என் மலர்tooltip icon

    மதுரை

    • முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை வந்தார்.
    • பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக தேர்தல் ஆணையமும், எடப்பாடி பழனிசாமியும் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை வந்தார். அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி, நான் அவருக்கு தூது விட்டதாக கூறுவது அண்ட புழுகு, ஆகாச புழுகு. நான் அவருக்கு தூது விடவில்லை. திருச்சியில் நடத்தியது போல வேறு இடங்களிலும் மாநாடு நடத்தப்படும். விரைவில் அடுத்த மாநாடு குறித்த தகவலை வெளியிடுவேன்.

    பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விக்கு தேர்தல் ஆணையமும், எடப்பாடி பழனிசாமியும் தான் பதில் சொல்ல வேண்டும். அது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஓ.பன்னீர் ெசல்வத்தை மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.கோபால கிருஷ்ணன், முரு கேசன் மற்றும் மாநில இளைஞரணி வி.ஆர்.ராஜ்மோகன், கனிஷ்கா சிவக்குமார், கருப்பையா, கண்ணன், கிரி, மகாலிங்கம், வி.கே.எஸ்.மாரிச்சாமி, ஊராட்சி தலைவர் முத்தையா, மனோகரன், அர்ஜூனன், ஜெயக்குமார், ராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

    • மதுரை அருகே 10 வயது சிறுமிக்கு, முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
    • மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம், நேரு நகரை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 65). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவுக்கார பெண் குடும்பத்துடன் பழகி வந்தார். அவர் அடிக்கடி உறவினர் வீட்டுக்கு சென்று வருவார்.

    இந்தநிலையில் சண்முக நாதன், உறவுப்பெண்ணின் 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் சிறுமியிடம் இது பற்றி வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி இது தொடர்பாக யாரிடமும் சொல்லவில்லை.

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சண்முகநாதன் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் உறவுக்கார பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், இது தொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்தனர்.

    • மனுதாரரிடம் இருந்து குறிப்பிட்ட கால இடை வெளிகளில் வீட்டு வரி வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
    • அரசு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அரசு அதிகாரிகள் சட்டத்தை பொருத்திப் பார்க்காமல் விருப்பம் போல் வரியை வசூலிக்கின்றனர்.

    மதுரை:

    தேனியைச் சேர்ந்தவர் சையது அபுதாஹிர். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சட்டரீதியாக தனக்கு சொந்தமான 98 சதுர அடி நிலத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி அதிகாரிகள் அகற்ற முயல்வதாகவும், ஆகவே ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிடக் கோரி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேனி மாவட்ட கலெக்டர், சின்னமனூர் நகராட்சி ஆணையர் தரப்பில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில், மனுதாரரிடம் இருந்து குறிப்பிட்ட கால இடை வெளிகளில் வீட்டு வரி வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. தற்போது தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் சின்னமனூர் நகராட்சி ஆணையர் தரப்பில் அவை ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அரசு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அரசு அதிகாரிகள் சட்டத்தை பொருத்திப் பார்க்காமல் விருப்பம் போல் வரியை வசூலிக்கின்றனர். ஒருவர் ஆக்கிரமிப்பாளர் என தெரிந்த பின்பு அவருக்கு சொத்து வரியை விதிக்கக்கூடாது.

    வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் சட்ட அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து அரசு நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் தரப்பில் எதன் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடு செய்யப்படுகிறது? என நகராட்சி நிர்வாக துறையின் முதன்மைச் செயலர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
    • 500 கன அடி நீர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காகவும் திறக்கப்படுகிறது.

    மதுரை சித்திரை திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை (5ந் தேதி) நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 30ந் தேதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 750 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக நீர்வரத்து குறைக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் மதுரையை சென்றடைந்துள்ளது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 172 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 572 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதில் 72 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காகவும், 500 கன அடி நீர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காகவும் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 52.92 அடியாக உள்ளது. 272 கன அடி நீர் வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.10 அடியாக உள்ளது. 204 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.70 அடியாக உள்ளது. 71 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 84.30 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1, தேக்கடி 2, கூடலூர் 1.4, சண்முகாநதி அணை 1.2, உத்தமபாளையம் 1, போடி 3.2, வைகை அணை 13, சோத்துப்பாறை 9, மஞ்சளாறு 3, பெரியகுளம் 2.4, வீரபாண்டி 13, அரண்மனைபுதூர் 2.6, ஆண்டிபட்டி 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடக்க உள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக பக்தர்கள் விரதம் இருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறி, செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்களை கலந்து பீய்ச்சுவதால் சுவாமி, குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்களும், பக்தர்கள், பட்டர்கள், பணியாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

    மேலும் சிலர், தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை சுவாமியின் மீது பீய்ச்சுகின்றனர். இந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவின்போது பக்தர்கள் அதிக விசை உடைய குழாயை தோல் பையில் பொருத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டாம். விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய பைப் பொருத்தி திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காமல் சுத்தமான தண்ணீர் மட்டும் பீய்ச்சும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • மதுரை அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஒரு மூதாட்டியும், வாலிபரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது போலீசார் சோதனை செய்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சேடப்பட்டி அருகே உள்ள பெரியகட்டளை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தின் அருகே சென்றபோது ஒரு இருசக்கர வாகனம் வந்தது. அதில் ஒரு மூதாட்டியும், ஒரு வாலிபரும் இருந்தனர். அவர்களை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது 4கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் பெரிய கட்டளையை சேர்ந்த பூமா என்ற பூவம்மாள் (வயது61), வனராஜ்(32) என்பதும் தஞ்சை விளார் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து 3பேர் மீதும் சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவம்மாள், வனராஜை கைது செய்தனர்.

