என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • இன்று காலையில் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
    • காலை 10.45 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    பிரதமர் மோடி இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார். அங்கு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு தனிப்படகில் செல்கிறார். அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து அவர் தியானம் செய்கிறார். வரும் 1-ம் தேதி மாலை வரை 3 நாட்கள் தரையில் அமர்ந்து பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுகிறார். இதற்காக அங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு நேற்று முதலே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலையிலும் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் முகவரிகளை குறித்துவிட்டு போலீசார் அனுப்பி வைத்தனர். காலை 10.45 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து ஏற்கனவே சென்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி படகு தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விவேகானந்தர் மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி கடலின் நடுவே பாறையில் 3 நாட்கள் தவம் இருந்த சுவாமி விவேகானந்தர்

    சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம் செய்தபோது 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி வந்தார். அவர் குமரிக்கடலின் நடுவே இருந்த ஸ்ரீபாத பாறையில் தவம் செய்யவேண்டும் என விரும்பினார். இதற்காக அவர் அங்கிருந்த மீன்பிடி படகோட்டியிடம் அங்குள்ள பாறையில் இறக்கிவிட முடியுமா? என்று கேட்டார். அதற்கு பணம் கொடுத்தால் படகில் ஏற்றி பாறையின் அருகில் கொண்டு விடுகிறேன் என்று படகோட்டி கூறியுள்ளார்.

    பணம் இல்லாததால் கடலுக்குள் அப்படியே குதித்த சுவாமி விவேகானந்தர் அலைகளுக்கு இடையே நீந்திச்சென்று அந்த பாறையில் அமர்ந்து தவம் செய்தார். அதாவது டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 3 நாட்கள் தவம் இருந்தார். அப்படி சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில்தான் தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. கடற்கரையில் இருந்து நேராக 1,350 அடி தூரத்தில் இந்தப் பாறை அமைந்துள்ளது.

    இந்த தியான மண்டபத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 1-ம் தேதி வரை 3 நாட்கள் தியானம் இருக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கன்னியாகுமரி கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும் எந்த தடையும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • கன்னியாகுமரியில் பிரதமர் செல்லும் இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு இன்று மாலை வரும் பிரதமர் நரேந்திர மோடி, கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் பாறைக்கு தனிப்படகில் செல்கிறார். அங்கு உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து அவர் தியானம் செய்கிறார். வருகிற 1-ந்தேதி மாலை வரை 3 நாட்கள் தரையில் அமர்ந்து மோடி தியானத்தில் ஈடுபடுகிறார். இதற்காக அங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு நேற்று முதலே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையிலும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் முகவரிகளை குறித்து விட்டு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காலை 10.45 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து ஏற்கனவே சென்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி படகு தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விவேகானந்தர் மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை விவேகானந்தர் மண்டபத்திற்குள் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பிரதமர் வருகையை அடுத்து கடற்கரை பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    அதேபோல கன்னியாகுமரி கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும் எந்த தடையும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி உள்ள கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுஉள்ளது. கன்னியாகுமரிக்கு பஸ் போக்குவரத்தும் வழக்கம் போல் இயக்கப்படும். கன்னியாகுமரியில் பிரதமர் செல்லும் இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாலை மார்க்கம் மட்டுமின்றி கடல் மார்க்கத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் மூலமாகவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி கடல் பகுதியில் வானில் ஹெலிகாப்டர் சுற்றி வந்த படி உள்ளது.

    • ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும், மற்றொரு அறையில் சமையல் அறையும், மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • பிரதமர் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அறையில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது.

    கன்னியாகுமரி:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் போது பிரசாரம் முடிவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் தேர்தல் முடிவடைந்த போது அவர் தியானம் மேற்கொண்டார்.

    அதேபோல் தற்போதும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அவர் கன்னியாகுமரியில் கடல் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்கிறார்.

    இதற்காக அவர் இன்று வாரணாசியில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக திருவனந்தபுரத்திற்கு வருகிறார். அங்கிருந்து பிற்பகல் 3:55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். இங்கு அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் இருந்து தனி படகு மூலமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார்.

