என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மற்றொரு அதிர்ச்சி சம்பவம்: திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
    X

    மற்றொரு அதிர்ச்சி சம்பவம்: திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    • நிதின் ராஜ் சரிவர வேலையில்லாமல் இருந்து வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டனர்.

    நாகர்கோவில்:

    கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜெமலா (வயது 26). இவர் பி.எஸ்.சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம்புத்தன்துறையை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர்.

    இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இருவீட்டு சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. பின்னர் ஜெமலாவும், நிதின் ராஜும் மேல்மிடாலம் அருகே கூண்டுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்தனர். நிதின் ராஜ் சரிவர வேலையில்லாமல் இருந்து வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் ஜெமலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதாக அவரது பெற்றோருக்கு நிதின் ராஜ் உறவினர்கள் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து கருங்கல் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஜெமலாவின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜெமலாவின் தாயார் புஷ்பலதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில், எனது மகளுக்கும் நிதின் ராஜிக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரூ.7 லட்சம் பணமும், 50 பவுன் நகையும், வீட்டுக்கு தேவையான பொருட்களும் கொடுத்தோம். திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டனர்.

    எனது மகளை கணவர், மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது மகள் என்னிடம் எப்படியாவது பணத்தை ரெடி செய்து தருமாறு கூறினார். நான் எனது செயினை அடகு வைத்து ரூ.5 லட்சம் கொடுத்தேன். இனி எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று சமாதானம் செய்தேன். மேல்மிடாலம் பகுதியில் வீடு ஒன்றும் வாங்கி கொடுத்தோம்.

    எனது மகளை அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது மகள் கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற தடம் உள்ளது. எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே எனது மகள் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெமலாவின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு அமர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெமலா சாவு குறித்து பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவரது கணவர் மற்றும் உறவினரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக கடந்த 28-ந்தேதி திருப்பூரை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா என்பவர் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    Next Story
    ×