search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

    வேளாங்கண்ணி மாதா திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பல்லாயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களால் `கீழை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படுகிறது. சிறப்புகள் வாய்ந்த இந்த பேராலயத்தில் ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 8-ந் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பல்லாயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவையொட்டி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஆரோக்கிய மாதாவின் சொரூப கொடியினை தஞ்சை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்து கொடியேற்றுகிறார். விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், மராட்டி, கொங்கணி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெறும். அன்னை மாதாவின் ஆண்டு திருவிழா பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து காவி உடை அணிந்து அன்னையின் ஆசிபெற நடை பயணமாக வருகை தருகிறார்கள்.

    வேளாங்கண்ணி மாதா திருவிழாவையொட்டி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. முருகவேலு தலைமையில் பேராலயத்துக்கு வரும் பக்தர்களின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்களும், கடற்கரை ரோந்து போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து பேராலய அதிபர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது, வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா 29-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டு திருவிழாவில் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், பேராலயம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு சிசிடிவி கேமிராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×