என் மலர்
கன்னியாகுமரி
- ராமரின் வாழ்க்கை குணாதிசயங்களை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- நீங்கள் போடும் ஓட்டு நமக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வைகுண்டபுரத்தில் பழமையான ஸ்ரீராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சமய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:
உலகத்தில் கடவுள் வந்து ராஜாவாக இருந்து ஆட்சி செய்து ஆட்சி இருக்க வேண்டும் எனக் காட்டியவர் கடவுள் ராமர். இதனால் ராமராஜ்ஜியம் என சொல்கிறோம். ராமர் மனிதனாக இருந்து ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுள்ளார்.
மக்களாட்சியில் இருக்கும்போது மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமர் ஒரு இலக்கணம். அநியாயம் நடந்தபோது எப்படி நடந்து கொண்டார். சட்ட திட்டத்தை எப்படி காப்பாற்றினார். அவருடைய தந்தை கொடுக்கிறேன் என சொன்ன பதவியை கொடுக்காதபோது எப்படி நடந்து கொண்டார்? என்பதை பார்க்க வேண்டும்.
பகலில் போனால் மக்கள் தடுப்பார்கள் என்பதற்காக இரவில் காட்டுக்கு சென்றார். ராமர் வாழ்க்கையில் ஒரு ஒரு விஷயமும் ஒரு குணத்தை சொல்லி கொடுக்கிறது. தம்பியிடம், பெற்றோரிடம், மன்னராக எப்படி நடந்து கொண்டார். எதிரியாக இருந்தாலும் எப்படி சண்டை போட்டார்? யுத்தத்தை எப்படி நடத்தினார்? என்பதையும் பார்க்க வேண்டும்.
ராமரின் வாழ்க்கை குணாதிசயங்களை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஸ்ரீராமரை போல் இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு அவரது பெயரை வைக்கிறோம். கடவுளின் குணாதிசயங்கள் வர வேண்டும் என்பதற்காக.. இதனை செய்கிறோம்.
தமிழகத்தில் இருக்கும் ஆட்சி ஊறுகாய் அளவுக்கு கூட ராமராஜ்ஜியமாக இல்லை. குடும்பத்தில் எப்படி ராமர் இருந்தார் என்பதற்கும், இன்று ஆட்சியாளர்கள் குடும்பம் இன்று அவர்களே ஆட்சியாக இருக்கிறார்கள் என்பதற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எங்கேயோ ஒரு இடத்தில் யாருக்கோ ஒரு பிரச்சனை வந்தால் மன்னர் துடிப்பார்.
ஆனால், தற்போது மக்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்களா? என்றால் கிடையாது. ஆட்சியாளர்கள், மக்களிடம் எப்படி பேச வேண்டும். என்ன பேசினால் கேட்பார்கள் என்பதில் 100 மார்க் வாங்கிவிட்டார்கள்.தேர்தலின் போதும், ஓட்டு வாங்கும்போது, தேர்தல் முடிந்து ஓராண்டுக்கு பிறகும் எப்படி பேச வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு தெரியும்.
அரசியல்வாதி 5 ஆண்டுகளில் பேசுவதை பார்க்க வேண்டும். ஓட்டு வாங்கிய பிறகு ஏளனமாக இருப்பார்கள். 3-வது வருடத்தில் இருந்து பக்கத்தில் வந்து விடுவார்கள். 5-வது ஆண்டில் ஊர்விழா, தெரு விழாவுக்கு வந்து விடுவார்கள். எப்படி நயமாக பேசி ஓட்டை வாங்க வேண்டும் என்பதில் தமிழகத்தில் சில அரசியல்வாதிகள் பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு தெளிவாகி விட்டார்கள்.
அவர்களால், அவர்களுக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும் ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது. அனைவரும் சிந்தித்து ஓட்டு போட வேண்டும். எந்த கட்சி எப்படிப்பட்ட தலைவன் என்ன மாற்றத்தை கொடுக்க போகிறார் என சிந்திக்க வேண்டும்.
