என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பிரதமர் மோடி பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்தார்.
    • சுவாமி விவேகானந்தரும் இந்த பாறையில் தியானம் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    3 நாட்கள் தியானம் முடித்து புறப்பட்ட பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்தார்.

    இந்தியாவின் கடைசி முனையான கன்னியாகுமரியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமான உணர்வை அனுபவித்து வருகிறேன். பார்வதியும், சுவாமி விவேகானந்தரும் இந்த பாறையில் தியானம் செய்திருந்தனர். பின்னர் ஏக்நாத் ரானடே அவர்கள் இந்த கல் நினைவகத்தை அமைத்து விவேகானந்தரின் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்தார்.

    ஆன்மீக வளர்ச்சியின் முன்னோடியான சுவாமி விவேகானந்தர் எனது லட்சியமாகவும், எனது ஆற்றலின் மூலமாகவும், எனது ஆன்மிக பயிற்சி யாகவும் இருந்துள்ளார். சுவாமிஜியின் கனவுகள், மதிப்புகள் மற்றும் லட்சியங்களை பின்பற்றி வடிவம் பெறுவது எனது அதிர்ஷ்டம்.

    இந்த பாறை நினைவு சின்னத்தில் நான் இருக்கும் இந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும், எனது வாழ்வின் ஒவ்வொரு கணமும் என் உடலில் ஒவ்வொரு துகளும் தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் என்ற எனது உறுதியை பாரத அன்னையின் காலடியில் அமர்ந்து இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.

    தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாரதத்திற்காகவும் நமது மரியாதையை செலுத்து கிறோம் என்று அவர் கருத்து பதிவிட்டுள்ளார். 

    • நேற்றுமுன்தினம் மாலை விவேகானந்தர் மண்டபம் சென்றார் பிரதமர் மோடி.
    • நேற்று முழுவதும் தியானம் செய்த நிலையில், இன்று மதியம் தியானத்தை முடித்துக் கொண்டார்.

    பிரதமர் மோடி மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்த நிலையில் மூன்று நாட்கள் பயணமாக தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை மாலை) வந்தடைந்தார்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின், விவேகானந்தனர் மண்டபத்தில் 45 மணி நேரம் தியானம் செய்ய தொடங்கினார்.

    நேற்று சூரிய வழிபாடு செய்தார். பின்னர் தொடர்ந்து தியானம் செய்ய தொடங்கினார். இன்று மதியம் 2.45 மணி அளவில் 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்தார்.

    பின்னர் படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். திருவள்ளூர் காலை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நேற்று முன்தினம் மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார்.
    • மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை அமலில் இருக்கும் என்று பூம்புகார் படகு கழகம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 3 நாட்களாக தியானம் செய்து வருகிறார். இதற்காக நேற்று முன்தினம் மாலை பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார். இன்று 3-வது நாளாக அங்கு பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு உள்ளார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 11 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு சென்ற படகு திரும்பி வந்த பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை அமலில் இருக்கும் என்று பூம்புகார் படகு கழகம் தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடி தனது தியானத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் 3 மணிக்கு புறப்படுகிறார்.

    • அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    குழித்துறை:

    வர்த்தக நகரமான மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க குழித்துறை ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் நவீன முறையில் இரும்பு மேம்பாலம் அமைக்கப் பட்டது.

    இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது முதல் அடிக்கடி அப்பகுதியில் வாகன விபத்துகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து கம்பி லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை கல்லுபாலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார்.

    லாரி குழித்துறை மேம்பாலப்பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற கார் மற்றும் ஆம்னி பஸ்சை லாரி டிரைவர் முந்த முயன்றார்.

    அவர் லாரியை வேகமாக இயக்கி வாகனங்களை முந்த முற்பட்டார். அப்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மற்றும் ஆம்னி பஸ் மீது உரசியது.

    மேலும் சாலையின் நடுவே குறுக்கு மறுக்காக லாரி ஓடி உள்ளது. அப்போது எதிரே கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் நோக்கி வந்த லாரியை கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்த ஷாஜி (30) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது லாரி தாறுமாறாக ஓடி வருவதை கண்ட அவர் பயந்து வாகனத்தில் இருந்து குதித்து தப்பி உள்ளார்.

    இதையடுத்து 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதி சுமார் 10 மீட்டர் தூரம் டாரஸ் லாரியை இழுத்து சென்று மேம்பாலத்தின் சுவரில் மோதி நின்றது.

    இதில் 2 வாகனங்களின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்த நிலையில் லாரி டிரைவரின் கால்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி வெளியேற முடியாமல் பரிதவித்து உள்ளார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த குழித்துறை தீயணைப்பு துறையினர் அவரை சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

    இந்த விபத்தில் 2 லாரிகளின் டிரைவர்களும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    மேலும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்ப டுத்தினர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • காந்தி மண்டபத்துக்கும் சென்று பார்வையிட முடிவு.
    • உலர் பழங்கள் உள்ளிட்டவற்றை மட்டுமே சாப்பிட்டார்.

