என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி கொடியிறக்கத்துடன் முடிவடைகிறது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் 3 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழா தொடர்பான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகள் திருச்சி சரக ஐ.ஜி. வரதராஜலு, தஞ்சை சரக டி.ஐ.ஜி., லோகநாதன் ஆகியோரின் ஆலோசனைப்படி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
திருவிழாவில் திருட்டு, செயின் பறிப்பு ஆகிய குற்றங்களை தடுக்க நாகை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தாலுகா, ஆயுதப்படை மற்றும் சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த 1,800 போலீசாரும், 300 ஊர்காவல்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் பேராலயத்தை சுற்றி 65 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உயர் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக 6 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் வேளாங்கண்ணிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
மேலும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் பேராலயத்திற்கு வரும் அனைத்து பக்தர்கள் மற்றும் அவர்களது உடமைகளை முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
பாத யாத்திரையாக அதிக அளவில் பக்தர்கள் வருவதால் சாலை விபத்துக்களை தடுப்பதற்கு 4 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. பேராலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு உதவியாக 15 இடங்களில் காவல் உதவி மையமும், திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 குற்ற தடுப்பு பிரிவு குழுக்களும் செயல்பட்டு வருகிறது.
வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் பக்தர்கள் கடலில் குளிக்கும்போது அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க உயிர்காக்கும் வகையில் போலீசார் அதிவேக படகு மற்றும் உயிர்காக்கும் கவசத்துடன் கடற்கரையில் நிறுத்தப்பட உள்ளனர். கடற்கரை பகுதியிலும், பேராலயத்திலும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்தார். அங்கு போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கார் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் போலீஸ் நிலையம் எதிரே நின்ற ஒரு ஜீப்பை கலவரக்கும்பல் தீ வைத்து கொளுத்தியது.
மேலும் பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலையையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அரசு ஆஸ்பத்திரியில் ஜன்னல் கண்ணாடிகளை மர்ம கும்பல் உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் ராமச்சந்திரன், சரத்குமார், பாபுராஜன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து வேதாரண்யம் பகுதியில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் மற்றும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில் போலீசார், மற்றும் அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டனர்.
நேற்று காலை சேதப்படுத்தப்பட்ட அம் பேத்கார் சிலையை அப்புறப்படுத்தப்பட்டு புதிய சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை சுற்றிலும் தற்போது இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் கலவரம் காரணமாக நேற்று முன்தினம் இரவும், நேற்று 2-வது நாளாகவும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தனியார் பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் போலீசாரின் தீவிர ரோந்து பணியால் வேதாரண்யத்தில் நேற்று மாலை முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஒரு சில கடைகள் திறக்கப்பட்டன.
இன்று காலை வேதாரண்யம் பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் வழக்கம் போல் பஸ் நிலையத்துக்கு சென்று வந்தனர். வேதாரண்யம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கும், தனியார் பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில் கலவரம் தொடர்பாக வேதாரண்யம் போலீசார் 28 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே அம்பேத்கார் சிலையை சேதப்படுத்திய முக்கிய குற்றவாளிகளான வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி ரோட்டை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 33), கடிநெல்வயல் நடுக்காட்டை சேர்ந்த லக்கட் என்கிற வெனின் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் வேதாரண்யத்தில் இயல்புநிலை திரும்பினாலும் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட டி.எஸ்.பி.க்கள் உள்பட 750 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் நேற்று மாலை 5.30 மணியளவில் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது, அங்கு நின்ற ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது24) என்பவர் மீது ஜீப் மோதியது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பாண்டியராஜன், போலீஸ் நிலைய வளாகத்துக்குள் சென்று விட்டார்.
