என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
    • காயமடைந்த தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான எஞ்சின், ஜிபிஎஸ், 2 செல்போன்கள், பேட்டரி மற்றும் 30 கிலோ மீன்களை பறித்துச் சென்றனர்.

    • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவு நாளான நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த மாநாடு அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராஜன் கிஸ்சி சாகர் தலைமையில் நடைபெறுகிறது. இதன் தொடக்க நாளில் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேரளா வேளாண்மை துறை அமைச்சர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், செல்வராஜ் எம்.பி. மற்றும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அத்தகைய போராட்டம் நடக்காத அளவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். வேளாண் துறைக்கு தனிபட்ஜெட் அறிவித்தார். பயிர்க்காப்பீடு திட்டம், நெல் கொள்முதல் ஊக்கத்தொகை தந்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தந்து விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார். கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகளை செய்து தந்துள்ளார்.

    தமிழகத்தில் விவசாயிகள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை முதல்-அமைச்சர் உருவாக்கி கொடுத்துள்ளார். அதனால் தான் தமிழகத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒரு கட்சி மீது குற்றம் சாட்டும் அரசியல்வாதி அவர் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும்.
    • தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் மன்னிப்பது தான் தமிழனின் பண்பு.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 30-வது தேசிய மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு பணிகள் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.

    இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே பா.ஜ.க.வுடன் எக்காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, கூட்டணி வைக்கப்போவதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூறி வந்தனர்.

    ஆனால் திடீரென பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து இதுதான் விடியல் கூட்டணி என்றும், இந்த கூட்டணியால் தான் மக்களுக்கு எதையும் செய்ய முடியும். அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் அதை எதிர்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இந்த கூட்டணி அ.தி.மு.க தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை.

    நிர்பந்தம், அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். சரத்பவார் கட்சி, சிவசேனா கட்சியின் நிலை என்ன ஆனது. பா.ஜ.க தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை நயவஞ்சகமாக அழித்துவிடும். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் மத்திய அரசை தமிழக மக்களே எதிர்க்கின்றனர்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஊழல் குறித்து அண்ணாமலை பேசினார். இன்று கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அ.தி.மு.க.வினர் ஊழல் செய்யவில்லை என பேசுவார்களா?.

    ஒரு கட்சி மீது குற்றம் சாட்டும் அரசியல்வாதி அவர் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அ.தி.மு.க போன்ற கரை படிந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, ஊழல் பற்றி பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை. மேலும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் மன்னிப்பது தான் தமிழனின் பண்பு.

    ஆட்சி, அதிகாரத்தை பிடிக்கவே அனைவரும் அரசியல் கட்சி நடத்துகின்றனர். கம்யூனிஸ்டு கட்சியும் ஒரு நாள் தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளும். அப்போது கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் முதலமைச்சராகவும், பிரதமராகவும் ஆவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு இன்று கடைபிடிக்கப்பட்டது.
    • வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் 'கீழை நாடுகளின் லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.

    இத்தகைய பல்வேறு சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புனித பயணமாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

    இதனையொட்டி காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு உன்னதங்களிலே ஒசன்னா என பாடல்கள் பாடியவாறு பவனியாக சென்றனர்.

    பவனியானது பேராலயத்தின் முகப்பில் இருந்து தொடங்கி வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பேராலயத்தின் கீழ்க்கோவிலை அடைந்தது. தொடர்ந்து, பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    மேலும், பேராலயத்தில் கொங்கனி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்தனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

    • கட்சியினர், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    வருகிற 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், தமிழகத்தில் த.வெ.க. மற்றும் தி.மு.க. இடையே தான் போட்டி என கூறினார். இதனால் த.வெ.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து கட்சியினர், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தச்சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற வேண்டுதலோடு, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் த.வெ.க. தொண்டர் ஒருவர் கடும் வெயிலில் மணலில் முழங்காலால் மண்டியிட்டு 750 மீட்டர் தூரம் சென்று வழிபாடு செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த வீடியோவில் உள்ள நபர் சென்னை ஆலந்தூர், அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த த.வெ.க. கட்சியை சேர்ந்த தொண்டர் ஆறுமுகம் ஆவார். இவர் வேளாங்கண்ணி புதிய பேராலயத்தில் இருந்து, பழைய மாதா கோவில் சிலுவை பாதை வரை கடும் வெயிலில் முழங்காலால் மண்டியிட்டு சென்று வழிபாடு நடத்தினார். மேலும் அப்போது அவர் கையில் த.வெ.க. கட்சிக்கொடியை ஏந்தி சென்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்காக பிரார்த்தனையும் செய்தார்.

    அப்போது ஆறுமுகத்திற்கு சிலர் கைகுலுக்கி வாழ்த்தும் தெரிவித்தனர். இந்த காட்சிகள் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது.
    • சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார்.

    நாகப்பட்டினம்:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன்-தமயந்தி பள்ளியில் நேற்று காலை ஆங்கில பாடத்திற்கான தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்துவிட்டு கையொப்பம் பெற்றார்.

    அப்போது அங்கு தனித்தேர்வராக தேர்வு எழுதிய ஒரு பெண் முககவசம் அணிந்து இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணிடம் முககவசத்தை அகற்றும்படி கூறினார். பின்னர் நுழைவு சீட்டை சோதனை செய்து பார்த்தார்.

    அப்போது நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபரின் புகைப்படம் இருந்தது.

    இதனால் மேலும் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார். இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தனித்தேர்வு) முத்துச்சாமி, தேர்வு கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள், தேர்வு மையத்தில் பாதுகாப்பிற்கு இருந்த வெளிப்பாளையம் போலீசார் விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை வெளிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வாம்பிகை(வயது 25) என்பது தெரிய வந்தது.

