search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் இன்று காலை கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி
    X
    வேதாரண்யத்தில் இன்று காலை கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி

    வேதாரண்யத்தில் 2-வது நாளாக கடையடைப்பு: 50 பேர் கைது

    வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை உடைப்பு காரணமாக ஏற்பட்ட கலவரத்தில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் நேற்று மாலை 5.30 மணியளவில் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது, அங்கு நின்ற ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது24) என்பவர் மீது ஜீப் மோதியது.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பாண்டியராஜன், போலீஸ் நிலைய வளாகத்துக்குள் சென்று விட்டார்.

    இதன்பின்னர் போலீஸ் நிலையம் முன்பு நின்ற ஜீப்புக்கு ஒரு கும்பல் திடீரென தீ வைத்தனர். மேலும் இருதரப்பினரும் கைகளாலும், கம்புகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் ராமச்சந்திரனை, ஒரு தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயத்துடன் கிடந்த அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதற்கிடையே வேதாரண்யம் பகுதிக்கு வந்த கூத்த தேவன்காடு பாபுராஜன் (30), ராஜாளிகாட்டை சேர்ந்த சரத்குமார் (27) ஆகியோர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் நிலையம் எதிரே இருதரப்பும் மோதிக்கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காணப்பட்டது. போலீஸ் நிலையம் எதிரே ரோட்டில் கற்களும், கண்ணாடி துண்டுகளும் சிதறி கிடந்தன. மேலும் போலீஸ் நிலையம் மீது கற்களும் வீசப்பட்டன. வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் 2 ஆண் போலீசாரும், ஒரு பெண் போலீசார் மட்டும் இருந்ததால் அவர்களால் கலவரக் கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து வேதாரண்யம் பஸ் நிலையம் பகுதியில் ஒரு கும்பல், அங்கிருந்த அம்பேத்கார் சிலையை அடித்து நொறுங்கி சேதப்படுத்தினர்.

    மேலும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்குள் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்த ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து வன்முறையும் பதட்டமும் நிலவுவதால் உடனடியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் இருந்த வெளியூர் பயணிகள் பீதி அடைந்தனர். மேலும் கடைகளும் அடைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

    வேதாரண்யம் பகுதியில் கலவரம் குறித்து தகவல் கிடைத்ததும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் மற்றும் மாவட்ட சூப்பிரண்டுகள் நாகை ராஜசேகரன், திருவாரூர் துரை, டி.எஸ்.பி.கள் திருமேனி, முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

    நேற்று இரவு முதல் அதிவிரைவு படை வீரர்களும் வரவழைக்கப்பட்டு வேதாரண்யம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருச்சி ஐ.ஜி.வரதராஜூலு, வேதாரண்யத்துக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    கலவரம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் இன்றும் 2-வது நாளாக பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. வேதாரண்யம் பஸ் நிலையத்தில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேலும் வேதாரண்யம் பகுதியில் கடைகள் இன்றும் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. ஒருசில இடங்களில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

    இந்த கலவரம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 50 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறாவண்ணம் வேதாரண்யம் பகுதியில் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×