நீங்கள் போடும் ஓட்டு நமக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது. உங்களுக்கான ஓட்டை உங்கள் பெற்றோர்கள் ஓட்டு போட்டு விட்டனர். நீங்கள் எப்படி, ஒரு மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதை உங்களின் தந்தையும், தாயும் ஓட்டுப்போட்டு விட்டனர். இன்றைக்கு நீங்கள் ஓட்டுப்போடுவது உங்கள் குழந்தைகளுக்கானது. எப்படிப்பட்ட மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக ஓட்டுப்போட உள்ளீர்கள்.
எந்த மாற்றமும் 5 ஆண்டுகளில் நடக்காது. சனாதன தர்மத்தை பேணி காக்க வேண்டும் என நினைத்தால், ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
சனாதன தர்மத்தை பேணிக்காக்க வேண்டும் என்று நினைத்தால், வாக்களிக்கக்கூடியவர்களாகிய சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் நீங்கள், யார் சனாதன தர்மத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்று வாக்களிக்கும் முன் ஒரு முறை நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் சமீபத்தில் பேசும்போது, கடவுளின் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு அரசியல் கட்சி அரசியல் செய்கிறது என்று கூறினார். விநாயகர் சிலையை உடைத்தது யார்? ராமர்பாலத்துக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்று கூறியபோது ராமர் என்ன என்ஜினீயரா என்று கேட்டது யார்?
கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசியபோது கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது யார்? சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட மாநாட்டு மேடையில் நம்முடைய கட்சியை சேர்ந்தவர்கள் ஏறினார்களா?
முதலமைச்சரின் மகன் ஏறினாரா? டெங்கு கொசுவை ஒழிப்பது போன்று சனாதன தர்த்தை ஒழிப்போம் என்று கூறியது நாமா அல்லது முதலமைச்சரும் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த அவரது மகனா?
குழந்தைகளுக்கு சனாதன தர்மத்தை முழுமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும். கம்பராமாயணத்தை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சஷ்டி தினத்தில் கந்த சஷ்டி கவசத்தை பாட வைக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு மகா பாரதத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நமது குழந்தைகளுக்கு இன்று 8-ம் வகுப்பில் நீட் பயிற்சி, 6-ம் வகுப்பில் சிவில் சர்வீஸ் பயிற்சி கொடுக்கிறோம். இந்த வயதில் அந்த குழந்தைகளுக்கு அவற்றை பற்றியெல்லாம் தெரியுமா? இவற்றையெல்லாம் சொல்லிக்கொடுத்தபிறகு அந்த குழந்தை, எவ்வளவு படித்தாலும் தந்தை, தாயை சரியாக பராமரிப்பது கிடையாது.
வியர்வை, ரத்தத்தை கொடுத்து சனாதனத்தை காப்பாற்றியவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ளனர். மதமாற்றத்தை பற்றிய விவரத்தை முழுமையாக அறிந்தவர்கள் இங்கு உள்ளனர். எந்த மதமும் நமக்கு போட்டி கிடையாது. அவரவர் மதம் அவரவர்களுக்கு பெரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டியது.
- தொடர் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரண்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மயிலாடி, நாகர்கோவில், தக்கலை, கோழிப்போர் விளை, மாம்பழத்துறையாறு, ஆணைக்கிடங்கு ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 105.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.
கொட்டாரம், பூதப்பாண்டி, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு, களியல், குழித்துறை, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டியது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரும் நிலையில் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதி யிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளின் நீர்மட்டத்தை பொது பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.பெருஞ்சாணி அணை இன்று காலை 70 அடியை எட்டியது. அணைக்கு 762 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.45 அடியாக உள்ளது.
