என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • போலி பெயர்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கி உள்ளனர்.
    • வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றவர்கள் முடிவு செய்யக்கூடாது.

    நாம் நமது தேசத்தின் 79வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நாளில், அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நம் தேசம் அடிமைத்தனத்தின் சங்கிலிகளை முறித்து, சுதந்திரத்தின் ஒளியை கண்டது. அந்த சுதந்திரத்தை பெற, எண்ணற்ற சுதந்திர வீரர்கள் தங்கள் உயிரையும், குடும்பத்தையும், சொத்தையும் தியாகம் செய்தனர்.

    இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் ஒவ்வொரு மூச்சிலும், அவர்கள் ரத்தமும், வியர்வையும், உறுதியும் கலந்திருக்கிறது. அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வது நமது கடமை. நான் பெற்ற இந்த சுதந்திரத்தைப் பாதுகாத்து, வளர்த்து அடுத்த தலைமுறைக்கு பெருமையாகக் கையளிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

    இன்று நாம் பிரிவினையை விட ஒற்றுமையையும், வெறுப்பை விட அன்பையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரிவினை மற்றும் வெறுப்பை விதைக்க நினைக்கும் சக்திகளை இனம் கண்டு தோற்கடிப்போம். நம் தேசத்தின் செழிப்பு, மக்களின் ஒற்றுமை, இளைஞர்களின் முன்னேற்றம், பெண்களின் உரிமைகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன் இவை அனைத்தும் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

    சுதந்திர இந்தியாவில் நமக்கு கிடைத்த உரிமைகளை பறிக்க முயற்சிகள் நடக்கிறது. நமது அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட கேள்விகுறியாக உள்ளது. நமது உரிமைகளை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துவோம்.

    இந்த சுதந்திர தினத்தில், நம் தேசத்தை நீதியிலும் சமத்துவத்திலும் வளர்க்க உறுதிபடுவோம்.

    "நாடு முதலில், நாமெல்லாம் ஒன்றாக" இந்த உணர்வோடு முன்னேறுவோம்.

     

    முன்னதாக இந்திய அரசியல் சட்டத்தை அழிக்க நினைக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு வட்டாரத் தலைவர் பொன். பால் துரை தலைமை தாங்கினார், கண்டன பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தேர்தல் ஆணையம் போட்டோவை பயன்படுத்தி போலி பெயர்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கி உள்ளனர். அதேபோல பல இடங்களில் வாக்காளர்களை சேர்த்தும், நீக்கியம் உள்ளனர். இப்படி நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. இதற்கான தெளிவான விளக்கம் வேண்டுமென ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு தேர்தல் கமிஷன் மற்றும் பாஜக-வினர், கண்டுகொள்ளாமல் தட்டிக் கழிக்கின்றனர். அவர்கள் ராகுல் காந்தி அவர்கள் பொய் கூறுகிறார்கள் எனவும் பேசி வருகின்றனர். ஓட்டு நமது அடிப்படை உரிமை, அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது. ராகுல் காந்தி அவர்கள் குரல் கொடுப்பது அவருக்காக அல்ல, நமக்காக பேசி வருகிறார்.

    இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென கூறியபோது மத்திய அரசு விவாதிக்க மறுத்துவிட்டது. தேர்தல் கமிஷனரிடம் கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கவில்லை, எல்லா மாவட்ட தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இது குறித்து குரல் கொடுப்பார்கள் அதேபோல மக்களாகிய நீங்களும் ஏதோ இது ஒரு கட்சி கூட்டம் அல்லது நிகழ்ச்சி என நினைக்காமல் இந்தப் போலி வாக்கு சேர்ப்பதன் பின் விளைவுகள் குறித்து நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், இல்லையென்றால் உங்களது ஓட்டு உரிமைகளும் போய்விடும், பீகாரை சேர்ந்த ஆறு லட்சம் பேரை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்த்துள்ளனர். அதேபோல 15 லட்சம் பேரை அவர்கள் சேர்க்கும் போது நிலைமை என்ன ஆகும், தமிழகத்தில் இவ்வாறு வாக்காளர்களை சேர்க்கும் போது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என நாம் தான் முடிவு செய்ய வேண்டும், வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றவர்கள் முடிவு செய்யக்கூடாது.