    அங்கு முதலில் விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்குள்ள தியான மண்டபத்திற்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார்.


    வருகிற 1-ந்தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்து பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தங்குவதால் அங்கு மூன்று அறைகள் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது.

    ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும், மற்றொரு அறையில் சமையல் அறையும், மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அறையில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது.

    ஜூன் 1-ந்தேதி மதியம் 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனி படகு மூலமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்திற்கு வருகிறார்.


    அங்கிருந்து கார் மூலமாக ஹெலிகாப்டர் தளத்திற்கு மாலை 3:25 மணிக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். மாலை 4:05 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகாசி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், 4 டி.ஐ.ஜி.கள் மற்றும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    களியக்காவிளை, அஞ்சு கிராமம் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

    கடலோர பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    விவேகானந்தர் மண்டபத்தை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் கடல் பரப்பளவு பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் மற்றும் கப்பற் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சத்தியகிரீசுவரர் சிவாலயமும், சத்தியமூர்த்திப் பெருமாள் கோவிலும் மிகவும் புகழ்பெற்ற தலங்களாகும்.

    இந்த கோவிலின் அருகே கோட்டையின் கீழ்ப்பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி தனி கோவில் கொண்ட பைரவர் தலம் இது ஒன்றே ஆகும்.

    இந்த கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவருக்கு அபிஷேகம், வடமாலை, சந்தனகாப்பு செய்து நெய்தீபம், மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் விலகும்.

    பிதூர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எலுமிச்சம் பழமாலை சூட்டி எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதூர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    இன்று (வியாழக்கிழமை) தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு மத்திய மந்திரி அமித்ஷா சாமி தரிசனம் செய்ய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) வாரணாசியில் இருந்து மாலை 3.20 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.

    பின்னர் அவர் மாலை 3.25 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் திருமயம் காலபைரவர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் மாலை 5.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் மாலை 5.25 மணி அளவில் தனி விமானம் மூலம் திருப்பதிக்கு செல்கிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு திருமயத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோட்டை கால பைரவர் கோவில் மற்றும் சத்தியகிரீசுவரர் கோவிலில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார்.
    • விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல்.

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார்.

    பிரதமர் மோடி மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

    மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், "தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் எனவும் பிரதமரின் இந்நிகழ்ச்சியினால் உலகம் முழுவதும் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தற்போது கோடை விடுமுறை என்பதால் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
    • விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்த போதிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி நாளை(30-ந்தேதி) வருகிறார்.

    இதையடுத்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இன்று காலை டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் படகு தளத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் விவேகானந்தர் மண்டபத்திலும் பிரதமர் தியானம் செய்யும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது கோடை விடுமுறை என்பதால் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    அவர்கள் மற்றும் அவர்களின் உடமைகளை போலீசார் மெட்டல் டிரெக்டர் மூலம் சோதனை செய்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் அடையாள அட்டை, பெயர், முகவரி ஆகியவற்றை பதிவு செய்த பிறகே விவேகானந்தர் மண்டபத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்த போதிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    பிரதமர் வருகையையடுத்து நாளை முதல் 3 நாட்கள் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி நாளை மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார்.
    • பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் இன்று காலை கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வருவதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் சென்று இருந்தனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு பிரதமர் மோடி செல்வதற்காக 3 படகுகள் தயார் நிலையில் உள்ளன.
    • பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் மோடியின் இந்த தியானம் அரசியல் களத்திலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    இதற்கான தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. இதன் பின்னர் ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. பிரதமர் மோடியே 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடையும் நேரங்களில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாகவே வைத்துள்ளார். 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தபோதும் அவர் தியானம் மேற்கொண்டார். 2014-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் என்ற இடத்தில் தியானம் செய்த பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு இமயமலையில் கேதார்நாத் குகைக்கு சென்று காவி உடையில் தியானம் மேற்கொண்டார். இதன் பின்னர் கேதார்நாத் குகை பிரதமர் மோடி தியானம் செய்த குகை என்கிற பெயருடன் மேலும் பிரபலம் அடைந்தது.

    அந்த வகையில் பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தல் முடிவடையும் வேளையில் தியானம் செய்வதற்காக இந்த முறை தமிழகத்தை தேர்வு செய்துள்ளார்.

