என் மலர்
நாகப்பட்டினம்
குத்தாலம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் அதிக அளவில் அன்னிய முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளதாக, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணிக்கு ஆதரவாகத்தான் அவர் பேசுவார். தற்போது அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால் அப்படித் தான் பேசுவார்,
பொதுவாக, கோடைக்காலத்தில் ஆறுகள் வறண்டு இருக்கும் போதுதான் தூர்வாரப்படும். தற்போது, தண்ணீர் திறந்துவிடப்பட்ட பிறகு தூர்வாருவது எதற்காக என்பது உங்களுக்கே தெரியும்.
டெல்டா மாவட்டங்களில் வருங்காலங்களில் சரியான நீர் மேலாண்மை அமைத்துத் தரப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய தூர்வாரும் பணியை, தற்போது மேற்கொள்வது கஜானாவை தூர்வாருவதற்காகவே என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். இதுபற்றி இந்த மாவட்ட அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் வேளூர் பகுதியை சேர்ந்தவர் சிற்றரசு. இவரது மகள் காயத்ரி (வயது 26). பட்டதாரியான இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் தினமும் தனது ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் தனது பணியை முடித்து விட்டு வீட்டுக்கு காயத்ரி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வீட்டு அருகே சிறிதுதூரத்தில் அதிவேகமாக வந்த ஒரு கார், காயத்ரி ஸ்கூட்டரை வழிமறித்து நின்றது. திடீரென காரில் இருந்து இறங்கிய 3 பேர் கொண்ட கும்பல் , காயத்ரியை வலுக்கட்டாயமாக குண்டுக் கடடாக தூக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கும்பலின் பிடியில் இருந்து தப்பிக்க கூச்சல் போட்டார். ஆனால் அந்த சமயத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் மர்ம கும்பல் சிறிதும் தாமதிக்காமல், காரில் காயத்ரியை தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர்.
இதற்கிடையே வீட்டுக்கு வராமல் இருந்ததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வீட்டு அருகே காயத்ரி ஸ்கூட்டர் மற்றும் செருப்புகள் கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியதை கேட்டு திடுக்கிட்டனர்.
உடனே சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் பார்வையிட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி காயத்ரியின் பெற்றோர் பெரம்பூர் போலீசில் புகார் செய்தனர்.அப்போது மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெள்ளத்துரை, ஒரு வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இந்த சம்பவம் பற்றி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிளியனூர், பள்ளிவாசல் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காமிராக்களின் பதிவை வைத்து சோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையே நள்ளிரவு 1 மணி அளவில் காயத்ரி, தனது தந்தை சிற்றரசுக்கு செல்போனில் பேசினார். அப்போது தன்னை கடத்திய கும்பல், திருவாரூர் கங்களாஞ்சேரியில் இறக்கி விட்டு தப்பி சென்று விட்டதாக தெரிவித்தார். இதனால் உடனே சிற்றரசு, போலீசார் துணையுடன் கங்களாஞ்சேரிக்கு சென்று காயத்ரியை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தார்.
பின்னர் போலீசார், காயத்ரியிடம் விசாரணை நடத்தினர்.
என்னை வீடு அருகே காரில் வந்த 3 பேர் கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தினர். இரவு நேரமாக இருந்ததால் கார் எந்த திசையில் போகிறது என்று தெரியவில்லை. காரில் இருந்த 3 பேரும் இந்தியில் பேசினார்கள்.
என் காதில் கிடந்த கம்மலை கழட்டி கொண்டனர். மேலும் கொலுசையும் எனக்கு நிச்சயத்தார்த்துக்காக போடப்பட்ட மோதிரத்தையும் பிடுங்கிக் கொண்டனர். அப்போது நான் அந்த கும்பலிடம், தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள். எனக்கு திருமணம் விரைவில் நடக்க உள்ளது’ என்று கதறி அழுதேன். அப்போது அவர்கள் என்னை செல்போனில் போட்டோ எடுத்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் இந்தியில் ஏதோ பேசிக்கொண்டனர். இதையடுத்து கங்களாஞ்சேரியில் காரை நிறுத்தி விட்டு என்னை இறங்கினர். அப்போது என்னிடம் அவர்கள் பிடுங்கிய மோதிரத்தை மட்டும் என்னிடம் திருப்பி கொடுத்து விட்டனர்.
