என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வடமட்டம் பஜனை மடத்தெருவை சேர்ந்தவர் அப்துல்ஆரிப். இவருடைய மனைவி நிலோபர்பர்வீன் (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆப்ரினா (4), ஆப்ரா (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
அப்துல்ஆரிப் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் நிலோபர்பர்வீன், மகள்களுடன் வடமட்டம் கிராமத்தில் வசித்து வந்தார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவருடைய வீட்டு வாசல் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது நிலோபர்பர்வீன் மற்றும் அவருடைய மகள்கள் ஆப்ரினா, ஆப்ரா ஆகியோர் வீட்டில் பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக பாலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று நிலோபர்பர்வீன் மற்றும் அவருடைய மகள்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நிலோபர்பர்வீனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததும், இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலைக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது.
மேலும் தனக்கு பிறகு குழந்தைகளை யாரும் கவனிக்கமாட்டார்கள் என நினைத்த அவர், குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் குடித்துள்ளார். இதில் 3 பேரும் பரிதாபமாக இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். நிலோபர்பர்வீனுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்பது பற்றி திருவாரூர் உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த முருகன் மகன் தினேஷ் (வயது 23), செல்வராஜ் மகன் செல்வம் (25), தங்கமணி மகன் அருண் (22) ஆகிய 3 பேரும் நேற்று இரவு ஒரு மோட்டர் சைக்கிளில் சென்றனர். தினேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அவர்கள் வெள்ளப்பள்ளத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு சென்றனர். இதனால் பழங்கள்ளிமேட்டை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கருணாகரன் (27), காளியப்பன் மகன் குமரேசன்(26) ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பழங்கள்ளிமேட்டில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்றனர்.
தினேஷ் உள்பட 3 பேரும் சென்ற மோட்டார் சைக்கிள் வெள்ளப்பள்ளம் அருகே சென்ற போது முன்னால் சென்ற ஒரு காரை முந்த முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கருணாகரன் சென்ற மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 5 பேரும் படுகாயமடைந்தனர். இதில் தினேஷ், செல்வம், கருணாகரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை கண்ட வாகன ஓட்டிகள் உயிருக்கு போராடிய அருண், குமரேசன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருவாருர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் டி.எஸ்.பி.சபியுல்லா, தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றிய புகாரின் பேரில் வேட்டைகாரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு சேய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் 3 வாலிபர்கள் பலியான சம்பவம் நாகை மாவட்ட மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சிலுவைப்பாதை வழிபாடு ஜெபமாலை, நவநாள், ஜெபம், மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை, ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தினமும் இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று (7-ந்தேதி) இரவு 7:30 மணி அளவில் நடைபெறுகிறது.
இன்று மாலை பேராலய கலையரங்கில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். பின்னர் இரவு 7 மணிக்கு ெபெரிய தேர்பவனி நடக்கிறது. புனித ஆரோக்கியமாதா பெரிய தேரில் எழுந்தருள தொடர்ந்து 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரியமாதா ஆகியோர் எழுந்தருள்வர்.
தேர் பேராலய முகப்பில் தொடங்கி கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக பேராலய முகப்பை வந்தடையும்.
திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று பெரிய தேர்பவனி வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பஸ், ரெயில்கள் மூலமாகவும் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் கூட்டத்தால் தஞ்சை ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல தஞ்சை புது பஸ்நிலையத்திலும் வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
திருவிழாவையொட்டி தஞ்சையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் தஞ்சை வழியாக சிறப்பு ரெயிலும் இயக்கப்படுகிறது.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜீலு தலைமையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், எஸ்.பி.க்கள் ராஜசேகரன், துரை ஆகியோர் மேற்பார்வையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் காரைக்கால், நாகை, வேளாங்கண்ணி ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் முகைதீன் உத்தரவின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 24 மணி நேரமும் கடற்கரையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறை வேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப் பள்ளம், வானவன் மகா தேவி உள்ளிட்ட மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடந்த 4,5-ந் தேதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடுகளிலே முடங்கி கிடந்தனர். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால் படகுகள் அனைத்தும் கரையோரத்தில் பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
மீனவர்கள் பிடிக்க செல்லததால் மீன்வரத்து இல்லை. இதனால் சில்லரை மீன் வியபாரிகள் கடற்கரை சென்று ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று (6-ந் தேதி) கடலில் பலமாக காற்று வீசியதால் 3-வது நாளாக மீனவர்கள் பலர் மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு சில மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க சென்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக 2-வது இடமாக உப்பு உற்பத்தி வேதாரண்யத்தில் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் உப்பள பகுதிகள் பாதிக்கப்பட்டு, கடல் சேறு 1 அடிக்கு மேல் புகுந்து விட்டது. இந்த ஆண்டு உற்பத்தி 40 சதவீத உப்பள பகுதியில் மட்டும் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இடங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது.
கடந்த மாதம் தொடர்ந்து வீசிய ஆடி காற்றால் உப்பு உற்பத்தி செய்யப்பட்ட பாத்திகளில் கடல் நீர் உள்ளே புகுந்து பாதிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனால் சுமார் 10 ஆயிரம் ஆண்-பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பள பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி அடியோடி நிறுத்தப்பட்டது. சாலை ஓரங்களில் சேமித்து வைத்துள்ள உப்புகளை ஏற்றும் பணியும் பாக்கெட் போடும் பணியும் நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் வேதாரண்யத்தில் 64.2 மி.மீட்டரும், தலைஞாயிறில் 52.6 மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யம் சுற்று வட்டார விவசாயிகள் இந்த மழையினால் மகிழ்ச்சியடைந்து விவசாய பணிகளை துவங்கி உள்ளனர்.