    நாம் தெளிவாக இருக்க வேண்டும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலை நம்முடைய பூத்களில் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா என்பதனை பார்க்க வேண்டும். ராகுல் காந்தி அவர்கள் பாரத் ஜோட யாத்திரை நடந்த போது அவர் நடந்து சென்று விடுவாரா என கேலி செய்தனர். எப்படி நடந்து விடுவார் பார்க்கலாம் என கூறினர்.

    அந்த யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கப்பட்டது. அந்த யாத்திரைக காங்கிரஸ் கட்சி மீது மதிப்பும், காங்கிரஸ் கட்சி மீது பற்றுதலும் மக்களுக்கு ஏற்பட்டது. தமிழக அரசு பெண்களுக்கு உரிமை தொகை, பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, மகளீர் இலவச பேருந்து பயணம் என்ன பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. எனவே இந்த நல்லாட்சி தொடர நாம் உறுதுணையாக இருப்போம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம்.

    முன்னதாக பேருந்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் பொதுமக்களின் வசதிக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நிதியில் பயோ கழிவறை அமைக்கப்பட்டது. அந்தக் கழிவறை தற்போது பயன்பாடின்றி காணப்படுகிறது.

    அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, குறித்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் பிரம்மசக்தி, நகராட்சி பொறியாளர் குறள்செல்வி, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகளை நேரில் அழைத்து அதனை பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    கூட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில பேச்சாளர்கள் குமரி மகாதேவன், அந்தோணி முத்து, கிழக்கு மாவட்ட தலைவர் கே டி உதயம், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஆண்டனி விஜிலியஸ் உட்பட பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

    • பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
    • கூட்டத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-

    மார்த்தாண்டம் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி அதிகாரிகளுடன் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெய்வத்திரு வசந்தகுமார் அவர்களின் முயற்சியால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் அமைந்துள்ள பொது கழிப்பறை மக்களால் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி அதை மக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் செய்ய கேட்டுக் கொண்டார்.

     

    மேலும் மார்த்தாண்டம் நகரின் அனைத்து கழிவு நீர்களும் அட்டைகுளம் கால்வாய் வழியாக கொல்லன் குளத்தில் கலப்பது குறித்தும் அட்டைக் குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அதிகாரிகளுடன் சென்று காந்தி மைதானத்தில் உள்ள கழிப்பறை வசதியை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     

    குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் ஜனநாயகத்தை அழிக்க துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக விஜய் வசந்த் எம்.பி. குரல் கொடுத்தார்.

    திருவட்டார் பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் காங்கிரஸ் கட்சி மீதும், தலைவர் ராகுல் காந்தி மீதும் நம்பிக்கை கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வசந்த் எம்.பி. வரவேற்றார்.

    • விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • முன்னதாக கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்தது.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சூரிய உதயம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று ( ஆகஸ்ட் 08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த நிலையில், https://www.psckfs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • நாட்டுப்படகு, வள்ளம் போன்றவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
    • மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழில் செய்வதற்காக தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் குறுகலாக அமைக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று புகார்கள் எழுந்து உள்ளன. எனவே பாலத்தை மேலும் நீட்டித்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனை வலியுறுத்தி கன்னியாகுமரியை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மற்றும் வள்ளம் மீனவர்கள் சுமார் 5ஆயிரம் பேர் இன்று "திடீர்" என்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அனைத்தும் சின்ன முட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல நாட்டுப்படகு, வள்ளம் போன்றவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் வரத்தும் அடியோடு நின்று விட்டது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மீன் சந்தைகள் களையிழந்து கிடக்கின்றன. மீன் வரத்து குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்விலையும் "கிடுகிடு" என்று உயர்ந்து உள்ளது.