    சென்னை, ஜூன். 1-

    பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.

    பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனி படகில் விவேகானந்தர் பாறைக்கு சென்ற அவர் அங்குள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நேற்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து காவி உடைகளை அணிந்து கொண்ட பிரதமர் மோடி சூரிய வழிபாடு நடத்தி விட்டு சிறிய கமண்டலத்தில் இருந்த புனித நீரை கடலில் ஊற்றினார்.

    நெற்றியில் 3 விரல்களால் போடப்பட்ட விபூதி பட்டை அதன் நடுவில குங்கும பொட்டு, கையில் ருத்ராட்ச மாலை என முற்றும் துறந்த துறவி கோலத்திலேயே தியானம் மேற்கொண்டார்.

    இன்றும் (சனிக்கிழமை) 3-வது நாளாக பிரதமர் மோடி தனது தியானத்தை தொடர்ந்தார். காலை 5.50 மணி அளவில் தனது அறையில் இருந்து காவி உடையிலேயே மோடி வெளியில் வந்தார். இன்றும் சூரிய உதயத்தை பார்வையிட்டு வழிபாடு செய்தார். பின்னர் கமண்டலத்தில் இருந்த புனித நீரையும் கடலில் ஊற்றினார்.

    பின்னர் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்து கடல் அழகை ரசித்து பார்த்த அவர் அங்கிருந்த படிகளின் மேல் ஏறி இறங்கி சிறிய அளவிலான உடற் பயிற்சி யையும் மேற் கொண்டார்.

    இன்றைய தியானத்தை காலை 7.30 மணி அளவில் தொடங்கிய பிரதமர் மோடி மதியம் 1.30 மணி வரையில் தியானம் மேற்கொண்டார். அதன் பிறகு தியானத்தை முடித்துக் கொண்டு பிரதமர் டெல்லி செல்கிறார்.

    விவேகானந்தர் மண்ட பத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி 3.30 மணி அளவில் விருந்தினர் இல்லத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

    முன்னதாக பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலை மற்றும் காந்தி மண்டபத் துக்கும் சென்று பார்வையிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    கனனியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி உணவு வகைகள் எதையும் சாப்பிடவில்லை. இளநீர், மோர் மற்றும் குறைவான அளவில் உலர் பழங்கள் உள்ளிட்டவற்றை மட்டுமே சாப்பிட்டார்.

    அதே நேரத்தில் யாரிட மும் அவர் பேசாமல் மவுன விரதமும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அதனைத் தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது.

    விழாவின் 8-வது நாளான நேற்று கலிவேட்டை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு பழங்கள், மலர் அலங்காரத்துடன் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடந்தது. 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வெள்ளை குதிரை வாகனம் தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது.

    அங்கு குரு சுவாமி தலைமையில் அய்யா வழி பக்தர்களின் 'அய்யா சிவ சிவா அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்திற்கு இடையே அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குமரி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் குதிரை வாகனம் செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வந்தது. வாகனம் வரும் வழிகளில் அந்த பகுதி மக்கள் வரவேற்பு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழங்கள், பன்னீர் ஆகியவற்றை சுருளாக படைத்து வழிபட்டனர்.

    இரவு 11 மணிக்கு வாகனம் சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. அங்கு வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் அய்யா வைகுண்டசாமி காட்சியளித்தார். தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், பெரிய உகப்படிப்பும், அன்னதர்மமும் நடந்தது.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்திர வாகன பவனியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 

    • பிரதமர் நரேந்திர மோடி அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு வெளியாகி இருக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு விவேகானந்தர் பாறைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நாளை (ஜூன் 1) மாலை வரை விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தியானத்திற்கு இடையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு வெளியாகி இருக்கிறது.

    அதில், "அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ரெமல் புயல் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது. எனது எண்ணமும், பிரார்த்தனையும் அங்கு பாதிக்கப்பட்டோருடனேயே உள்ளது. அங்குள்ள கள சூழல் குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்ததோடு, அங்குள்ள கள நிலவம் குறித்தும் கேட்டறிந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்," என குறிப்பிட்டுள்ளார்.