அணைக்கு 1319 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 753 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 131 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 13.02 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 45.93 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.40 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 9.2 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோழிப்போர்விளை 105.8, மயிலாடி 92.4, ஆணைக்கிடங்கு 84.2, மாம்பழத்துறையாறு 78, நாகர்கோவில் 74.4, தக்கலை 72, அடையாமடை 52, குருந்தன்கோடு 26, கொட்டாரம் 62.8, கன்னிமார் 18.6, ஆரல்வாய்மொழி 6, பூதப்பாண்டி 26.2, முக்கடல் 24, பாலமோர் 33.6, இரணியல் 16, களியல் 16, குழித்துறை 63.4, பேச்சிப்பாறை 19.6, பெருஞ்சாணி 29.6, புத்தன்அணை 29, சுருளோடு 36.2, திற்பரப்பு 34.6, முள்ளங்கினாவிளை 38.2.
தொடர் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரண்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.
தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்து வருகிறது.
- ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) சார்பாக 'இளம் இந்திய பாராளுமன்றம்' நிகழ்ச்சி நடைபெற்றது.
- இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) சார்பாக 'இளம் இந்திய பாராளுமன்றம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்தார்.
- காலையில் கனமழை விடாமல் பெய்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர்.
- பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.21 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்றும் பல இடங்களில் கனமழை கொட்டியது.
நாகர்கோவிலில் இன்று காலை வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. காலை 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கியது. பின்பு அவ்வப்போது கனமழை கொட்டியபடி இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை, கோட்டார் சாலை, அசம்பு ரோடுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
காலையில் கனமழை விடாமல் பெய்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். சுசீந்திரம், அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்று மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியிலும் மழை பெய்தது.
சிற்றாறு 1-ல் அதிகபட்சமாக 60.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
ஏற்கனவே அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே குழித்துறை ஆறு, கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.21 அடியாக இருந்தது. அணைக்கு 1,285 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதகுகள் வழியாக 753 கன அடி தண்ணீரும், உபரிநீராக 131 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று 69.45 அடியாக இருந்தது. அணைக்கு 900 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழையின் காரணமாக சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருக்கின்றன.
மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டி நிரம்பி வழிகின்றன. தொடர் மலையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரங்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 40.6, பெருச்சாணி 19.8, சிற்றாறு1-60.4, சிற்றார்2-24.2, மயிலாடி 3.6, நாகர்கோவில் 3.4, கன்னிமார் 33.6, ஆரல்வாய்மொழி 10.4, பூதப்பாண்டி 16.4, முக்கடல் 20.2, பாலமோர் 31.6, தக்கலை 2.4, குளச்சல் 4, இரணியல் 6, அடையாமடை 22.2, மாம்பழத் துறையாறு 12, ஆணைக்கிடங்கு 11.6, களியல் 18, குழித்துறை 2.4, புத்தன்அணை 19.6, சுருளோடு 22.6, திற்பரப்பு மற்றும் முள்ளங்கினாவிளை 10.8.
- காட்டுப்பகுதிக்குள் செல்லாமல் யானை நின்று கொண்டிருந்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- யானை ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பூதப்பாண்டி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதியான மோதிரமலை, குற்றியார் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. இந்தநிலையில் இன்று காலையில் யானை ஒன்று அந்த பகுதியில் உள்ள மரங்களை சேதப்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது.
