என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகையில் வி‌ஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை நம்பியார் நகர் செல்லும் சாலையில் புதிய வீடு கட்டும் வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்று பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நாகை நகராட்சி ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டனர் நாகூர் அமிர்தா நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 38), நாகை காட்டு நாயக்கன் தெருவை சேர்ந்த சக்திவேல் (27) வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் (40) ஆகிய மூவரும் ஒருவர் பின் ஒருவராக பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தனர்.

    அப்போது பாதாள சாக்கடைக்குள் 3 பேருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர் மட்டும் மேலே ஏறிவந்து சத்தம் போட்டார். மாதவன், சக்திவேல் ஆகிய இருவரும் மேலே வரமுடியாமல் பாதாள சாக்கடை குழாய்க்குள் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் தீயணைப்புத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி சக்திவேல், மாதவன் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் வி‌ஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாதவன், சக்திவேலின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் அப்போது அவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் பணியாளர்களை பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்க வைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சங்கர், வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் மாதவன், உடல்களை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீதருக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வி‌ஷவாயு தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் நாகையில் சோகத்தை ஏற்படுத்தியது.

    வேதாரண்யம் அருகே கோடி முத்துமாரியம்மன் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கோடி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் மதில்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று 4 ஐம்பொன் சாமி சிலைகளை திருடி சென்றுவிட்டனர். இது கோடியக்கரை பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நேற்று மோப்பநாய் துலிப் மூம் போலீசார் துப்பு துலக்கினர். மேலும் கோடியக்கரையில் இளைஞர்களும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அவர்கள் கடற்கரையில் ஒரு துணி மூட்டையை கண்டெடுத்தனர். அதை அவிழ்த்து பார்த்தபோது சுவாமி சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட வஸ்திரங்கள் இருந்தன. அவை கொள்ளையர்கள் எடுத்து சென்றதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
    நாகை:

    இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    பின்னர் 139 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 32 லட்சத்து 78 ஆயிரத்து 346 ரூபாய் மதிப்பிலான வழங்கினார். பின்னர் சுதந்திர போரட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், துணை கண்காணிப்பாளர் முருகவேல் மற்றும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    மயிலாடுதுறை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மாப்படுகை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் நாகராஜ் (வயது 48). இவர் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார்கள் செல்வம், ராஜா ஆகியோரிடம் சித்தாளாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் தினமும் வேலை முடிந்து இரவு மது அருந்துவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாப்படுகை பகுதியில் உள்ள பிச்சுமணி என்பவரது வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்ட 3 பேரும் இரவு வேலை பார்த்தனர். பின்னர் வேலை முடிந்து மது பாட்டில்களை வாங்கி கொண்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது போதை தலைக்கேறிய 3 பேரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் நாகராஜ் கொத்தனார்கள் செல்வம், ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் நாகராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து கொலையை மறைப்பதற்காக மாப்படுகை ரெயில்வே கேட்பகுதி தண்டவாளத்தில் நாகராஜின் உடலை அவர் தற்கொலை செய்வது போல் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதையடுத்து இரவு 11 மணிக்கு அந்த ரெயில்வே தண்டவாளம் வழியாக வந்த கம்பன் விரைவு ரெயிலின் ஓட்டுனர் தண்டவாளத்தில் ஒருவர் படுத்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ரெயிலை அவசர அவசரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து பார்த்தார். அப்போது ஏற்கனவே கொலை செய்துவிட்டு உடலை தண்டவாளத்தில் போட்டிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மயிலாடு துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஒரு மணிநேரம் ரெயில் தாமதமானது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை தண்டவாளத்தில் இருந்து மீட்டனர். அதன்பின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது செல்வம், ராஜா என தெரியவந்தது.