    • மணல் பரப்பு முழுவதும் கடல் நீராக காட்சி அளித்தது.
    • கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. ராஜாக்கமங்கலம் அருகே லெமூர் கடற்கரை பகுதியில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. இதனால் ராட்சத அலைகள் கடற்கரையை தாண்டி உள்ள பகுதிகளில் புகுந்தது. அந்த பகுதியில் இருந்த கோவிலுக்குள் கடல்நீர் சூழ்ந்தது.

    அங்கு வைக்கப்பட்டிருந்த கடைகளையும் தண்ணீர் சூழ்ந்தது. மணல் பரப்பு முழுவதும் கடல் நீராக காட்சி அளித்தது. இதையடுத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று 2-வது நாளாகவும் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. ராட்சத அலைகள் அவ்வப்போது எழும்பி வருகின்றன. இதனால் இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குமரி மேற்கு மாவட்டம் பகுதிகளிலும் கடல் இன்று சீற்றமாக இருந்தது. 

    • குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கண்டன உரை.
    • பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு விருது.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிந்துள்ளதாவது:-

    புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கடலரிப்பினால் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட ஆட்சியருடன் சென்று ஆய்வு செய்தோம். இங்கு, தடுப்பு சுவர் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்று வரும் தொடர் பரப்புரை தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். 

    மாவீரர் தீரன் சின்னமலை அவர்கள் நினைவு தினத்தில் அவர் நமது தாய் நாட்டிற்கு ஆற்றிய ஒப்பற்ற சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்வோம். 

    இந்திய அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.

    நாகர்கோவில் பட்டு வளர்ப்பு அலகில் பல்நோக்கு கட்டிடம் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவீன் குமார் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடங்கி வைத்தோம். 

    பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் வசந்த் & கோ கல்வி விருதுகள் 2025 இன்று குமரி மாவட்டம் மேற்கு பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 

    முளகுமூடு குழந்தை ஏசு மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • வழக்கறிஞர் அமர போடப்பட்டிருந்த நாற்காலியில் அருணாச்சலம் அமர்ந்துள்ளார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 36). இவர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக உள்ளார்.

    இவர் மீது கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்குக்காக அருணாச்சலம் நாகர்கோவில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாவது மாடியில் செயல்படும் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை சட்டம்) சிறப்பு அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது வழக்கறிஞர் அமர போடப்பட்டிருந்த நாற்காலியில் அருணாச்சலம் அமர்ந்துள்ளார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் அங்கு அமரக்கூடாது எனக் கூறினார்கள். இதையடுத்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

    அப்போது நீதிமன்ற அலுவலர், அருணாச்சலத்திடம் அமைதி காக்க கூறினார். அவரிடமும் அருணாச்சலம் வாக்குவாதம் செய்தார். அங்கு வந்த கோட்டார் போலீசார் அருணாச்சலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சிறப்பு நீதிமன்ற சிரஸ்தார் சிபு, கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் அருணாச்சலத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அருணாச்சலத்தை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • காதலன் விக்னேசுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்து விட்டதாக தெரிவித்தார்.
    • பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    தக்கலை:

    குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29), லேத் பட்டறை தொழிலாளி. இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நாகூர்பாளையம் பகுதியை சேர்ந்த ஜனனிஸ்ரீ (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஜனனிஸ்ரீக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அப்போது அவர் தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 27-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனிஸ்ரீ, பஸ் மூலம் தக்கலை வந்துள்ளார்.

    பின்னர் தனது காதலன் விக்னேசுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து விக்னேஷ் தக்கலை சென்று ஜனனிஸ்ரீயை சந்தித்தார். பின்னர் அவரை அழைத்துச் சென்று 28-ந் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மறுநாள் காதல் ஜோடியினர், தக்கலை போலீஸ் நிலையம் வந்து சரண் அடைந்தனர்.

