 3 மணி நேரம் நடைபெற்ற போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேர்ல்ட் ஸ்டார் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு அசோசியேஷன் செகரட்டரி பிரபாகரன் நேரில் பார்வையிட்டு பதிவு செய்தார்.
- பல மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீட்டு தொகை வழங்காததாக தெரிகிறது.
- இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். இயங்கி வருகிறது.
இந்த நிலையில், ஆலை தொடங்கும் போது சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர், ஆலையின் விரிவாக்க பணிக்காக 618 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர், சாகுபடிதாரர்கள், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் பயனாளிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீட்டு தொகை வழங்காததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பனங்குடி கிராம மக்கள் உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பனங்குடி சி.பி.சி.எல். குடியிருப்பு வளாகம் முன்பு இன்று (திங்கட்கிழமை) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த ஆலை ஆந்திராவிற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆந்திராவிற்கு மாற்றக்கூடாது பனங்குடியிலேயே இயங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