இதன்பின்னர் போலீஸ் நிலையம் முன்பு நின்ற ஜீப்புக்கு ஒரு கும்பல் திடீரென தீ வைத்தனர். மேலும் இருதரப்பினரும் கைகளாலும், கம்புகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் ராமச்சந்திரனை, ஒரு தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயத்துடன் கிடந்த அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதற்கிடையே வேதாரண்யம் பகுதிக்கு வந்த கூத்த தேவன்காடு பாபுராஜன் (30), ராஜாளிகாட்டை சேர்ந்த சரத்குமார் (27) ஆகியோர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் நிலையம் எதிரே இருதரப்பும் மோதிக்கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காணப்பட்டது. போலீஸ் நிலையம் எதிரே ரோட்டில் கற்களும், கண்ணாடி துண்டுகளும் சிதறி கிடந்தன. மேலும் போலீஸ் நிலையம் மீது கற்களும் வீசப்பட்டன. வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் 2 ஆண் போலீசாரும், ஒரு பெண் போலீசார் மட்டும் இருந்ததால் அவர்களால் கலவரக் கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதைத்தொடர்ந்து வேதாரண்யம் பஸ் நிலையம் பகுதியில் ஒரு கும்பல், அங்கிருந்த அம்பேத்கார் சிலையை அடித்து நொறுங்கி சேதப்படுத்தினர்.
மேலும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்குள் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்த ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து வன்முறையும் பதட்டமும் நிலவுவதால் உடனடியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் இருந்த வெளியூர் பயணிகள் பீதி அடைந்தனர். மேலும் கடைகளும் அடைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
வேதாரண்யம் பகுதியில் கலவரம் குறித்து தகவல் கிடைத்ததும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் மற்றும் மாவட்ட சூப்பிரண்டுகள் நாகை ராஜசேகரன், திருவாரூர் துரை, டி.எஸ்.பி.கள் திருமேனி, முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
நேற்று இரவு முதல் அதிவிரைவு படை வீரர்களும் வரவழைக்கப்பட்டு வேதாரண்யம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருச்சி ஐ.ஜி.வரதராஜூலு, வேதாரண்யத்துக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
கலவரம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் இன்றும் 2-வது நாளாக பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. வேதாரண்யம் பஸ் நிலையத்தில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன.
மேலும் வேதாரண்யம் பகுதியில் கடைகள் இன்றும் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. ஒருசில இடங்களில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.
இந்த கலவரம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 50 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறாவண்ணம் வேதாரண்யம் பகுதியில் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது24) என்பவர் மீது ஜீப் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக வெடித்தது.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. வன்முறையின்போது வீசப்பட்ட ஏராளமான கற்கள், வாகனத்தின் நொறுங்கிய கண்ணாடிகள் சிதறிக் கிடந்ததால் வேதாரண்யம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.
வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தின் ஜன்னல் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் பஸ்களையும் கல்வீசி தாக்க தொடங்கியதால் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.
இதனிடையே வேதாரண்யம் பகுதிக்கு வந்த அகஸ்தியன்பள்ளி கூத்ததேவன்காடு பாபுராஜன் (30), ராஜாளிக் காட்டை சேர்ந்த சரத்குமார் (27) ஆகிய 2 பேர் மர்ம கும்பலால் கத்தியால் தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், அதனை உடைத்தவர்களை கைது செய்யக்கோரியும் நாகை-நாகூர் நெடுஞ்சாலையில் வெளிப்பாளையம், வண்டிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த நாகூர் போலீசார், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் வேதாரண்யம் முழுவதும் பதற்றம் நிலவியது. இதனால் நகர் முழுவதும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். அதிவிரைவு படை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
வன்முறை காரணமாக வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், கோடியக்கரை உள்பட பல பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாயினர்.
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையத்தில் சிலர் கல் வீசியதில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
மேலும் விருத்தாசலத்தில் அரசு பேருந்து மீது கல்வீசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பா.ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீருக்கு எதிர்க்கட்சிகள் அங்கு குழப்பம் விளைவிப்பதற்காகவே செல்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்தியது அம்மாநில அரசின் சரியான செயல். தமிழகம் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 18 சதவீத இஸ்லாமியர்கள் நிறைந்த உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பங்கரவாத அச்சுறுத்தல் இன்றி அமைதியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ், தி.மு.க. போன்ற இந்து விரோத, தேசிய விரோத கட்சிகளினால் தான் தொடர் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க உதவியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஈழ வியாபாரிகள், தற்போது பாகிஸ்தான் ஆதரவு வியாபாரிகளாக மாறிய தன் விளைவு தான் தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக தி.மு.க. பேசி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பா.ஜனதாவின் தமிழகத்தின் அடுத்த தலைவர் யார்? என்று அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘பா.ஜனதாவில் எந்த பதவிகளும் நான் கேட்டு பெற்றவை அல்ல. அனைத்து பதவிகளும் தானாக வந்தது போல் கட்சித் தலைமை எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் தான் ஏற்றுக் கொள்வேன்’ என்றார்.