பிறகு வேகவேகமாக காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதையடுத்து சாலையோரத்தில் நின்ற சிலரிடம் எனது நிலையை எடுத்து கூறினேன். அவர்கள் தந்த செல்போனை வைத்து எனது தந்தைக்கு தகவல் கொடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கடத்தல் கும்பலிடம் இருந்து மீண்ட காயத்ரிக்கு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயத்ரியை வடமாநில கும்பல் எதற்காக கடத்தியது? இதில் வேறு யாராவது உள்ளூர் நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
பட்டதாரி பெண்ணை காரில் வடமாநில கும்பல் கடத்தி சென்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆலங்குடி கீழத்தெருவை சேர்ந்த செல்லத்துரை. இவருடைய மகன் மாரீஸ்வரன்(வயது26). இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். மேலும் அந்த மாணவி செல்லும் இடங்களுக்கு பின் தொடர்ந்து சென்று அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற மாரீஸ்வரன் திடீரென மாணவியை கட்டிப்பிடித்து அவருக்கு கட்டாய தாலி கட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனே சம்பவ இடத்தில் திரண்ட அக்கம்பக்கத்தினர் மாரீஸ்வரனை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேணுதேவி மற்றும் போலீசார் மாரீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்-2 மாணவிக்கு கொத்தனார் ஒருவர் கட்டாய தாலி கட்டிய சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2-ம்சேத்தியில் அமைந்துள்ளது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 6 ஆசிரியர்களும் 64 மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் முகரம் பண்டிகையையொட்டி பள்ளி விடுமுறை விடப்பட்டது.
இன்று காலை வழக்கம் போல பள்ளியை திறக்க பள்ளி துப்புரவு பணியாளர் கமலா பள்ளிக்கு வந்தபோது நுழைவு வாயிலின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் 5 வகுப்பறை பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் செந்தமிழ்செல்வியிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்தபோது தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த லேப்டாப் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வட்டார கல்வி அதிகாரி தாமோதரனுக்கு தகவல் தெரிவித்து விட்டு வாய்மேடு போலீஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியர் செந்தமிழ்செல்வி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்தானமேரி பள்ளிக்கு சென்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் வாஹித் உசேன். இவரது மகன் அப்துல் சுக்கூர் (வயது11).
இந்த நிலையில் வாஹித் உசேனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு நாகை பாப்பாக்கோவிலில் உள்ள தர்காவில் தங்கி கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் தந்தையுடன் சிறுவன் அப்துல் சுக்கூர் தங்கி இருந்துள்ளான்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தர்கா அருகே உள்ள குளத்தில் தண்ணீர் எடுத்து வருவதற்காக அப்துல் சுக்கூர் சென்றபோது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து மூழ்கினான்.
உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்
இதுபற்றிய புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 13-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்ததால் கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடைமடை வரை காவிரி நீர் இன்னும் செல்லவில்லை. கடலில் வீணாக சென்று கலப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் சீர்காழியில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய அளவு இல்லாததாலும் மழை பொய்த்து போனதாலும் முப்போகம் விளைந்த சீர்காழி பகுதியில் தற்போது ஒருபோகத்துக்கே வழி இல்லாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
இந்தாண்டு கேரளா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்கு பயன்படாமல் பழையாறு பகுதியில் கடலில் வீணாக கலக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி சீர்காழி பகுதியை விவசாயிகள் கூறியதாவது:-
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சரியான திட்டமிடல் இல்லை. காலம் கடந்த குடிமராமத்து பணி காரணமாக சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள பாசன ஆறுகள், வாய்க்கால்களில் பாலங்கள் கட்டும் பணியால் ஆற்றின் குறுக்கே மண் போட்டு தண்ணீர் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தான் காவிரி தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லை.
மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி நாங்கள் நிலங்களை உழுது செய்து தயார் நிலையில் இருந்தோம். ஆனால் ஆண்டுதோறும் விவசாயத்துக்கு பயன்படாமல் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதற்கு தடுப்பணைகள் கட்டுவது தான் ஒரே தீர்வு.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் ரங்கநாதபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலையா மகன் மலர்மன்னன் (வயது 21). இவர் கடந்த 10-ந் தேதி நாகை அடுத்த வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.
அருகில் சுற்றுலா தலமான நாகூருக்கு சென்றனர். அப்போது மது அருந்துவதற்கு மலர்மன்னன் அவருடைய அண்ணன் ரங்கராஜனிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் மறுத்துள்ளார்.
