search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே கொள்ளிடத்தில் செல்லும் உபரிநீர் கடலில் கலப்பதை காணலாம்
    X
    சீர்காழி அருகே கொள்ளிடத்தில் செல்லும் உபரிநீர் கடலில் கலப்பதை காணலாம்

    கொள்ளிடத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் - விவசாயிகள் வேதனை

    கொள்ளிடம் ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்கு பயன்படாமல் கடலில் வீணாக கலக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
    சீர்காழி:

    டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 13-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்ததால் கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடைமடை வரை காவிரி நீர் இன்னும் செல்லவில்லை. கடலில் வீணாக சென்று கலப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

    காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் சீர்காழியில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய அளவு இல்லாததாலும் மழை பொய்த்து போனதாலும் முப்போகம் விளைந்த சீர்காழி பகுதியில் தற்போது ஒருபோகத்துக்கே வழி இல்லாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

    இந்தாண்டு கேரளா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்கு பயன்படாமல் பழையாறு பகுதியில் கடலில் வீணாக கலக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுபற்றி சீர்காழி பகுதியை விவசாயிகள் கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சரியான திட்டமிடல் இல்லை. காலம் கடந்த குடிமராமத்து பணி காரணமாக சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள பாசன ஆறுகள், வாய்க்கால்களில் பாலங்கள் கட்டும் பணியால் ஆற்றின் குறுக்கே மண் போட்டு தண்ணீர் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தான் காவிரி தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லை.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி நாங்கள் நிலங்களை உழுது செய்து தயார் நிலையில் இருந்தோம். ஆனால் ஆண்டுதோறும் விவசாயத்துக்கு பயன்படாமல் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதற்கு தடுப்பணைகள் கட்டுவது தான் ஒரே தீர்வு.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×