என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் சிறந்து விளங்குவது பெருமை.
    • வெற்றியை தவறவிட்ட மாணவர்கள் வரும் தேர்வில் சிறப்பாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் ஆகும். வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் சிறந்து விளங்குவது பெருமை. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வாழ்த்துகள்.

    வெற்றியை தவறவிட்ட மாணவர்கள் வரும் தேர்வில் சிறப்பாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     

    • திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜெயன் கல்லுபாலம் பகுதியில் கடை நடத்தி வந்தார்.
    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மதிய நேரங்களில் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

    வெப்பத்தின் தாக்கம் காரணமாக களியக்காவிளை அருகே திருத்துவபுரத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜெயன் (வயது 47). இவர் கல்லுபாலம் பகுதியில் கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு மனைவியும், 8 மாத கை குழந்தையும் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் பாதிக்கப்பட்ட மனோஜெயனை சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜெயன் பரிதாபமாக இறந்தார்.

    திருத்துவபுரத்தை அடுத்த மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் அச்சுதன் கலைமணி (47). முன்னாள் ராணுவ வீரர். தற்போது செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.

    மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்ற சந்தோஷ் (46), காய்கறி வியாபாரி. இவர் கடந்த 14-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் பலியானார். கோடை வெயிலின் தாக்கத்தால் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • 5-ம் நாளான நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • 4-ம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    கன்னியாகுமரி மாவட்டம், மங்காவிளை அருள்மிகு சிவசுடலை மாடசுவாமி திருக்கோவிலில் வைகாசி கொடை விழா நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாளான நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கி அவர் பாராட்டு தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் ஊர் நிர்வாக தலைவர், நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

    கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம், பூவங்காபறம்பு ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் சித்திரை பொங்காலை திருவிழா மற்றும் கொடைவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    • 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர்.
    • கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி சனிக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத் துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இருப்பினும் சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.

    133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் சீசன் களைகட்டி உள்ளது.
    • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இந்த படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த படகில் பயணம் செய்வதற்காக சாதாரண கட்டணமாக நபர் ஒன்றுக்கு தலா ரூ.75 வீதமும், கியூவில் காத்து நிற்காமல் நேரடியாக செல்வதற்காக சிறப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு தலா ரூ.300 வீதமும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தற்போது பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன் களைகட்டி உள்ளது. இதனால் மற்ற நாட்களை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பம்-குடும்பமாக கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

    இந்த சீசனில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். இந்த சீசன் நேரத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வட்டக்கோட்டைக்கு இயக்கப்படும் திருவள்ளுவர் சொகுசு படகை சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அதேபோல விவேகானந்தா படகையும் சின்னமுட்டத்தில் கரை ஏற்றி பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. இதனால் தற்போது குகன் மற்றும் பொதிகை படகு மட்டுமே விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் மாலை 4 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதால் அதன் பிறகு படகு துறைக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினம் தினம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்ல முடியாமலும் கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக்கூடிய அவலநிலை இருந்து வருகிறது. தினமும் மாலை 4 மணிக்கு பிறகு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை படகுத்துறைக்கு வந்து கண்ணாடி பாலத்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.

    பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காலங்களில் மட்டும் 3 நாட்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை படகு போக்குவரத்து கூடுதலாக 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதேபோல கோடை விடுமுறை சீசன் காலங்களில் மாலை 4 மணிக்கு பிறகு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை தவிர்க்கும் வகையில் கோடை காலம் முடியும் வரை படகு போக்குவரத்து நேரத்தை காலை 8 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 2 மணி நேரத்துக்கு முன்னதாக அதிகாலை 6 மணிக்கு தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    எனவே சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கோடை விடுமுறை சீசன் முடியும் வரை கண்ணாடி பாலத்தை பார்க்க படகு போக்குவரத்து நேரத்தை நீட்டிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்குமா? என்று மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

    அதன் எதிரொலியாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று முதல் படகு போக்குவரத்தை காலை 8 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக காலை 7 மணிக்கு தொடங்குவதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த படகு போக்குவரத்து நேரம் மாற்றம் கோடை கால சீசன் முடியும் நாளான ஜூன் 1-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று அதிகாலை 6.45 மணிக்கு படகு துறையில் உள்ள டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு படகு டிக்கெட் விநியோகம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து காலை 7 மணிக்கு தொடங்கியது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மிகுந்த ஆர்வத்துடன் படகில் பயணம் செய்தனர். இந்த படகு போக்குவரத்து நேர மாற்றத்தை கண்காணிப்பதற்காக சென்னையில் இருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர் (இயக்கம்) தியாகராஜன் இன்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    • 500-க்கும் மேற்பட்ட குளங்களில் வண்டல் மண் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருவட்டார் அருகே அருவிக்கரை மணக்குன்று சிற்றாறு பட்டணம் கால்வாய் பாயும் இடத்தில் உள்ள பெரும்குளத்தில் மண் எடுக்க அதே பகுதியை சேர்ந்த ராமையன் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.

    ராமையனுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இலவச அனுமதி சீட்டு பெறுவதற்கு ராமையன் ஒப்பந்ததாரரான பிரைட்டை அனுப்பி வைத்தார்.

    அப்போது பிரைட்டிடம் பொதுப்பணி துறை ஊழியர் ரசல்ராஜ் இலவச அனுமதி சீட்டு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரைட் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சால்வன்துரை, இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையிலான போலீசார் பிரைட்டிடம் ரசாயன பவுடர் தடவி பணத்தை கொடுத்து அனுப்பினார்கள். ரசல்ராஜிடம் பணம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரசல்ராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ரசல்ராஜ் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டதையடுத்து அவர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அவரை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட குளங்களில் வண்டல் மண் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன.
    • உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்துவிடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்து உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 15-ந்தேதி முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கிறார்கள்.

    இதனால் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கவில்லை. இந்த உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அந்நிய செலாவணி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    • திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர்.
    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர்.

    மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • விஷ்ணுபரத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் கிடைத்து விஷ்ணு பரத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடி வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணுபரத் (வயது 17). கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த அவன், பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தான்.

    தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அந்த பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவுக்கு நேற்று இரவு சென்று உள்ளான். அவர்கள் அனைவரும் கோவில் வளாகத்தின் அருகே நள்ளிரவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் சந்துரு (21) வந்தார். தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் இவர், பகுதி நேரமாக ஆட்டோவும் ஓட்டி வருகிறார். அவருக்கும், விஷ்ணுபரத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

    அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும் நடந்துள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சந்துரு, தான் ஓட்டும் ஆட்டோவின் சாவியோடு இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால் விஷ்ணுபரத்தின் விலா மற்றும் பின்பகுதியில் குத்தி உள்ளார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். ஆத்திரத்தில் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த சந்துரு பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது ஆட்டோவில் விஷ்ணு பரத்தை தூக்கி போட்டுக்கொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷ்ணு பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையில் மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் கிடைத்து விஷ்ணு பரத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடி வந்தனர். அப்போது சந்துரு, தனது ஆட்டோவில் விஷ்ணு பரத் உடலைக்கொண்டு வந்து வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.

    பள்ளி மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேரில் வந்து பலியான விஷ்ணு பரத்தின் உடலை பார்வையிட்டார். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் சந்துரு, நாளை நடைபெறும் திருவிழாவிற்கு நீ வரக்கூடாது என விஷ்ணு பரத்திடம் கூறியதாகவும், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பி ஓடிய சந்துருவை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் அவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று சந்துருவை கைது செய்ய கூடங்குளம் சென்றனர்.

    பின்பு அவரை கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-1 மாணவனை கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குருந்தன்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றினை விஜய் வசந்த் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நடைக்காவில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திபாகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    குருந்தன்கோடு அருள்மிகு காரிபள்ளி ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டார்.


    S. T. மங்காடு, பால்குளம் சி. எஸ். ஐ புதிய ஆலய அர்ப்பணிப்பு விழா மற்றும் சபை நாள் விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.


    கொடுப்பைக்குழியில் நடைபெற்ற குருந்தன்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் உட்பட ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
    • வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

    இன்று போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது. இதற்காக சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் போப் பிரான்சிஸூக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கிராம மீனவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் துறைமுகங்களில் 8,000 பைபர் படகுகள், 1,800 விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    • பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
    • சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார்.

    நாகர்கோவில்:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் காஷ்மீர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாகர்கோவில் நகர பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டர்கள் பொது இடத்தில் அமைதியை கெடுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதாக வடசேரி இன்ஸ்பெக்டர் லட்சுமணன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தை சேர்ந்த முருகன், வடசேரி வெள்ளாளர்கீழ தெருவை சேர்ந்த சுனில் அரசு (வயது32) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சுனில் அரசு நாகர்கோவில் மாநகராட்சியில் பா.ஜ.க. கவுன்சிலராகவும், வடக்கு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் மீது கடந்த வாரம் தான் வடசேரி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டின் பெயர் பலகை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முருகன் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

    ×