அதில் பங்குதந்தை வசித்து வருகிறார். இன்று காலை அங்கு வந்த யானை அவர் தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த பங்குத்தந்தை தொலைபேசி மூலமாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் யானையை விரட்டினார்கள். ஆனால் யானை செல்லவில்லை. இதையடுத்து பட்டாசுகளை வெடித்து யானை அங்கிருந்து விரட்டினார்கள். அங்கிருந்து சென்ற யானை சிறிது தூரம் சென்று நின்று கொண்டிருந்தது. காட்டுப்பகுதிக்குள் செல்லாமல் யானை நின்று கொண்டிருந்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
யானை ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் யானை திடல், தெள்ளந்தி பகுதிகளில் விளை நிலங்களை சேதப்படுத்திருந்த நிலையில் தற்போது கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் புகுந்து சேதப்படுத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரடி ஒன்று புகுந்து பொது மக்களை அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- கார் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கார்கள் சர்வீஸ் செய்வதற்கும் பழுது நீக்குவதற்கும் கொண்டு வரப்படும். நேற்று 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளிகள் 2 பேர் பணியில் இருந்தனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் கார் ஷோரூமில் இருந்து திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த காவலாளிகள் அங்கிருந்த தீயணைப்பு கருவி மூலமாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

தீ மளமளவென்று பரவியது. காரில் இருந்த பெட்ரோல் டீசல் டேங்கில் வெடித்து சிதறியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. உடனே காவலாளிகள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தீ வேகமாக எரிந்து கொண்டு இருந்தது. தீயை கட்டுப்படுத்த அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். 2 தீயணைப்பு வண்டிகளில் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். 4 வண்டிகளில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்க முயன்றனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சர்வீஸ் ஸ்டேஷன் நிறுத்தப்பட்ட 16 கார்கள் எரிந்து சேதமடைந்தது.

காரின் இருக்கைகள் உள்பட அனைத்து பகுதிகளும் எரிந்து சேதம் ஏற்பட்டது. தீயில் எரிந்து சாம்பலான கார்கள் எலும்புக்கூடுகள் போல உள்ளது. 25-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் இன்றி தப்பியது. இது பற்றி தகவல் அறிந்ததும் நேசமணிநகர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கார் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
- மார்த்தாண்டம் JCI சார்பில் இன்று ஆற்றூரில் நடைபெற்ற ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தேன்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தூத்தூர் சின்னதுறை புனித ஜூட் விளையாட்டு குழு சார்பில் நடைபெற்ற மாநில மின்னொளி கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அணிகளை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கினேன்.

திருவட்டார் கிழக்கு வட்டார ஆற்றூர் பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு புது நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்தினேன்.
முன்னதாக ஊர்வலமாக சென்று காங்கிரஸ் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று காலை என்னை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

ஈரான் இஸ்ரேல் போர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஈரானில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குமரி மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளேன்.
மார்த்தாண்டம் JCI சார்பில் இன்று ஆற்றூரில் நடைபெற்ற ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தேன்.

சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற குமரி கிழக்கு மற்றும் நாகர்கோவில் மாநகர நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டினை தெரிவித்து கொண்டேன்.

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பெருமையை விளக்கியும், பாஜக வின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்தும் நடக்க இருக்கும் தொடர் பரப்புரை பிரச்சார கூட்டத்தை தொடங்கி வைத்தேன்.

மாநகர மாவட்ட தலைவர் திரு.நவீன் குமார் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இறங்கி உள்ளதால் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- மீனவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
நாகர்கோவில்:
தமிழக மீனவர்கள் உலகின் பல்வேறு பகுதி களுக்கும் சென்று ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகின்றனர். குறிப் பாக வளைகுடா நாடுகளில் இவர்கள் அதிக அளவு மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து தனியார் ஏஜண்டுகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கேயே தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அதன்படி ஈரான் நாட்டுக்குச் சென்ற மீனவர்கள், அங்குள்ள தீவுகளில் தங்கி ஆழ்கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
இதில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களான தூத்தூர், இனயம், குறும்பனை, குளச்சல், முட்டம் மற்றும் நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்புளி, இடிந்த கரை, கூத்தன்குழி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அதிக அளவு வெளிநாடுகளில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.
ஈரான், இஸ்ரேல் நாடுகளிலும் அவர்கள் தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஈரானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான ஜீரோ, கிஷ் தீவு, அசலுயே, லாவா தீவு, கம்கு, ஸ்டாரக் ஆகிய இடங்களில் உள்ள துறை முகங்களை மையமாக கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது அங்கு போர் நடந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தங்கி உள்ள மீனவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். குறிப்பாக ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இறங்கி உள்ளதால் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் இஸ்ரேல் நாட்டிலும் குமரி உள்ளிட்ட தமிழக மீனவர்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.