    இதுகுறித்து மயிலாடு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம்,ராஜா ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட நாகராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பஞ்சவர்ணக்கிளி விற்ற தகராறில் சிறுவனை கடைக்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதுத் தெருவைச் சேர்ந்த ராஜ்கபூர் மகன் பரக்த்துல்லா (வயது 28). அதே பகுதியை சேர்ந்த முகமது அலியின் மகன் தாரிக் (வயது 29). இருவரும் பஞ்சவர்ணக்கிளி வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் வளர்த்து வந்த பஞ்சவர்ணக்கிளி காணாமல் போய் விட்டது. காணாமல் போன அந்த பஞ்சவர்ணக்கிளியை சிலர் கூண்டில் எடுத்து செல்வதை இருவரும் பார்த்துள்ளனர். இந்தக் கிளியை உங்களிடம் கொடுத்தது யார்? என்று கேட்டுள்ளனர். அப்போது திருவாரூர் மாவட்டம் கிரக கொண்டான் தாமரைக் குளத்தை சேர்ந்த முகம்மது அலி மகன் மன்சூர் அலிகான் (15) என்ற சிறுவன் தான் எங்களிடம் விலைக்கு விற்றுள்ளார் என்று கூறினார்.

    இதையடுத்து தாரிக், பரக்த்துல்லா இருவரும் மன்சூர் அலிகான் தேடி அலைந்தனர். அப்போது நாகை தம்பிதுரை பூங்கா அருகில் மன்சூர் அலிகானை பார்த்த இருவரும் சிறுவனை அருகில் உள்ள ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்று சிறுவனின் கை கால்களை கட்டி தாக்கியுள்ளனர். பின்னர் மன்சூர் அலிகானை கடையில் வைத்து பூட்டிவிட்டு சென்று விட்டனர். அப்போது அலறல் சத்தம் கேட்ட வெளியே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் கடையின் பூட்டை உடைத்து அந்த சிறுவனை மீட்டு நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் பரக்த்துல்லா, தாரிக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    நாகையில் விலையுயர்ந்த கிளியை திருடி விற்ற சிறுவனை கடத்தி ஜவுளிக்கடையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் மன்சூர் (வயது 15). இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிறுவன் மன்சூர் , நாகப்பட்டினத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் 2 பேர் விலையுயர்ந்த பஞ்சவர்ண கிளியை கொடுத்து விற்று தருமாறு கூறியுள்ளனர். இதை ஏற்று மன்சூரும் அந்த கிளியை விற்றுகொடுத்தார். அதற்கு கமி‌ஷனாக ரூ.300-ம் பெற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே கிளியின் உரிமையாளர் நாகை புதுத்தெருவை சேர்ந்த பரக்கத் அப்துல்லா (28) , காணாமல் போன கிளியை பற்றி விசாரித்தார். அப்போது சிறுவன் மன்சூர் கிளியை விற்றது தெரிய வந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பரக்கத் அப்துல்லா மற்றும் அவரது நண்பர் தாரிக் (28) ஆகியோர் சிறுவன் மன்சூரை கிடாரங்கொண்டானில் இருந்து காரில் கடத்தி வந்தனர்.

    பின்னர் நாகையில் அவர்களுக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் சிறுவன் மன்சூரை கொண்டு சென்றனர். அங்கு மன்சூரின் கை- கால்களை கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்தனர். இதனால் மன்சூர் வலி தாங்க முடியாமல் அலறினான்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர் , சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே மன்சூரை கட்டி வைத்து சிலர் தாக்குவதை கண்டு திடுக்கிட்டனர்.

    அப்போது அங்கிருந்தவர்கள் பொதுமக்கள் கூட்டத்தை பார்த்து தப்பி ஓடி விட்டனர்.

    உடனே இதுபற்றி நாகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுவன் மன்சூரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து நாகை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிறுவனை கடத்தி ஜவுளிக்கடையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கீழ்வேளூர் அருகே காதலனுடன் வசித்த பெண் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடியை சேர்ந்த சேப்பன் மகன் செல்வக்குமார் (வயது 33) இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் சகுந்தலா (வயது 22) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் செல்வகுமார் சகுந்தலாவை அழைத்துக் கொண்டு சாட்டியகுடிக்கு வந்து ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

    சகுந்தலா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் சகுந்தலா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகுந்தலா உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சகுந்தலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறையில் பர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட தனியார் பஸ்சை ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    மயிலாடுதுறை:

