என் மலர்
நாகப்பட்டினம்
- வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
- கொடூர தாக்குதலில் மீனவர்கள் செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 4 படகில் இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். திடீரென அவர்கள் 3 படகையும் வழிமறித்து மீனவர்களை சரமாரியாக தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை உடன் வந்த சக மீனவர்கள் மீட்டு கரைக்கு திரும்பி நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். உடனே இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
- சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் நாளை முதல் 11-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக "நாகை வாசிக்கிறது" எனும் மாபெரும் வாசிப்பு இயக்கத்தை நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நம்பியார் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து அவர்கள் புத்தகம் வாசிப்பதை ஆர்வமுடன் பார்வையிட்டார்.
பின்னர் அவரும் மாணவர்களோடு சேர்ந்து புத்தகம் படித்து மகிழ்ந்தார்.
அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டு "நாகை வாசிக்கிறது" எனும் நிகழ்வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.
நம்பியார் நகர் நகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் துரைமுருகு, வட்டாரக்கல்வி அலுவலர்கள் மணி, விமலா, கண்ணன், தலைமை ஆசிரியை உலகாம்பிகை உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின்.
- பிறக்கும் குழந்தைகூட ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுடன்தான் பிறக்கிறது.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "4 ஆண்டுகளாக திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற நாடகம் அரங்கேற்றம் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று கட்சியில் சேர சொல்லி கேட்கிறார்கள். கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின். கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிறக்கும் குழந்தைகூட ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுடன்தான் பிறக்கிறது. கொரோனா காலத்தில்கூட விலைவாசி உயராமல் அதிமுக ஆட்சியில் பார்த்துக் கொண்டோம்" என்று கூறினார்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை அறிவிக்கும் பாங்கு ஒலித்த சத்தம் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மக்களிடம் உரையாற்றினார்.
பாங்கு ஓதப்பட்டு முடிந்த பிறகு தொண்டர்கள் அவரிடம் நினைவு படுத்தியதை அடுத்து மேடையிலேயே எடப்பாடி பழனிசாமி மன்னிப்புக் கேட்டார்.
- விவசாய நிலங்களை பாதுகாத்தது அதிமுக.
- மீண்டும் அம்மா ஆட்சி வரும், அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.
கீழ்வேளூர்:
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் மற்றும் திருவாரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அமோக வரவேற்பு கொடுத்த கீழ்வேளூர் தொகுதி மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், '
'விவசாயத்தை நம்பித்தான் உங்கள் வாழ்க்கை உள்ளது. உங்களுக்காக நிறைய திட்டங்கள் கொண்டுவந்தோம். பார்த்து பார்த்து செய்துகொடுத்தோம். ஆனால், ஸ்டாலின் அரசோ மீத்தேன் எடுப்பதற்கு விளை நிலங்களை பறிக்க கையெழுத்து போட்டது. அப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றினோம். இனி எவராலும் உங்கள் நிலத்தைப் பறிக்க முடியாது. விவசாய நிலங்களை பாதுகாத்தது அதிமுக.
எல்லா துறையிலும் ஊழல். டாஸ்மாக்கில் ஊழல் முதலில் 1000 கோடி என்றார்கள். இப்போது 40 ஆயிரம் கோடி என்கிறார்கள். இந்த ஆட்சியின் ஒரே சாதனை கொள்ளை அடித்ததுதான். சபரீசனும் உதயநிதியும் 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்ததாக திமுக அமைச்சரே சொன்னார். உண்மைதான். டாஸ்மாக்கில் மட்டும் வருஷத்துக்கு 5,400 கோடி ஊழல், யாரு வாங்குறது செந்தில் பாலாஜி, இப்பவும் கூட வாங்குறார்.
