என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • தரையில் உடைந்து கிடந்த ராஜீவ்காந்தி சிலையை மீட்டு துணியால் சுற்றி பாதுகாத்தனர்.
    • தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    ஆரல்வாய்மொழி:

    கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே லாயம் விலக்கு பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டு இருந்தது. 1992-ம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர்களில் ஓருவரான ஜி.கே.மூப்பனார் இந்த சிலையை திறந்து வைத்தார். ராஜீவ்காந்தியின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று இந்த சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

    ராஜீவ்காந்தி சிலை அருகே டீக்கடையும் செயல்பட்டு வந்தது. இதனால் காலை முதல் இரவு வரை அங்கு மக்கள் கூட்டம் இருக்கும். இன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் டீ கடைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு ராஜீவ்காந்தி சிலை உடைந்து கீழே கிடந்துள்ளது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலை அருகே உள்ள கடையும் சேதமாகி காணப்பட்டது.

    ராஜீவ்காந்தி சிலையை யாரோ உடைத்து சேதப்படுத்தியதாக தகவல் பரவ, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். காங்கிரஸ் கட்சியினரும் அங்கு வந்தனர். இதனால் காலையிலேயே பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    தரையில் உடைந்து கிடந்த ராஜீவ்காந்தி சிலையை மீட்டு துணியால் சுற்றி பாதுகாத்தனர். விசாரணையில் வாகனம் மோதியதில் ராஜீவ்காந்தி சிலை சேதம் அடைந்து இருக்கலாம் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் நாகர்கோவில்-நெல்லை சாலையில் பாரம் ஏற்றப்படாத டாரஸ் லாரி வேகமாக வருவதும் அந்த லாரி, ராஜீவ்காந்தி சிலை மற்றும் டீக்கடையில் மோதிவிட்டு நிற்காமல் செல்வதும் தெரியவந்தது.

    ராஜீவ்காந்தி சிலை உடைந்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவர் செல்லமணி, ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டாரஸ் லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு டாரஸ் லாரியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    டாரஸ் லாரி மோதி, ராஜீவ்காந்தி சிலை உடைந்த சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஊராட்சி அதிகாரிகள் இந்த கழிவுகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும்.

    குழித்துறை:

    தமிழக-கேரளா எல்லைப்பகுதி வழியாக தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.

    அடிக்கடி கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் காலியான சரக்கு வாகன ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த மாநிலத்தில் இருந்து மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் அவலநிலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும் அவ்வப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கழிவுகள் கொட்டி வரும் சம்பவம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் குமரி-கேரளா எல்லை சோதனை சாவடி வழியாக நள்ளிரவில் கேரளாவில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் புழுக்களுடன் இறைச்சி கழிவுகள் ஏற்றி வரப்பட்ட வாகனத்தை குழித்துறை அருகே விளவங்கோடு ஊராட்சி ஈத்தவிளை பகுதியில் வைத்து ஊர் மக்கள் மடக்கி சிறைபிடித்தனர்.

    இது குறித்து தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., களியக்காவிளை போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து அறிந்த விளவங்கோடு ஊராட்சி தலைவர் லைலா ரவிசங்கர், மேல்புறம் ஒன்றிய கவுன்சில் ரவிசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஊராட்சி அதிகாரிகள் இந்த கழிவுகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இந்த வாகனத்தை களியக்காவிளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை மீண்டும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, கேரளாவில் இருந்து எல்லை பகுதிகள் வழியாக இரவு நேரங்களில் வரும் டிப்பர், கண்டெய்னர் லாரிகள் மற்றும் டெம்போக்களில் கழிவு பொருட்கள் கொண்டு வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி செல்கின்றனர். இதனை தடுக்க கூடுதல் தனிப்படை போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும், மேலும் அவ்வாறு கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு நிறுத்தாமல் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், எல்லை பகுதியில் ஒரு சில போலீசாரை மட்டும் வைத்து பணி மேற்கொண்டால் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடைபெறும்.