    திருமணமான அவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரிய வந்தது. இதேபோல அவர் கடந்த 28-ந் தேதி நடந்த தமிழ் பாடதேர்வை முககவசம் அணிந்து எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தாய் சுகந்தி 10-ம் வகுப்பு தனித்தேர்விற்காக விண்ணப்பம் செய்துள்ளபோது, மகள் எதற்காக தேர்வு எழுத வந்தார்? என அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். தாய்க்காக ஆள்மாறாட்டம் செய்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறினர்.

    நாகப்பட்டினம்:

    இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர்.

    இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிறை தென்பட்டதை யொட்டி, இன்று (திங்கட்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள தர்காக்கள், பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் சில்லடி கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    தொழுகைக்கு பின், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறினர். தொழுகையில் பங்கேற்ற சிறுவர்களும் கைக்குழுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பும் வழங்கப்பட்டது.

    இதேபோல், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. 

    • கடந்த 5-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது.
    • பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    இந்த பேராலயத்தில் கடந்த 5-ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது. தவகாலத்தை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி 3-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.

    பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கலந்து கொண்டனர்.

    • ஒருவரை படகுடன் காணவில்லை, மற்றொருவர் நிலை தடுமாறி விழுந்தார்.
    • கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைப் பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 57). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்.

    நேற்று கண்ணதாசன் கரை திரும்பி இருக்க வேண்டும், ஆனால், அவர் கரை திரும்பவில்லை. பைபர் படகுடன் மாயமாகி விட்டார். இதையடுத்து அக்கரைப்பேட்டையில் இருந்து 5 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மாயமான கண்ணதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

    பின்னர், இதுகுறித்து மீன்வளத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறையினர் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவர்கள் கடலில் மாயமான கண்ணதாசனை கடற்படை கப்பல் மூலம் தேடி வருகின்றனர்.

    இதேபோல், நாகையை அடுத்துள்ள நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (52). இவர் கடந்த 14-ந்தேதி நாகை மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகில் 11 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.

    அப்போது ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாணிக்கம் நிலை தடுமாறி கடலில் விழுந்துவிட்டார். இதனை கண்ட விசைப்படகில் இருந்த சக மீனவர்கள் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, மீன்வளத்துறை தெரிவித்த தகவலின் பேரில் இந்திய கடற்படையினர் கடலில் தவறி விழுந்த மாணிக்கத்தை கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • தமிழ்நாட்டில் வளர்ச்சி, தமிழ் மொழியின் சிறப்பு சிலரது கண்களை உறுத்துகிறது.
    • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.

    நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுவதால் எல்லா புள்ளி விவரங்களிலும் முன்னிலையில் உள்ளது.

    * தமிழ்நாட்டில் வளர்ச்சி, தமிழ் மொழியின் சிறப்பு சிலரது கண்களை உறுத்துகிறது.

    * ஆங்கிலம் கற்றதால் தான் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உள்ளனர். இந்தியை கற்பதால் என்ன பயன்?

    * தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.

    * சுயநலத்திற்காக தமிழகத்தின் எதிர்காலத்தை அடகு வைக்காமல் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள்.

    * அரசியல் வேறுபாடுகளை களைந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள் என்று மீண்டும் அவர் அழைப்பு விடுத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போதெல்லாம் கைது செய்யும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அபராதமும் விதிக்கிறது.
    • தமிழக மீனவர்களின் நலனை நிலைநாட்டும் வகையில் உறுதியான நடவடிக்கை தேவை.

    நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 3,000-க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    * தற்போதெல்லாம் கைது செய்யும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அபராதமும் விதிக்கிறது.

    * மீனவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக தொடர முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

    * சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * தமிழக மீனவர்களின் நலனை நிலைநாட்டும் வகையில் உறுதியான நடவடிக்கை தேவை.

    * மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    * மீனவர் பிரச்சனையை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

    * ஒவ்வொரு பிரச்சனைகளிலும் தமிழக அரசு போராடிக்கொண்டு தான் இருக்கிறது என்று கூறினார்.

    • நாகப்பட்டினம் நகராட்சி கட்டிடம் ரூ. 4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
    • இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    13 பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் ஏராளமானார் பலன் அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

    வேதாரண்யம் தலைஞாயிறு பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை 420 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். விழுந்தமாவடி, வானமா மாகாதேவி பகுதிகளில் ரூ. 12 கோடி மதிப்பில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும். 3 பல்நோக்கு பஸ் நிலையம் அமைக்கப்படும்.

    நாகப்பட்டினம் நகராட்சி கட்டிடம் ரூ. 4 கோடி செலவில் புனரமைக்கப்படும். நாகையில் 3 தளங்கள் கொண்ட பேரிடர் மையங்கள் அமைக்கப்படும். ரூ. 65 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் சென்னையில் அமைக்கப்படும்.

    இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இயற்கை பேரிடர் நிதியை கூட மத்திய அரசு தருவதில்லை. பள்ளிக்கல்வி க்கான நிதியையும் தருவதில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தருவோம் என்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி, தனித்துவம் பிடிக்காததால் இப்படி செய்கிறார்கள்.

    இந்தி திணிப்பை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். குழந்தைகள் கூட தங்களது சேமிப்பை கல்வி நிதிக்கு தருகிறார்கள். அவர்களது இந்த செயலை காணும் போது கண் கலங்குகிறது.

    தமிழ்நாடு முன்னேறியதற்கு இரு மொழி கொள்கைதான் காரணம். மக்களின் துணையோடு தமிழ்நாட்டின் உரிமையை நான் மீட்பேன். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதிகளை மத்திய அரசு குறைக்கப் பார்க்கிறது. எனவே நாளை மறுநாள் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×