search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியில் தொடர்மழையில் உப்பளங்களில் தண்ணீர் சூழப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியில் தொடர்மழையில் உப்பளங்களில் தண்ணீர் சூழப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    நாகை மாவட்டத்தில் தொடர் மழை- வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு

    நாகை மாவட்டத்தில் பரவலாக 6-வது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொழில் அடியோடு பாதித்துள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் பரவலாக 6-வது நாளாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சம்பா சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொழில் அடியோடு பாதித்துள்ளது.

    தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக வேதாரண்யத்தில் தான் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. வேதாரண்யம், அகஸ்தியன் பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில 10 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்தாண்டு ஏற்பட்ட கஜா புயலால் உப்பள பகுதிகள் சேதமானது. கடல் சேறு ஒரு அடிக்கு மேல் உட்புகுந்ததால் இந்தாண்டு வெறும் 40 சதவீத அளவுக்கு தான் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ஆடி காற்றில் கடல்நீர் உள்ளே புகுந்து உப்பள பாத்திகள் பாதிப்பு அடைந்தது.

    இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் இரவு வரை மழை பெய்தது. இதனால் உப்பளங்களில் மழை தண்ணீர் தேங்கி உள்ளதால் சுமார் 10 ஆயிரம் ஆண்- பெண் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள். இதேபோல் சாலையோரங்களில் உப்பு பாக்கெட் போடும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்து உப்பு உற்பத்தி தொடங்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    நாகை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொள்ளிடம்-52.00, நாகை -50.60, வேதாரண்யம்-26.40, சீர்காழி-24.80, திருப்பூண்டி-22.40, தலைஞாயிறு-18.40, மயிலாடுதுறை-11.40, தரங்கம்பாடி-8.20.

    நாகை மாவட்டத்தில் மொத்தம் 231.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
    Next Story
    ×