    எனவே அப்பகுதியில் கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும் என கூறினர்.

    • தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.
    • பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர் குரல் கொடுத்த கமல்ஹாசனுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி அடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.


    அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.

    மேலும் இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்து பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர் குரல் கொடுத்த கமல்ஹாசனுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

    • விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதி விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    இதற்கிடையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தினார்கள். இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள். இதையடுத்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து மீன்பிடி தடைகாலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று மாலை முதல் சின்னமுட்டம் துறைமுகத்தில் தயாராக நின்ற விசைப்படகுகளில் டீசல் நிரப்பினார்கள். மேலும் படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களை பதப்படுத்தி வைத்து கொண்டு வருவதற்காக ஐஸ் கட்டிகளை நிரப்பினர்கள். அதன்பிறகு இன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

    இன்று ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த விசைப்படகுகள் அனைத்தும் ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு இன்று இரவு 9 மணி முதல் கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, கைக்கொழுவை, நெடுவா, கணவாய், திருக்கை, கிளாத்தி, நவரை போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பிடித்துக்கொண்டு வரும் உயர்ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    இந்த ஆண்டு முதல் வெளியூர் வியாபாரிகளும் நேரடியாக மீன் கொள்முதல் செய்யலாம் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் 2 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை கட்ட தொடங்கிவிட்டது.

    • தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.
    • குமரிக்கு வருகை தந்து எழுச்சிமிகு பிரசாரம் செய்ததற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி அடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.

    அந்த வகையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.

    மேலும் தேர்தல் பிரசாரத்திற்காக குமரிக்கு வருகை தந்து எழுச்சிமிகு பிரசாரம் செய்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

    • தாரகை சுத்பெர்ட் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
    • சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 12.6.2024 தலைமைச் செயலகத்தில், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி தாரகை சுத்பெர்ட் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.


    உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன்


    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    • காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
    • மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.


    மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ் நாடு பொறுப்பாளர் அஜோய் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஶ்ரீ வல்ல பிரசாத், முன்னாள் மாநில தலைவர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளார்.

    • கோடை விடுமுறை சீசன் முடிந்த நாளான நேற்று வரை 60 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.
    • அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கன்னியாகுமரி:

    புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

    இந்த ஆண்டும் கோடை விடுமுறை சீசனையொட்டி கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறை சீசன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஏராளமானோர் திரண்டு சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் படகில் சென்று பார்வையிட்டனர். மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, கலங்கரை விளக்கம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச், விவேகானந்தபுரத்தில் பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் உள்ள உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கோடை விடுமுறை சீசனையொட்டி கடந்த 2½ மாதங்களில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து உள்ளனர். இதில் 3 லட்சத்து 84 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே விவேகானந்தர் நினைவு மண்டத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 43 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், மே மாதம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 300 சுற்றுலா பயணிகளும், கோடை விடுமுறை சீசன் முடிந்த நாளான நேற்று வரை 60 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.

    கோடை விடுமுறை சீசனின் கடைசி நாள் அன்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.

    • பாராளுமன்ற குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எங்களை இரு அவைகளிலும் வழி நடத்துவார்.
    • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த விருந்தில் கலந்து கொண்டோம்.

    கன்னியாகுமரி

    விஜய்வசந்த் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    அன்னை சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ்  பாராளுமன்ற குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எங்களை இரு அவைகளிலும் வழி நடத்துவார். அவரது ஆளுமை மிகுந்த தலைமை மக்களின் குரலை பாராளுமன்றத்தில் எதிரொலிக்க செய்ய எங்களுக்கு ஊக்கம் அளிக்கும். நன்றி அன்னை அவர்களே என்று கூறியுள்ளார்.