நாகை மாவட்டத்தில் பரவலாக 6-வது நாளாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சம்பா சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொழில் அடியோடு பாதித்துள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக வேதாரண்யத்தில் தான் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. வேதாரண்யம், அகஸ்தியன் பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில 10 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்தாண்டு ஏற்பட்ட கஜா புயலால் உப்பள பகுதிகள் சேதமானது. கடல் சேறு ஒரு அடிக்கு மேல் உட்புகுந்ததால் இந்தாண்டு வெறும் 40 சதவீத அளவுக்கு தான் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ஆடி காற்றில் கடல்நீர் உள்ளே புகுந்து உப்பள பாத்திகள் பாதிப்பு அடைந்தது.
இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் இரவு வரை மழை பெய்தது. இதனால் உப்பளங்களில் மழை தண்ணீர் தேங்கி உள்ளதால் சுமார் 10 ஆயிரம் ஆண்- பெண் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள். இதேபோல் சாலையோரங்களில் உப்பு பாக்கெட் போடும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்து உப்பு உற்பத்தி தொடங்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கொள்ளிடம்-52.00, நாகை -50.60, வேதாரண்யம்-26.40, சீர்காழி-24.80, திருப்பூண்டி-22.40, தலைஞாயிறு-18.40, மயிலாடுதுறை-11.40, தரங்கம்பாடி-8.20.
நாகை மாவட்டத்தில் மொத்தம் 231.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு கிராமத்தை சேர்ந்தவர் குருமணி (வயது 52). இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டு அருகே அவர் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறி வீட்டு காம்பவுண்டு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த குருமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் குருமணி இறந்ததையொட்டி அவர் பணியாற்றிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அவரது உடலுக்கு சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அஞ்சலி செலுத்தினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு அடுத்த மருதூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 30). இவர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மருதூர் மாடிக்கடை பகுதியில் போலீஸ்காரர் அருள் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் டிரைவர் பிரகாசிடம் வண்டி ஆவணங்களை காண்பிக்குமாறு கூறினார். பிறகு திடீரென அவரிடம் இருந்த செல்போனையும், ரூ.500 பணத்தையும் பறித்துக்கொண்டார்.
இதேபோல் மற்றொரு வேன் டிரைவர் சக்திவேல் என்பவரிடம் போலீஸ்காரர் அருள் , செல்போனை பறித்து கொண்டு வாய்மேடு போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுகுணாவிடம் சென்று அருள் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பேசினார். பிறகு பன்னாள் பகுதியை சேர்ந்த ஒருவர் ரூ.30 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றி வருவதாகவும், அதை வாங்கி தருமாறும் அருள் கூறினார்.
இதை கேட்ட இன்ஸ் பெக்டர் சுகுணா, பணம் கொடுத்ததற்கான ஆவணங்களை காண்பித்தால் பணத்தை பெற்று தருவதாக தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் அருள், இன்ஸ்பெக்டர் சுகுணாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தகராறு செய் தார். அப்போது அவர் ஆவேசத்துடன் போலீஸ் நிலையத்தில் இருந்த நாற்காலிகளை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. மேலும் இன்ஸ்பெக்டரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இந்த நிலையில் போலீஸ்காரர் அருளிடம் செல்போன் மற்றும் பணத்தை பறிகொடுத்த வேன் டிரைவர்கள் பிரகாஷ், சக்திவேல் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் 2 பேரும், இன்ஸ்பெக்டர் சுகுணாவிடம் சென்று, போலீஸ்காரர் அருள் தங்களிடம் செல்போன்- பணத்தை பறித்த சம்பவத்தை தெரிவித்தனர்.
இதையடுத்து அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் அருள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மயிலாடு துறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அணு உலை திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து போராடும்.

காஷ்மீர் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் வாங்கி வரும் பெரும் கருப்பு பணத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் மத்திய- மாநில அரசுகளுக்கு ஆதரவாக அவர் எப்போதும் குரல் கொடுத்து வருகிறார். தமிழக மக்கள் தான் அவரை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