எனவே அவர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய வெளியுறவு அமைச்சகம், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மீனவர்களின் பட்டியல் தயாரித்து, அவர்களை மீட்க மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும் என்று அவர்களும், மீனவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி., தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே ஈரானில் இருந்து தமிழக மீனவர்களை மீட்டது போல் மீனவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற இந்திய தூதரகம், மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த 35-க்கும் மேற்பட்ட வாழை இனங்கள் அழிந்து வந்தன.
- விளைச்சல் குறைவால் தென்னை விவசாயிகள் கவலைப்படுகிறோம். அதற்கு பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது.
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் "மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்" கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் காவேரி கூக்கூரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் திட்ட விளக்கவுரையாற்றி பேசுகையில் "ஈஷா காவேரி கூக்குரலின் மரம் சார்ந்த விவசாய கருத்தரங்குகள், தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளின் அறிவியலையும், முன்னோடி விவசாயிகளின் அனுபவ அறிவையும் இணைத்து எளிய விவசாயிகளுக்கு தரும் வகையில் நடத்தப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் மத்தியில் பெருமளவில் ஆதரவு கிடைத்து வருகிறது.
மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மர விற்பனையை ஒழுங்குபடுத்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய 'டிம்பர் வளர்ச்சி வாரியம்', தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 'மிளகு கொடி விநியோகம்' மற்றும் தடையில்லா 'சந்தன மர விற்பனை' ஆகிய 3 கோரிக்கைகளை அமைச்சர் மூலம் அரசுக்கு முன்வைக்கிறோம்." எனக் கூறினார்

இதனைத் தொடர்ந்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "இன்றைக்கு நிலைத்த நீடித்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனை விவசாயத்தில் இருந்துதான் துவங்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு வல்லுனர்கள், வெற்றி விவசாயிகள் கலந்து கொள்ளும் இக்கருத்தரங்கு காலத்தின் தேவை என்றே கூற வேண்டும். இதில் பெருமளவில் திரண்டு இருக்கும் விவசாயிகளுடன் கலந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.
சமூக காடுகள் பெருமளவில் அழிந்து வருவது, நெகிழி குப்பைகளை அலட்சியமாக ஆறுகளில் கொட்டுவது, நிலத்தடி நீர்மட்டம் குறைவது ஆகியன கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டு இருக்கின்றன. இவை நம் முன் இருக்கும் சவால்கள். இவற்றை சமாளிக்க நாம் இயற்கை சார்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த 35-க்கும் மேற்பட்ட வாழை இனங்கள் அழிந்து வந்தன. நான் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் துறை அதிகாரிகளுக்கு அவற்றை மீட்க வேண்டுமென கூறினேன். தற்போது அரசு பழத் தோட்டத்தில் 35 ரக வாழை இனங்கள் நிற்கின்றன. காவேரி கூக்குரல் சார்பில் முன்வைக்கப்பட்டு இருக்கும் 3 கோரிக்கைகளை துறை சார்ந்த அமைச்சரிடம் எடுத்துச் செல்ல உறுதுணையாக இருப்பேன்" என்றார்.
தென்னைக்குள் பல அடுக்கு, பல பயிர் விவசாயம் மூலம் சாதனை படைத்த முன்னோடி விவசாயி வள்ளுவன் பேசுகையில், "விளைச்சல் குறைவால் தென்னை விவசாயிகள் கவலைப்படுகிறோம். அதற்கு பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது. வறட்சி, மழைப்பொழிவு என மாறி மாறி வரும் போது, தென்னை போன்ற ஒரு பயிர் சாகுபடி, விவசாயிக்கு நஷ்டமாக உள்ளது. ஈஷா மண் காப்போம் இயக்கம் பலபயிர் சாகுபடியால் தென்னைக்கு பாதிப்பில்லை என்பதை புரிய வைத்தனர். தற்போது, தென்னைக்குள் ஊடுபயிராக ஜாதிக்காய், வாழை, மரப்பயிர்கள், பாக்கு போன்றவற்றை சாகுபடி செய்து வருமானம் பெற முடிகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் எளிதாகக் கிடைக்கிறது" என்றார்.