    அன்னை சோனியா காந்தி அவர்கள் புதிதாக வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த விருந்தில் கலந்து கொண்டோம். தலைவர் ராகுல் காந்தி, திருமதி பிரியங்கா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ் நாடு பொறுப்பாளர் திரு அஜோய் குமார், மாநில தலைவர் திரு செல்வ பெருந்தகை மற்றும் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர் என்றும் கூறியுள்ளார்.

    • கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்தது.
    • மீனவர்கள் கடலில் இறக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.

    இந்த காலங்களில் விசைப்படகு கள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை, திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தடை அமலுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப் பட்டது.

    இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இதற்கிடையில் இந்த மீன்பிடி தடை காலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.

     இதைத் தொடர்ந்து இந்த மீன்பிடி தடைகாலம் முடி வடைய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் விசைப் படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர்.

    மீனவர்கள் தங்களது பழுதடைந்த விசைப்படகுகளை சின்ன முட்டத்தில் உள்ள படகு கட்டும் தளத்தில் கரையேற்றி படகுகளின் உடைந்த பகுதியை சீரமைத்து வந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் இறக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். பச்சை நிற வர்ணம் தீட்டு வது, பழுதான என்ஜின்களை சீரமைப்பது போன்ற பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள். மீன்பிடி தடைகாலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைய இருப்பதை தொடர்ந்து வருகிற 15-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.

    இந்த விசைப்படகுகள் அன்று இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், திருக்கை, கைக்கொழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    2 மாதங்களுக்கு பிறகு வருகிற 15-ந்தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டது.

    • அகஸ்தீஸ்வரம், மயிலாடி, அஞ்சுகிராமம், சுசீந்திரம் பகுதிகளில் கனமழை பெய்தது.
    • மழைக்கு நேற்று 3 வீடுகள் இடித்து விழுந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் பரவலாக மழை பெய்த நிலையில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. கொட்டாரம் பகுதியில் நேற்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 5 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது. இடைவிடாது கொட்டிய கனமழையின் காரணமாக அந்த பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. சாமி தோப்பு, முகிலன் குடியிருப்பு, அகஸ்தீஸ்வரம், மயிலாடி, அஞ்சுகிராமம், சுசீந்திரம் பகுதிகளில் கனமழை பெய்தது. கொட்டாரத்தில் அதிகபட்சமாக 103.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    குருந்தன்கோடு, நாகர்கோவிலிலும் நேற்று இரவு விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் இருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்தவாறு சென்றனர். குருந்தன்கோடு, குளச்சல் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. திற்பரப்பு, ஆணைக்கிடங்கு, கன்னிமார், தக்கலை, இரணியல் பகுதிகளிலும் விட்டுவிட்டு இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. விடிய விடிய கொட்டி தீர்த்த மழையின் காரணமாக சானல்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் மீதமுள்ள குளங்கள் நிரம்பி வருகிறது.

    விவசாயிகள் சாகுபடி பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.19 அடி யாக இருந்தது. அணைக்கு 670 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 535 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.80 அடியாக உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 15.10 அடியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக குலசேகரம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தோவாளை, செண்பக ராமன்புதூர் பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    மழைக்கு நேற்று 3 வீடுகள் இடித்து விழுந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 17.4, பெருஞ்சாணி 16, சிற்றாறு 1-40.2, சிற்றாறு 2-17, கன்னிமார் 6.4, கொட்டாரம் 103.4, மயிலாடி 74.6, நாகர்கோவில் 78.2, ஆரல் வாய்மொழி 3, பூதப்பாண்டி 10.2, பாலமோர் 10.6, தக்கலை 29.6, குளச்சல் 66, இரணியல் 56.4, ஆணை கிடங்கு 16, குருந்தன்கோடு 91, கோழிப்போர்விளை 24.8, மாம்பழத்துறையாறு 12, களியல் 16.2, குழித்துறை 12, புத்தன் அணை 17.4, சுருளோடு 7, ஆணைகிடங்கு 11.4, திற்பரப்பு 36.8, முள்ளங்கினாவிளை 32.6.

    ×