புதுப்பள்ளி பகுதியில் 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மழை காற்றால் சாய்ந்துள்ளது. உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை இல்லாவிட்டால் உப்பு உற்பத்தி தொடங்க 15 நாட்கள் மேலாகும் என தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு குறைவான உப்பு உற்பத்தி செய்யப்பட்டதால் உப்பு இருப்பும் குறைவாக உள்ளது. இதனால் உப்பு விலை ஏற வாய்ப்புள்ளது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த கீழ்வேளூர் அருகே நீலப்பாடி தாமரைகுளம் தெருவை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் பிரகதீஷ்வரன் (வயது 25). இவர் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஜோதி அவரை கண்டித்து உள்ளார். இதில் மனமுடைந்த பிரகதீஷ்வரன் சம்பவத்தன்று காக்கழனி கிராமத்தில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகே இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரகதீஷ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை தமிழ் சங்கம் சார்பில் “தமிழுக்காக வாழ்வோம் தமிழாய் வாழ்வோம்“ என்ற தலைப்பில் மயிலாடுதுறையில் சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் சிவலிங்கம் வரவேற்றார். நிறுவன தலைவர் பவுல்ராஜ், தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை மாநில தலைவர் குணசேகரன், ஏ.வி.சி. கல்லூரி தமிழ்த்துறை தலைவர் தமிழ்வேலு, மூத்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சென்னை அறிவியல் நகரம் அமைப்பின் துணை தலைவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம், தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
இந்தியா, கிராமங்களின் தேசம். கிராமத்தில் பிறந்ததால் நான் பெருமைபடுகிறேன். விவசாயி மகன் என்ற பெருமையும் எனக்கு உண்டு. நான் ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் என்ற பெருமையும், ஒரு நேர்மையான அலுவலர் என்ற கர்வமும் எனக்கு உண்டு. இத்தனையும் தாண்டி தமிழ் மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த தமிழர் என்ற பெருமை என்றைக்கும் எனக்கு உண்டு.
எந்த மொழியையும் கற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் தமிழர்கள். இந்தி மொழி உள்பட அனைத்து மொழிகளையும் கற்று கொள்ளும் திறன் படைத்தவர்கள். தேவைக்கேற்ப அவர்கள் கற்று கொள்வார்கள். அதே நேரத்தில் எதையும் திணிப்பது இனிக்காது.
டெல்லியில் ஐ.ஏ.எஸ். நேர்முக தேர்வின்போது என்னிடம், எந்த மொழியை இந்திய ஆட்சி மொழியாக வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டனர். அதற்கு நான் தயக்கமில்லாமல் இலக்கிய, இலக்கண பெருமை கொண்டிருக்கிற, இன்றைக்கும் உயிர்த்துடிப்போடு இருக்கக்கூடிய உலகின் மூத்த மொழியான என் தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக வைத்து கொள்ளலாம் என்று பதில் கூறினேன்.
ஐ.ஏ.எஸ் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறபோது இந்த நாட்டின் ஆட்சிமொழியாக எதை வைக்கலாம் என்று கேட்டபோது என்னை அறியாமலே தமிழை வைக்கலாம் என்று சொன்னதற்கு காரணம் என்ன தெரியுமா? எங்கள் சொல்லுக்குள்ளும், உள்ளுக்குள்ளும் தமிழ் தான் இருக்கிறது என்பது தான் உண்மை. உலகத்தில் உள்ள மொழிகளை வரிசைப்படுத்தும்போது தமிழை பண்பாட்டு மொழி என்று கூறியுள்ளனர். ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி அறிந்த பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்கிறார்.
நம்முடைய பெருமைகளை நம்மை விட மேலை நாட்டவர்கள் உணர்ந்துள்ளனர். தனித்து இயங்குகிற கூட்டமைப்பு உடையது தமிழ்மொழி. சம்பிரதாயங்களாக மரபு வழியாக நாம் நடத்தக்கூடிய தமிழ் விழாக்களில் இருந்து மாறுபட்டு தமிழர்களின் உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க கூடிய நிலையிலே நாம் இருக்க வேண்டும். ஆங்கிலம் தேவை என்று எனக்கு தெரியும். அதே நேரத்தில் ஆங்கில மோகத்தை தவிர்க்க வேண்டும். ஆங்கில ஆற்றலை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். ஆங்கில ஆற்றலை வளர்த்து கொண்டால் மோகம் போய்விடும்.
தமிழ் மொழியை நேசிப்பது என் தாயை நேசிப்பதற்கு ஒப்பானது. இது தான் நெறி. எனவே திட்டமிடுங்கள். திட்டமிட்டு தமிழ் பயன்பாட்டு தளத்தை விரிவாக்குங்கள். நாம் பெயர் வைப்பதில் இருந்து, உறவுகளை அழைப்பதில் இருந்து, நம்முடைய உரையாடல்களில் இருந்து அன்னிய மொழியை அகற்றுவதில் இருந்து, நாம் கையெழுத்து போடுவதில் இருந்து, நம்முடைய கல்வி தளங்களுக்கு அதை கொண்டு செல்வதில் இருந்து, நீதிமன்றங்களுக்கு அலுவலக பயன்பாடுகளுக்கு கொண்டு செல்வதில் இருந்து திட்டமிட்டு செயலாற்றுவது தான் தமிழ்தாய்க்கு செய்யும் தொண்டு ஆகும்.
அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்க வேண்டும். அதற்கு இன்றே திட்டமிட்டுசெயல்பட வேண்டும். அப்போதுதான் நாம் தமிழை வாழ்விக்கக்கூடிய மகத்தான பணியை செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிகளை முத்துக்கனியன் தொகுத்து வழங்கினார்.