முன்னோடி ஜாதிக்காய் விவசாயி சொப்னா சிபி கள்ளிங்கள் பேசுகையில், "தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மிளகு, வாழை மற்றும் காய்கள், பழங்கள் என 25 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறோம். ஜாதிக்காய் விளைச்சலுக்கு தாமதமானாலும், அது தரும் வருமானம் அதிகமானதாக இருக்கும். மலைப்பிரதேசம், சமவெளிகளிலும் நன்றாக விளையக் கூடியது ஜாதிக்காய். விவசாயிகள் நலனுக்காக ஈஷா செயல்படுகிறது. விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பசுமையை ஏற்படுத்தும் ஈஷாவுக்கு பாராட்டுகள்." என்றார்.
சமவெளியில் ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானி ஆர்த்தி பேசுகையில், "ஜாதிக்காய் பசுமையான பகுதிகளில் வளரக்கூடியது. அதற்கான தேவையான சூழலை உருவாக்கி விட்டால் எங்கும் அதனை வளர்க்க முடியும். நல்ல விளைச்சல் தரக்கூடிய பல ரகங்கள் தற்போது கிடைக்கின்றன." என்றார்.
தொடர்ந்து, ஜாதிக்காய் சாகுபடி குறித்து இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் கண்டியண்ணன், முகமது பைசல் மீரான் மற்றும் அவகோடா சாகுபடி குறித்து இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி செந்தில்குமார், பூச்சிகள் குறித்து பூச்சி செல்வம், தேனீ வளர்ப்பு மூலமாக வருமானம் அதிகரிப்பு குறித்து மதுரையைச் சேர்ந்த ஜோஸ்பின் மேரி ஆகியோர் விளக்கி பேசினர்.
- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
- 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது.
ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
பின்னர் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
நம் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேக் கின் இந்தியா என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. அதை வேகப்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து பணி வேகமாக நடக்கிறது. மழை காரணமாக வேலை தாமதம் ஏற்பட்டது. வேகப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது. வெற்றி கூட்டணியாக உள்ளது. தேர்தல் தொடர்பாக தலைவர்களை சந்தித்து அதற்கான நல்ல முடிவை தருவார்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதிக இடங்கள் கேட்டு கோரிக்கை வைப்போம்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக முடிவு செய்யப்படும்.
தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளார்கள். அங்கு வெளியிடவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது.
அந்த தீர்ப்பை அரசியலாக்க கூடாது. அரசியலாக்காமல் திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும். ஒரு சில கருத்துக்களுக்காக ஒரு திரைப்படத்தை தடை செய்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமாவளவனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருக்கிறார்.
- தமிழகத்தில் எப்போதுமே பா.ஜ.க கால் ஊன்ற முடியாது.
கன்னியாகுமரி:
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கன்னியாகுமரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வெகு காலமாக ஒன்றிணைந்து பயணிக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருக்கிறார். பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இப்போது முருகனை கையில் எடுத்து உள்ளோம். அடுத்து தமிழகத்தை கையில் எடுப்போம் என்று கூறி உள்ளார்.
தமிழகத்தில் எப்போதுமே பா.ஜ.க கால் ஊன்ற முடியாது. அது எக்காரணத்தைக் கொண்டும் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கன்னியாகுமரி வந்த கனிமொழி எம்.பி.யை, அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சரும் தமிழக உணவு ஆணைய தலைவருமான சுரேஷ் ராஜன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
- உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது.
- தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பரவலாக சாரல் மழை நீடித்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழை சற்று குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து உள்ளது. நீர்வரத்து குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
526 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 394 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் இன்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.44 அடி யாக இருந்தது. அணைக்கு 861 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 503 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 394 கன அடி தண்ணீர் உபரியாகவும் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. அணைக்கு 761 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.






