search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
    X
    வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    வேளாங்கண்ணியில் இன்று மாலை நடைபெறும் பெரிய தேர்பவனி

    வேளாங்கண்ணியில் இன்று மாலை நடைபெறும் பெரிய தேர்பவனி நடைபெறுகிறது. இதற்காக 2500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், மராட்டி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது.

    மேலும் சிலுவைப்பாதை வழிபாடு ஜெபமாலை, நவநாள், ஜெபம், மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை, ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தினமும் இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று (7-ந்தேதி) இரவு 7:30 மணி அளவில் நடைபெறுகிறது.

    இன்று மாலை பேராலய கலையரங்கில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். பின்னர் இரவு 7 மணிக்கு ெபெரிய தேர்பவனி நடக்கிறது. புனித ஆரோக்கியமாதா பெரிய தேரில் எழுந்தருள தொடர்ந்து 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரியமாதா ஆகியோர் எழுந்தருள்வர்.

    தேர் பேராலய முகப்பில் தொடங்கி கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக பேராலய முகப்பை வந்தடையும்.

    திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று பெரிய தேர்பவனி வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பஸ், ரெயில்கள் மூலமாகவும் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் கூட்டத்தால் தஞ்சை ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல தஞ்சை புது பஸ்நிலையத்திலும் வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.

    திருவிழாவையொட்டி தஞ்சையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் தஞ்சை வழியாக சிறப்பு ரெயிலும் இயக்கப்படுகிறது.

    தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜீலு தலைமையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், எஸ்.பி.க்கள் ராஜசேகரன், துரை ஆகியோர் மேற்பார்வையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் காரைக்கால், நாகை, வேளாங்கண்ணி ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் முகைதீன் உத்தரவின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 24 மணி நேரமும் கடற்கரையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாளை அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறை வேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.
    Next Story
    ×