கடல் சீற்றம் நீடிப்பு: லெமூர் கடற்கரை பகுதிக்கு செல்ல 2-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

மணல் பரப்பு முழுவதும் கடல் நீராக காட்சி அளித்தது. கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 லெமூர் கடற்கரையில் அலைகள் ஆக்ரோஷமாக அடித்த காட்சி.
 லெமூர் கடற்கரையில் அலைகள் ஆக்ரோஷமாக அடித்த காட்சி.
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. ராஜாக்கமங்கலம் அருகே லெமூர் கடற்கரை பகுதியில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. இதனால் ராட்சத அலைகள் கடற்கரையை தாண்டி உள்ள பகுதிகளில் புகுந்தது. அந்த பகுதியில் இருந்த கோவிலுக்குள் கடல்நீர் சூழ்ந்தது.

அங்கு வைக்கப்பட்டிருந்த கடைகளையும் தண்ணீர் சூழ்ந்தது. மணல் பரப்பு முழுவதும் கடல் நீராக காட்சி அளித்தது. இதையடுத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று 2-வது நாளாகவும் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. ராட்சத அலைகள் அவ்வப்போது எழும்பி வருகின்றன. இதனால் இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குமரி மேற்கு மாவட்டம் பகுதிகளிலும் கடல் இன்று சீற்றமாக இருந்தது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com