    தியானம் என்றவுடன் அனைவரது எண்ணத்திலுமே விவேகானந்தரின் சாந்த முகமே தோன்றும். அதிலும் கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானம் செய்வதற்கு அனைவருமே விரும்புவார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி தேர்தல் முடிவடையும் நேரத்தில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்தார். இதற்காக பிரதமர் மோடி நாளை மாலை டெல்லியில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு நாளை மாலை 4.45 மணி அளவில் கன்னியாகுமரியை வந்தடைகிறார். அங்கு பா.ஜனதா முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்கிறார்கள்.

    பின்னர் சுற்றுலா மாளிகை ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து படகு இல்லத்துக்கு காரில் செல்லும் பிரதமர் மோடி தனி படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை சென்றடைகிறார். நாளை மாலை 6 மணி அளவில் அங்கு சென்று விடும் பிரதமர் தொடர்ந்து 3 நாட்கள் அங்கேயே தங்குகிறார். வருகிற 1-ந்தேதி மாலை 3.30 மணிக்கே விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து அவர் வெளியே வருகிறார். இதன் மூலம் பிரதமர் மோடி 2 நாள் இரவை விவேகானந்தர் மண்டபத்திலேயே கழிக்கிறார்.

    விவேகானந்தர் மண்டபத்துக்கு பிரதமர் மோடி செல்வதற்காக 3 படகுகள் தயார் நிலையில் உள்ளன.


    இதில் பிரதமர் மோடியுடன் அவரது அருகில் நின்று பாதுகாப்பு பணியை மேற்கொள்ள சில அதிகாரிகள் மட்டுமே பயணம் செய்ய உள்ளனர். விவேகானந்தர் மண்டபத்தை சென்றடைந்ததும் நாளை மாலை 6 மணிக்கே பிரதமர் மோடி தியானத்தை தொடங்கி விடுகிறார்.

    இதன்பிறகு 1-ந் தேதி மாலை 3 மணி வரையிலும் அவர் தியானம் மேற்கொள்கிறார். இதன் மூலம் தொடர்ந்து 45 மணி நேரம் பிரதமர் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் 1892-ம் ஆண்டு தொடர்ச்சியாக 3 நாட்கள் தியானம் செய்தார். அதன்பிறகே அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு புகழ் பரப்பும் வகையிலான ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அதனை நினைவூட்டும் விதத்திலேயே பிரதமர் மோடியும் 3 நாட்கள் தொடர் தியானத்தில் ஈடுபடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் மோடியின் இந்த தியானம் அரசியல் களத்திலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொடர் தியானத்தின் போது இளநீர் உள்பட நீர் ஆகாரங்களையே பிரதமர் மோடி பருக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் குளிர்சாதன வசதி கிடையாது. மின் விசிறிகள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும். பிரதமர் மோடி தியானம் செய்வதையொட்டி தியான அரங்கில் புதிதாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. 2 டன் ஏ.சி. கொண்டு வரப்பட்டு பொறுத்தப்பட்டது.

    இதேபோன்று பிரதமர் தங்குவதற்காக அங்குள்ள அறை ஒன்றிலும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர விவேகானந்தர் மண்டபத்தில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத் துறை ஊழியர்களும் தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர்.



    பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 ஆயிரம் போலீசார் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில் 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

    டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் கன்னியாகுமரியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். கடலோர காவல் படையினரும், கப்பல் படையினரும் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ராணுவ கப்பலில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல் பகுதியில் மீனவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள 42 மீனவ கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு நாளை முதல் 3 நாட்கள் தடை விதிக்கப்பட உள்ளது. இன்று வழக்கம் போல படகு போக்குவரத்து நடைபெற்றது. இருப்பினும் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.