    சென்னையில் இருந்து மயிலாடுதுறை, பாண்டிச்சேரி வழியாக ராமேஸ்வரம் வரை செல்லக்கூடிய ஒரு தனியார் பஸ்சில் பயணிகள் நேற்று முன்பதிவு செய்து இருந்தனர். இரவு 9 மணிக்கு சென்னை எக்மோரில் இருந்து பஸ் புறப்படும் என தனியார் பஸ் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் பஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பயணிகள் கேட்டபோது மாற்று ஏற்பாடாக இரவு 11 மணிக்கு வேறு பஸ்சை தனியார் பஸ் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.

    இதையடுத்து அந்த பஸ்சில் முன்பதிவு செய்த பயணிகள் சுமார் 45 பேர் புறப்பட்டனர். அந்த பஸ் இன்று காலை நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு வந்தது. அப்போது மாற்று பஸ்சிற்கு உரிய பர்மிட், மற்றும் எந்த ஆவணமும் இல்லாமல் தனியார் பஸ் வந்ததாக தெரிகிறது. அந்த பஸ் மயிலாடுதுறை வந்தபோது ஆர்.டி.ஓ. பஸ்சை நிறுத்தி சோதனையிட்டார். அப்போது பஸ்சை உரிய பர்மிட் இல்லாமல் இயக்கியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள தனியார் பஸ் நிர்வாகத்தின் கிளை அலுவலகத்துக்கு பஸ்சை கொண்டு சென்று பஸ்சில் இருந்த 45 பயணிகளையும் இன்று காலை 6 மணியளவில் இறக்கி விட்டுவிட்டு பஸ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர்.இதனால் சென்னையில் இருந்து மயிலாடுதுறை, மீமிசல், முத்துப்பேட்டை வழியாக ராமேஸ்வரம் வரை செல்லக்கூடிய ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பயணிகள் 45 பேரும் மாற்று பஸ்சுக்காக காத்திருந்தனர். வெகுநேரம் காத்திருந்த பயணிகள் தனியார் பஸ்சின் கிளை அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் மாற்று பஸ் எப்போது வரும் என்று கேட்டபோது 10 நிமிடங்களில் வந்துவிடும் என்று கூறியுள்ளனர். ஆனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாகியும் மாற்று ஏற்பாடுகளை தனியார் பஸ் நிர்வாகத்தினர் செய்யாததால் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

    இந்த சம்பவத்தால் இன்று காலை மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    மதுபோதையில் ரவுடியை அவரது நண்பர்களே வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை நடராஜப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் அருண் (வயது 18). ரவுடியான இவர் மீது சாராயம் கடத்தல், நகைப்பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்குக்காக ஆஜராக நாகை கோர்ட்டுக்கு அருண் நேற்று வந்தார்.

    பின்னர் நேற்று மாலை நாகை அக்கரைகுளம் உப்பனாறு அருகே உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் பின்புறத்தில் தனது 2 நண்பர்களுடன் அருண் மதுக்குடித்து கொண்டிருந்தார்.

    சிறிதுநேரத்தில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது 2 பேர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ஆற்று நீரில் தப்பி ஓடியது தெரிய வந்தது. ரவுடி அருண் சம்பவ இடத்திலேயே தலை, கை, முகம் ஆகிய இடங்களில் பலத்த வெட்டப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்னர்.

    உடனே இதுபற்றி நாகை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அருண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்கு நின்ற பொதுமக்கள், அருணை 2 பேர் கொலை செய்து விட்டு ஆற்று நீரில் தப்பி சென்றதை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தப்பி ஓடிய அருணின் நண்பர்களான ராபர்ட்(22), மாதவன் (21) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் 2 பேரும், அருணை கொலை செய்ததை ஒப்புக் கொண் டனர்.

    அருண், தனது நண்பர்கள் ராபர்ட், மாதவன் ஆகியோர் மதுகுடிக்கும் போது  அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மது போதையில் அருணை அவர்கள் 2 பேரும் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ராபர்ட், மாதவனை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யத்தில் காய்கறி கடையில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் வீரசெல்வம் என்பவர் காய்கறிகடை நடத்தி வருகிறார்.