அடுத்த ஆண்டு தேர்தல் நேரத்தில் பல பேர் எங்கே இருக்கணுமோ அங்கே இருப்பாங்க. அதிமுகவை அவதூறாக பேசுறீங்க, எம்ஜிஆர் தொடங்கிய அம்மா கட்டிக்காத்த புனிதமான இயக்கம். எங்க கட்சியில் வாரிசு அரசியல் இல்லை. இந்தியாவில் மன்னராட்சி ஒழித்தாச்சு, திமுகவில் கொண்டுவந்துட்டாங்க. பதவியை உங்களுக்கு யாரும் பட்டா போட்டு கொடுத்தாங்களா? அதிமுக ஜனநாயகம் உள்ள கட்சி. விசுவாசமாக உள்ள யார் வேண்டுமானலும் வரலாம். திமுகவிலும் அப்படி யாராக இருந்தாலும் முதல்வராக முடியும் என்று ஒருவார்த்தை சொல்லுங்கள் பார்ப்போம். குடும்பம்தான் கட்சி, கட்சிதான் குடும்பம்.
ஸ்டாலினே இதனை ஒப்புக்கொண்டார். திமுகவில் இருக்கும் எல்லோரும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திடுவாங்க, இன்பநிதி வந்தாலும் ஏத்துபாங்க அப்படி இருந்தாத்தான் பதவி கொடுப்பாங்க. திமுக கம்பெனியில் கோடி கோடியா பணம் குவியுது.
அதிமுக ஆட்சியில் ஆடு, மாடு, கோழி இலவசமாகக் கொடுத்தோம். பசுமை வீடு கொடுத்தோம். ஆனால், எங்களை எப்படியெல்லாம் எங்களை துன்பப்படுத்தினீங்க..? சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்கும்போது என்னுடைய டேபிளில் வந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் டான்ஸ் ஆடினார்கள். சபாநாயகர் இருக்கையில் அவரை எழுப்பிவிட்டு திமுகவினர் அமர்ந்தனர். ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே போனார்.
அடுத்த ஆண்டு அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும். முன்பு சட்டையை கிழிச்சீங்க… அடுத்து எதை கிழிப்பீங்கனு தெரியலை. எங்க கட்சி நல்லாத்தான் இருக்கு, இது தொண்டர்கள் நிறைந்த கட்சி. எங்க ஆளுங்களை எட்டப்பன் மாதிரி விலைக்கு வாங்கி தொல்லை கொடுத்தீர்கள்.
டிஎன்பிஎஸ்சியில் ஊழல். இந்த ஆட்சியில் எல்லாவற்றிலும் ஊழல். 5.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். ஆனால் வெறுமனே 50 ஆயிரம் பேர் தான் நிரப்பினாங்க. ஒரே மாதத்தில் 20 ஆயிரம் பேர் ஓய்வு, 4 வருடத்தில் 70 ஆயிரம் பேர் ஓய்வு. 5 லட்சத்து 75 ஆயிரம் பணியிடம் இன்னும் காலியாக இருக்கு. சொல்வதெல்லாம் பொய். அதிமுக ஆட்சியில் நிச்சயம் விசாரணை நடத்தப்படும். அதிகாரிகள் தவறு செய்தால் அவ்வளவுதான்.
விலைவாசி ஒப்பிட்டுப் பாருங்க. பச்சரிசி அரிசி 77, புழுங்கல் அரிசி 72, இட்லி அரிசி 48, கடலை எண்ணெய் 190, நல்லெண்ணை 400, துபருப்பு 130, உபருப்பு 120, ஆக இப்படி விலைவாசி அதிகமாக இருந்தால் மக்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? கட்டுமானப் பொருள்கள் விலையும் விண்ணைத் தொட்டுவிட்டது. கனவில்தான் வீடு கட்ட முடியும். இத்தொழில் ஈடுபட்டவங்க வேலையில்லாமல் இருக்காங்க.
அதுமட்டுமல்ல, கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி ஆரம்பிச்சாங்க, இதுவரை கட்டடமே கட்டலை, அதனால் மாணவர்கள் வெவ்வேறு இடத்துல படிக்கிறாங்க. அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செய்தோம். மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், சட்டக் கல்லூரி என நிறைய கொடுத்தோம். கிராம மக்கள் ஆங்காங்கே சிகிச்சை பெற அம்மா மினி கிளினிக் கொண்டுவந்தோம், அது பொறுக்க முடியலை. மீண்டும் அம்மா ஆட்சி வரும், அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.