    அப்போது அவர்கள் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு இந்துக் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அதனை பதிவு செய்ய இருப்பதாகவும், இதற்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினர். இதனை தொடர்ந்து இருவரது குடும்பத்திற்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் வந்ததும் பேச்சுவார்த்தை நடந்தது.

    பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜனனிஸ்ரீயை போலீசார் காதல் கணவர் விக்னேசுடன் அனுப்பி வைத்தனர். 

    • தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுமா? அல்லது யாருடனாவது கூட்டணி அமைத்து களம் இறங்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
    • நமது கழகத்தின் வெற்றி வாகையை முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இருந்து ஆரம்பமாகட்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய், 2-வது மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி எதிர்கொள்ளும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுமா? அல்லது யாருடனாவது கூட்டணி அமைத்து களம் இறங்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று த.வெ.க. கட்சியினர் சுவரொட்டி ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் நகரில் பல இடங்களில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. அதில், 2026-ல் மக்கள் விரும்பும் முதல்வராக பதவியேற்க இருக்கும் எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் விஜய் அவர்களே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அழைக்கின்றோம்.

    நமது கழகத்தின் வெற்றி வாகையை முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இருந்து ஆரம்பமாகட்டும் என குறிப்பிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார்.
    • உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார். தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார். எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வந்துள்ளார்.

    அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு உள்ளார்.

    இந்தநிலையில் நேற்று காலையில் அதிக சளி தொல்லையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, உடல் பருமனை குறைக்க முறையாக அங்கீகாரம் பெற்ற சிறப்பு டாக்டர்களை அணுகி அவர்களின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே உடல் பயிற்சி உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கிடையே இறந்த மாணவரின் இரு கண்களையும் பெற்றோர் தானம் செய்துள்ளனர்.

    யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை 42 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் அமாவாசை தினங்களில் கடல் சீற்றமாக காணப்படும். குறிப்பாக ஆனி, ஆடி மாதங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும். தற்போது ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில் அமாவாசையும் நாளை வருகிறது. இதனால் இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் ராட்சத அலைகள் எழும்பி யது. ராஜாக்கமங்கலம் துறை அருகே புத்தன் துறை பகுதியில் இன்று காலை 3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பின. கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அலையின் வேகம் அதிகமாக உள்ளதால் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களை அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்று வருகிறது.புத்தன் துறை பகுதியில் கடற்கரையொட்டி உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி கடற்கரை பகுதிகளில் அச்சத்துடன் நின்றனர். சிலர் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். மேற்கு மாவட்ட பகுதிகளான வள்ளவிளை, தூத்தூர், இரயுமன்துறை பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதியில் உள்ள தடுப்பு மீது வேகமாக மோதியது. சொத்தவிளை, சங்குத்துறை கடற்கரை பகுதியில் கடல் சீற்றமாக இருந்தது. வழக்கத்தைவிட அலைகள் கடற்கரை யொட்டியுள்ள பகுதி வரை வந்து சென்றன. கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நாளை ஆடி அமாவாசையையொட்டி கடற்கரை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக வருகை தருவார்கள். எனவே அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடற்கரை பகுதியில் கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.

    • ரூ.14.80 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தேன்.
    • வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஜய் வசந்த்.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் நேற்று மற்றும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் கல்வி விருது வழங்கும் விழா நேற்று மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. 

    சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், டாக்டர் தாரகை கத்பட், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூரிய பிரகாஷ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினோம்.

    நெய்யூர் பேரூராட்சி பாதிரிகோட்டில் ஒரு அங்கன்வாடி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.80 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தேன். 

    மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட 100% மானியத்தில் காய்கறி மற்றும் பழச்செடிகளின் தொகுப்புகளை இன்று வழங்கினேன்.

     நேற்று சென்னை திருவேற்காடு நாடார் சங்கம் சார்பில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×