    • சோழவந்தானில் திரவுபதி சபதம் முடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
    • நாளை இரவு கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி விழா, அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி நடைபெறும்.

    சோழவந்தான்

    சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் 9-ம் நாள் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இரவு திரவுபதி வேடம் புரிந்து அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 4ரத வீதிகளிலும் வலம் வந்து வழிநடையே பொதுமக்கள் திரளாக கண்டு களித்தனர். துரியோதனனை குடல் உருவி மாலை போடும் பாவனை நிகழ்ச்சி, கூந்தல் முடித்து சபதம் முடித்தல் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மாலை பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) இரவு கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி விழா, அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறும். வெள்ளிக்கிழமை மாலை பட்டாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி, செயல் அலுவலர் இளமதி உள்பட பலர் செய்துள்ளனர்.

    • நொண்டி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
    • காஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நொண்டி கோவில்பட்டியில் அமைந்துள்ள நொண்டி கோவில் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று நொண்டி கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை மேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீ காஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து கிராம அம்பலகர்கள் முன்னிலையில் ஊர்வமாய் சேனல் ரோடு, ஆற்றுக்கால் வழியாக கோவிலை சென்றடைந்தனர். அங்கு சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

    • இளநீர் வாங்குவது போல் நடித்து மாணவரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிதாகபட்டியை சேர்ந்தவர் முத்தழகன். இவரது மகன் மரம்பதி(வயது17). பிளஸ்-2 மாணவர். இவர் கோடை விடுமுறையில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அவர் மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் உள்ள வல்லாளபட்டி பகுதியில் நேற்று இளநீர் விற்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இளநீர் வாங்குவது போல் நடித்து மரம்பதி சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் இளநீர் விற்ற பணம் ரூ.3 ஆயிரத்து 220 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி முத்தழகன் மேலவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவரிடம் பணம் பறித்த மேலூரைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    • திருமங்கலம் அருகே தி.மு.க. சார்பில் அன்னதானம் நடந்தது.
    • அய்யனார் சாமி, வெயில் உகந்த அம்மன் ேகாவிலில் எருதுகட்டு, குதிரை எடுப்பு பெருவிழா நடந்தது.

    திருமங்கலம்

    செங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் சாமி, வெயில் உகந்த அம்மன், முத்தையாசாமி கோவில் எருதுகட்டு, குதிரை எடுப்பு பெருவிழாவை முன்னிட்டு திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் ஏற்பாட்டில் சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் லதா அதியமான், திருமங்கலம் நகரச்செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன் அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், கவுன்சிலர் திருக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் பிரளயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு லிங்கம் மற்றும் நந்திக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர். சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது.

    தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பி.ஜே.பி. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம்.வி.எம்.குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் லயன் டாக்டர்.மருது பாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் சுவாமி கோவிலிலும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    • மதுரையில் இருந்து 50 வாகனங்களில் 1500 பேர் பயணம் செய்தனர்.
    • மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் 40-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு நாளை (5-ந் தேதி) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. தங்க கடற்கரையில் சுதேசி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் நான் (மைக்கேல்ராஜ்) தலைமை தாங்குகிறேன். சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து நாளை காலை 9.30 மணிக்கு கலைநிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து சுதேசி விழிப்புணர்வு மாநாடு கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நலத்திட்ட உதவி களை வழங்கி பேசுகிறார். இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னையில் நடக்கும் இந்த மாநாட்டில் மதுரை மண்டலத்தின் சார்பில் நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், ஸ்வீட் ராஜன், ஜெயக்குமார், தேனப்பன், வக்கீல் கண்ணன், , சுருளி, ஆன்ந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், வாசுதேவன், மூங்கில் கடை ரவி, பிச்சைப்பழம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை மண்டலத்தில் இருந்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் 50 வாகனங்களில் 1500-க்கும் மேற்பட்டோர் இன்று மாலை மாநாட்டிற்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. விழாவை யொட்டி மகாபாரதக் கதைக்கேற்ப கதாபாத்தி ரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதனை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதா னத்தில் தெளித்தனர்.

    பின்னர் பூ வளர்த்தனர் மாலை 2 மணியளவில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில் வந்து சேர்ந்தது. அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து அம்மன் சங்கங்கோட்டை கிராமம், முதலியார் கோட்டை கிராமம், ரெயில்வே பீடர் ரோடு வழியாக மார்க்கெட் ரோடு, நான்கு ரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.

    சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×