கல்வித்துறை அமைச்சர் சொல்றார், எடப்பாடி நிறைய மேல்நிலைப் பள்ளி திறந்துவிட்டார் என்கிறார். மாணவர் குறைவாக இருந்தாலும் மேல்நிலை பள்ளி துவக்கினோம். கல்வி கற்கத் தானே திறந்தோம், மக்களுக்குத் தேவை, கேட்டாங்க கொடுத்தோம் இதுல என்ன தப்பு? கிராம மாணவர்கள் பயன்பெறுவதற்கு 7.5% உள் இடஒதுக்கீடு கொடுத்தோம், 2818 பேர் மருத்துவர் ஆகிட்டாங்க. ஏழைகளுக்காக கொடுத்தோம். முதல் செட் மாணவர்கள் மருத்துவர் ஆகிட்டாங்க, அவங்க என்கிட்ட வந்து நன்றி சொன்னார்கள்.
நிறைய விவசாயக் கருவிகள் கொடுத்தோம், அதிலேயும் இந்த ஆட்சியில் ஊழல். லஞ்சம் கொடுப்பவர்களுக்கு டிராக்டர் கொடுக்குறாங்க. இதையெல்லாம் விசாரித்து தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயி வயிற்றில் அடிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். 20 துறைகளில் இருந்து எடுத்து வேளாண் என்று தனி பட்ஜெட் படிக்கிறார். மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இன்று உங்களுடன் ஸ்டாலின் என்று வருகிறார். 46 திட்டங்களை 45 நாட்களில் நிவர்த்தி செய்வாராம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி என்று திட்டம் கொண்டுவந்து, மனுக்களை வாங்கி ஆட்சிக்கு வந்து தீர்ப்பேன் என்றார். நாலு வருஷம் ஏன் தீர்க்கவில்லை? அப்புறம் எதுக்கு இந்த புதிய திட்டம்? ஸ்டாலின் ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றுகிறார்.
ஒரு முதல்வரே நாட்டு மக்களை ஏமாற்றுகிறார். இப்படி ஒரு முதல்வர் தேவையா? கீழ்வேளூர் அதிமுகவுக்கு கொடுக்கச் சொல்கிறார் ஓ.எஸ்.மணியன், உங்கள் எண்ணம் நிறைவேறும். அதிமுகவை நேசிக்கும் மக்கள் இருக்கிறீர்கள்.
கீழ்வேளூர் தொகுதியில், தடுப்பணைகள், குடிமராமத்து திட்டம், பிரமாண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரே ஆர்டரில் 11 மருத்துவக் கல்லூரி கொடுத்த ஆட்சி அதிமுகதான். இப்ப அந்த மருத்துவமனைகள் சரியில்லை, மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அப்போலோ மருத்துவமனையின் சிகிச்சை இதிலும் அளிக்கப்படும்.
அதிமுக அரசு மக்கள் அரசு. முடியட்டும் திமுக ஆட்சி, மலரட்டும் மக்கள் ஆட்சி. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின்".
இவ்வாறு அவர் பேசினார்.
- டால்பின் சுமார் 7 அடி நீளம், 150 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
- இறந்து கரை ஒதுங்கிய ராட்சத டால்பினை மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பாாத்து சென்றனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்பரப்பில் ஏராளமான டால்பின் மீன்கள் உள்ளன. இவை ஆழமான கடற்பரப்பில் மட்டுமல்லாமல் கரையோர பகுதிகளுக்கும் வந்து மீன்களை உண்பது வழக்கம்.
அந்த வகையில், மீன்பிடி சீசன் காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை ஓரத்தில் அதிகளவில் டால்பின் மீன்கள் காணப்படும். இந்நிலையில் இன்று அதிகாலை கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே ராட்சத டால்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் டால்பின் மீனை கடலோரத்தில் இருந்து கரைக்கு இழுத்து வந்தனர். தொடர்ந்து, வனத்துறையினர் கூறுகையில், இந்த டால்பின் சுமார் 7 அடி நீளம், 150 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
- மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர்.
- படுகாயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செந்தில், சுரேஷ் ஆகிய இருவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் பிடித்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனர்.
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
- சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. இரண்டு நாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், மேலும் வருகிற 16-ம் தேதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமான இன்று (14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி வரை நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
- தற்போது ஒரு டன் உப்பு ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வேதாரண்யம்:
தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.
இங்கு அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இங்கு உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் போதுமான உப்பு இருப்பு வைக்க முடியவில்லை.
தற்போது உற்பத்தி செய்யப்படும் உப்பை தினமும் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.
தற்போது ஒரு டன் உப்பு ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கத்தால் தீவிரமாக உப்பு உற்பத்தி நடந்தாலும் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவது கடினம் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
- சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 3 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்-அக்னீஸ்வரசாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் வாஸ்துக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு பூஜை செய்து வீடு கட்டுதல் மற்றும் கட்டிடங்கள் கட்டும்போது விரைவில் பணிகள் நிவிர்த்தி பெறும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் பழமையான இந்த கோவிலில் பக்தர்கள் வாஸ்துக்கான பூஜைகள் செய்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி சிவ வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து கடம்புறப்பாடு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 3 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
மேலும் 250 கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்துக்கள், ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, அப்படி எங்களை சொல்பவர்கள் இதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் சர்வ மதத்தினரையும் மதிக்கக்கூடியவர்கள் என்றார்.
- நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விசாரணைக்கு பின்னர் தான் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.
நாகப்பட்டினம்:
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் காவலர் அபிநயா. இவர் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் திடீரென பெண் காவலர் அபிநயா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்ததும் நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தாக்குதலில் மீனவர்கள் ஆனந்த், முரளி உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
- கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தை 17 மீனவர்கள் கடலில் 3 பிரிவுகளாக வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் பற்றிய விவரம் வருமாறு :-
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவர் உட்பட முரளி, சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் உள்ளிட்ட 5 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வேகமாக வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் திடீரென மீனவர்களை தாக்க தொடங்கினர்.
கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களிடம் இருந்து வலை, ஜி.பி.எஸ் கருவி, மீன்கள், செல்போன் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொள்ளையடித்துச் தப்பினர். இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் ஆனந்த், முரளி உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதேப்போல் மற்றொரு பகுதிகளில் தமிழக எல்லையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சக்திவேல், இளையராஜா உள்பட சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த பிரவீன், விஷால் உள்பட 5 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கி ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்தனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல்களில் நாகை மீனவர்கள் 17 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். பல லட்சம் மதிப்புள்ள ஜி.பி.எஸ் கருவிகள், செல்போன், வலை, மீன் உள்ளிட்ட பல்வேறு உபகரண பொருட்களையும் பறி கொடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 17 மீனவர்களும் இன்று அதிகாலை கரைக்கு திரும்பினர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நாகை கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- மே 2-வது வாரத்தில் 2-வது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
- வருகிற ஜூலை 15-ந் தேதி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கப்பல் பயணிகளுக்கு உதவிடும் வகையில் தற்போதைய கட்டணமான ரூ.8,500-ல் இருந்து ரூ. 8000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்களது உடைமைகளாக 10 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை 7 கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க உள்ளோம்.
இது தவிர ரூ.15,000-க்கு 2 இரவுகள் பயணம் உட்பட மூன்று நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், ரூ.30,000-க்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாக பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜ் திட்டத்தில் இருவழி பயண கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும்.
அதேபோல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை 15-ந் தேதி வாக்கில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
அதுபோல் மே 2-வது வாரத்தில் 2-வது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 250 இருக்கைகளில், 220 எக்கனாமிக் இருக்கைகளும், 20 பிசினஸ் இருக்கைகளும், 10 சூட் ரூம்கள் வசதியும் இருக்கும். வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் இந்த 2-வது கப்பல் போக்குவரத்தானது புயல் சின்னம் உருவாகும் காலத்தை தவிர்த்து, ஆண்டு முழுவதும் மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் வகையுடன் கூடிய தரத்தில் உருவாக்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