இதில் மனமுடைந்த மலர்மன்னன் அருகில் இருந்த கடைக்கு சென்று பூச்சி மருந்து வாங்கி குடித்து உள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேந்திரிய வித்யாலயாவில் 6-ம் வகுப்பு வினாத்தாளில் ஜாதிப்பிரச்சினை குறித்து இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை பரப்பி வருகிறார். இணைய தளம் வாயிலாக தி.மு.க.வினரை கொண்டு இதுபோல் தகவல்களை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. அவர் கூறுவது போல் எந்த கேள்வியும் அதில் இல்லை.
இந்தியாவில் பொருளாதார பாதிப்பு என்பது நேருவின் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து கருப்பு பணம் உள்பட வெளியில் இருந்த பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து விட்டது. அதைக் கொண்டு தான் சாலைகள் மேம்பாடு, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது எந்த பொருளாதார பாதிப்பும் இந்தியாவில் ஏற்படவில்லை. பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி தான் இந்தியாவை பிரதமர் மோடி கொண்டு செல்கிறார். எதிர்க்கட்சியினர் இதை தவறான நோக்கத்துடன் விமர்சிப்பதோடு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் அறிவிக்க உள்ளார். இதனால் விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். மேலும் விவசாயிகளின் வங்கி நகைக் கடன்கள் வழங்குவது ரத்து செய்யப்படும் என்று ஒரு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
சாலை விதிகளை மதிப்பது, ஹெல்மெட் அணிந்து செல்வது போன்ற சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து இந்தியாவை கட்டுப்பாட்டுடன் கூடிய நாடாக பிரதமர் மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் எதிர்தரப்பினர் அனைத்து திட்டங்களையும் விமர்சித்து மக்களை குழப்பி திசை திருப்ப முயல்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் ப.சிதம்பரம். கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் போன்றவர்கள் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக உள்ளனர். இவர்கள் ஊழல் செய்தே சொத்துக்களை சேர்த்து உள்ளனர். அதனாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இதேபோல் தமிழகத்தில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவில் ஊழல் செய்துள்ளதாக தெரியவருகிறது. விரைவில் அவரும் கைது செய்யப்படுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சோமு மகன் ரவி (வயது48). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில்(40). உப்பள தொழிலாளி.
இவர்கள் இருவரும் உறவினர்கள். ரவி- செந்தில் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் ரவி தனது குடும்பத்துடன் கோடியக்காடு பகுதிக்கு சென்று வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று செந்தில், அவரது தாய் செல்வி, உறவினர் சாந்தா ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் கோடியக் காட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடியுடன் சென்றனர்.
கோடியக்காட்டுக்கு சென்ற அவர்கள் வீட்டில் இருந்த ரவி, அவரது மனைவி நாகலட்சுமி, மகன் கோகுலசந்திரன் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி ஆயுதங்களால் தாக்கினர்.
இதனால் ஆத்திரமடைந்த ரவி, செந்தில் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபிஉல்லா சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த செந்திலின் தாய் செல்வி, உறவினர் சாந்தா, ரவி மனைவி நாகலட்சுமி, மகன் கோகுலசந்திரன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசாரின் விசாரணையில் பெண் தொடர்பு விவகாரத்தில் செந்தில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சீர்காழி:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் சீர்காழி போலீஸ் டி.எஸ்.பி. வந்தனா அறிவுறுத்தலின்படி சீர்காழி இன்ஸ்பெக்டர் சதீஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சீர்காழி புறவழிச்சாலை பனமங்கலம் ரவுண்டானா அருகே 2 மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் இருவர் வந்தனர். போலீசார் நிற்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஒருவர் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் தப்பி ஓட முயன்ற மற்றொருவரை விரட்டி பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சீர்காழியை சேர்ந்த பாபு (வயது 40) என தெரியவந்தது.
பின்னர் போலீசார் அங்கு நின்ற 2 மோட்டார் சைக்கிள்களில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட பாண்டி ஐஸ் என்ற சாராய பாக்கெட்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மூட்டைகளில் சுமார் 20 ஆயிரம் சாராய பாக்கெட்டுகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் என கூறப்படுகிறது.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பாண்டி ஐஸ் சாராய பாக்கெட்டுகள் கடத்தி வரப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே போலீசார் இரவு நேரங்களில் நாகை மாவட்ட எல்லையோர பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






