search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    நாகையில் வி‌ஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

    நாகையில் வி‌ஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை நம்பியார் நகர் செல்லும் சாலையில் புதிய வீடு கட்டும் வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்று பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நாகை நகராட்சி ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டனர் நாகூர் அமிர்தா நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 38), நாகை காட்டு நாயக்கன் தெருவை சேர்ந்த சக்திவேல் (27) வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் (40) ஆகிய மூவரும் ஒருவர் பின் ஒருவராக பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தனர்.

    அப்போது பாதாள சாக்கடைக்குள் 3 பேருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர் மட்டும் மேலே ஏறிவந்து சத்தம் போட்டார். மாதவன், சக்திவேல் ஆகிய இருவரும் மேலே வரமுடியாமல் பாதாள சாக்கடை குழாய்க்குள் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் தீயணைப்புத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி சக்திவேல், மாதவன் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் வி‌ஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாதவன், சக்திவேலின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் அப்போது அவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் பணியாளர்களை பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்க வைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சங்கர், வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் மாதவன், உடல்களை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீதருக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வி‌ஷவாயு தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் நாகையில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×