    இவர் மும்முரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபர் கல்லாபெட்டியில் இருந்து ரூ.500-ஐ திருடியுள்ளார். இதனை கவனித்துவிட்ட வீரசெல்வம் பணம் திருடிய வாலிபரை பிடித்து வேதாரண்யம் போலீசில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த ரெங்கசாமி மகன் வெங்கடேசன் (வயது 34) என்று தெரியவந்தது. அவரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் கைது செய்தார்.

    கஜா புயலில் சாய்ந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை கிராம மக்களே ஒன்றுசேர்ந்து மீண்டும் நட்டு உயிர்கொடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் கோர தாண்டவமாடியது. இதனால் மரங்கள், தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் விழுந்து சேதமானது. பல இடங்களில் இன்று வரை சாய்ந்து கிடக்கும் மரங்கள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் கஜா புயலில் சாய்ந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை கிராம மக்களே ஒன்றுசேர்ந்து மீண்டும் நட்டு உயிர்கொடுத்துள்ளனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் உச்சக்கட்டளை பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தது. திரவுபதி அம்மன் கோவிலில் இருந்த அந்த ஆலமரம் கிராமத்தின் அடையாளமாகவே இருந்தது.

    புயலில் விழுந்த ஆலமரத்தை எப்படியும் உயிர்ப்பித்து மீண்டும் நட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் ஒன்றுக்கூடி தங்களது சொந்த செலவில் மரத்தை நட முயற்சியில் இறங்கினர்.

    இதையடுத்து 2 கிரேன்கள், ஒரு பொக்லைன் மூலம் ஆலமரத்தை நடும் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, ஆலமரம் தூக்கி நிமிர்த்தப்பட்டு, மண்ணில் மீண்டும் நட்டு வைக்கப்பட்டது. இதை பார்த்து கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    திரவுபதி அம்மன் கோவிலில் இருந்த ஆலமரம் மிகவும் பழமையானது. கஜா புயலில் ஆலமரம் விழுந்த கிடந்ததை பார்த்து எங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இதனால் இந்த மரத்தை எப்படியாவது மீண்டும் நட வேண்டும் என்று கூடி பேசி முடிவு செய்தோம். இதற்காக எந்திரங்களை வரவழைத்து சுமார் ரூ.50 ஆயிரம் செலவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.



    நாகப்பட்டினம் அருகே வாலிபர் தலையை பிடித்து ஆற்றுக்குள் அமுக்கி அக்காள் கணவர் கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் வெட்டாற்றில் ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் இறந்து கிடந்த வாலிபர் திட்டச்சேரி அருகே உள்ள கீழ கொத்தமங்கலம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிட்டப்பா மகன் கார்த்தி (வயது 33) என தெரிய வந்தது.

    மேலும் பிரேத பரிசோதனையில் இறந்த வாலிபர் தலையை பிடித்து ஆற்றுக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து வாலிபர் கார்த்தியை கொன்ற நபர் யார்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் கார்த்தியை அவரது அக்காள் கணவரே கொலை செய்தது தெரிய வந்தது.

    கார்த்தி அக்காள் ஜெயந்தியின் கணவர் மணி என்ற மகேந்திரன் (வயது 34). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மகேந்திரனுக்கும் அவரது மனைவி ஜெயந்திக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. அப்போது ஜெயந்தி கணவரிடம் சண்டை போட்டுக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மகேந்திரன், கார்த்தியை அழைத்துக்கொண்டு மது குடிப்பதற்காக காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்துக்கு வந்தார். மது பாட்டிலை வாங்கி கொண்டு இருவரும் சேர்ந்து நாகூர் வெட்டாற்று அருகில் அமர்ந்து குடித்து கொண்டு இருந்தனர். அப்போது ஜெயந்தியை தன் வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கார்த்தியிடம் மகேந்திரன் கூறினார். இதில் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் கார்த்தியை கழுத்தை நெரித்து ஆற்றில் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டார்.

    இதையடுத்து நாகூர் போலீசார் மகேந்திரனை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×