    நாளை மாலையில் இருந்து 1-ந்தேதி மாலை 3.30 மணி வரை விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகள் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினரின் முழு காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது. லாட்ஜுகள், தங்கும் விடுதிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தனது தியானத்தை முடித்துக் கொண்டு ஜூன் 1-ந்தேதி ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

    • பிரதமர் மோடி விவேகானந்தர் பாறைக்கு பயணம் செய்வதற்காக தனி படகு புது பொலிவுடன் தயாராகி வருகிறது.
    • படகில் இரவு-பகலாக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி நாளை (30-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்கிறார். இதையொட்டி பிரதமர் மோடி விவேகானந்தர் பாறைக்கு பயணம் செய்வதற்காக தனி படகு புது பொலிவுடன் தயாராகி வருகிறது.

    இந்த படகில் இரவு-பகலாக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 1-ந்தேதி வரை தியானத்தில் ஈடுபடுகிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நாளை மாலை 3.55 மணிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 4.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறார்.

    கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர் கார் மூலம் படகு தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து தனி படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்கிறார். 3 நாட்கள் தியானத்திற்கு பின்பு 1-ந்தேதி தியான மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார். பின்பு படகு மூலம் கரை திரும்பும் பிரதமர் மோடி மாலை 3.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்றவற்றில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரியில் நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஹெலிகாப்டர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் தரையிறங்கி விட்டு மீண்டும் திருவனந்தபுரத்துக்கு சென்றது.

    கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொண்டனர். விவேகானந்தர் மண்டபத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதனை செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளதையடுத்து நாளை முதல் ஜூன் 1-ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சாரல் மழை பெய்ததையடுத்து சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கோடை விடுமுறை முடிந்து வருகிற 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை நிறைவடைவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண்பதற்கும், சூரியன் மறைவதை பார்ப்பதற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்த நிலையில் சூரிய உதயம் மற்றும் மறைவதை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமான ஒரு கடற்கரையில் குவிந்திருந்தனர்.

    ஆனால் இன்றும் சாரல் மழை பெய்ததையடுத்து சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பல மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையை கண்டுகளிக்க சென்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதையடுத்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி மட்டுமின்றி திற்பரப்பு அருவியிலும் இன்று சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பத்மநாபபுரம் அரண்மனையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சொத்தவிளை பீச், முட்டம் பீச், சங்குத்துறை பீச், வட்டக்கோட்டை பீச் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    • தமிழ்நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக அளவு மழை இந்த 3 மாதத்தில் கொட்டி தீர்த்துள்ளது.
    • பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 52.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மார்ச் 1-ந்தேதி முதல் நேற்று வரை கடந்த 3 மாதத்தில் குமரி மாவட்டத்தில் 451.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பாக 281.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் அதிகமான அளவு மழை கொட்டி தீர்த்துள்ளது. தமிழ்நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக அளவு மழை இந்த 3 மாதத்தில் கொட்டி தீர்த்துள்ளது.

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளிலும், சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பாசன குளங்களும் மாவட்டம் முழுவதும் நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்து இருந்த நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது பெய்தது.

    இதுபோல் தக்கலை, இரணியல், கொட்டாரம், மயிலாடி, குழித்துறை, திற்பரப்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலையில் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 52.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.20 அடியாக இருந்தது. அணைக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.80 அடியாக உள்ளது. அணைக்கு 424 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 15.15 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.25 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.20 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 30.43 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 13 அடியாகவும் உள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் 10 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியல் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். இன்று காலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியல் குளித்து மகிழ்ந்தனர். மழையும் அங்கு பெய்து கொண்டிருந்த நிலையில் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    • மழையின் அளவு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்தது.
    • பேச்சிப்பாறை அணைக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து மதகுகள் வழியாகவும், உபரியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டியதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையின் அளவு மாவட்டத்தில் படிப்படியாக குறைந்தது. நேற்று காலை நாகர்கோவில், இரணியல் மற்றும் மலையோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் தூறலாகவே மழை இருந்தது. அதிக பட்சமாக முள்ளங்கினா விளையில் 16.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. அடையாமடைல் 6.2, குருந்தன்கோட்டில் 5.2, பெருஞ்சாணியில் 3.4 மில்லிமீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது.

    இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பேச்சிப்பாறை அணைக்கு 625 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 44.97 அடி நீர்மட்டம் உள்ளது. மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 58.25 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 434 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 12.4 அடியாக உள்ளது.

    ×