    மற்றொரு பதிவில், "2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நமது பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சியடைய செய்யும் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி, 2023-24 காலக்கட்டத்தில் நாட்டின் 8.2 சதவீத வளர்ச்சி உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியதை போன்றே இவை அனைத்தும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • இன்று காலை அரபிக்கடலில் சூறாவளி சுழற்சி உருவானது.
    • கன்னியாகுமரியில் இன்று பகல் 11 மணியளவில் சூறைக்காற்று வீசியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கடல் பகுதி, கடந்த சில நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மழை போன்றவற்றால் அவ்வப்போது சீற்றமாக காணப்படுகிறது. அந்த நேரத்தில் ராட்சத அலைகள் வீசி வருகின்றன. சுமார் 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி சுற்றுலா பயணிகளை பயமுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை அரபிக்கடலில் சூறாவளி சுழற்சி உருவானது. இதன் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது. குமரி மாவட்ட மேற்கு கடற்பகுதிகளில் சுமார் 10 முதல் 15 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பின. இந்த அலைகள், கடல் அலை தடுப்புச் சுவரில் மோதிச் சென்றன.

    நீரோடி முதல் பொழியூர் வரையிலான கடற்கரை கிராமச் சாலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதனால் கடலோர கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதற்கிடையில் கன்னியாகுமரியில் இன்று பகல் 11 மணியளவில் சூறைக்காற்று வீசியது. அப்போது கடல் சீற்றமாக காணப்பட்டது.

    • சஸ்பெண்டு உத்தரவை சென்னை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.
    • பணி ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியன். நாகர்கோவில் நகராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே அவர், இங்கு பணியில் உள்ளார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.

    இந்த நிலையில் என்ஜினீயர் பால சுப்பிரமணியன் இன்று திடீரென பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இந்த தகவல் மாநகராட்சி பணியாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    என்ஜினீயர் பால சுப்பிரமணியன் மீது பல்வேறு புகார்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணி ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் அரசு ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரபஞ்சத்தில் உருவாக்கப்படும் எல்லாப் பொருள்களுக்கும் உரிய தேவர்கள் உண்டு.
    • ‘ஓம்’ என்பது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் தம்மகத்தே கொண்டதால் முத்தொழிலுக்குரிய கடவுள்களும் அதில் அடங்குவர்.

    பிரதமர் மோடி தியானம் செய்யும் போது பின்னணியில் ஒலித்த ஓம் பிரணவ மந்திரத்தின் சிறப்புகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

    மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது 'ஓம் எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு 'பிரணவ மந்திரம்' என்ற பெயரும் உண்டு. ஓம் எனும் மந்திரம் பிரபஞ்ச மந்திரமாகவும் திகழ்கிறது.

    ஓம் என்பது அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. பிரபஞ்சத்தின்(அண்டம்) சிறிய பகுதி உடல்(பிண்டம்). பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உடலில் இருப்பதால் பிரபஞ்ச ஓங்கார ஓசையை உடலினுள் சொல்வதால் பிரபஞ்ச பயனை அடையலாம்.

    உடம்பின் உள்ளே தோன்றும் தச வாயுக்களாலும் உடலில் உள்ள அக்னியின் மேல் செல்லும் போக்காலும் இந்த பிரணவ 'ஓம்' உடம்பின் கீழிருந்து மேல் நோக்கி உச்சித் தலைக்கும் அதற்கு மேலும் தடையின்றி போகும்.

    அப்படிப் போகும்போது பெயர், எல்லை, ஒளி, நிறம், தெய்வம், அளவு, வடிவம், சூனியம் ஆகிய பகுதிகளை வரையறை செய்து உணர்ந்தால் ஓங்காரம் பிரபஞ்சத்துடன் ஒன்றி உடலில் பரவுவதை அனுபவிக்கலாம். இப்போது இந்த ஞான ஒளி உள் ஒளியாகி குண்டலி சக்தியாக வெளிப்படும். எனவே ஓம், பிரணவம், குண்டலியாவும் ஒன்றை ஒன்று சார்ந்தது என்பது புரியும்.


    பிரபஞ்சத்தில் உருவாக்கப்படும் எல்லாப் பொருள்களுக்கும் உரிய தேவர்கள் உண்டு. ஓம் எனும் பிரணவத்தில் 'அ' என்பது முதலில் தோன்றுவதால் 'அ'காரமாவது உலக உற்பத்தியை குறிக்கும், அதற்குரிய தேவர் படைப்புக் கடவுள் என்றும், 'உ' என்பது வளர்வதற்குத் துணை செய்வதால் 'உ' காரம் வியாபித்தல் என்பதைக் குறிக்கும், அதற்குரிய தேவர் காவல் கடவுள் என்றும், 'ம்' என்பது முடித்து வைப்பதால் 'ம'காரமாவது அழித்தலைக் குறிக்கும், அதற்குரிய தேவர் சம்ஹாரக் கடவுள் என்றும் உணர்த்தப்படும்.

    எனவே 'ஓம்' என்பது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் தம்மகத்தே கொண்டதால் முத்தொழிலுக்குரிய கடவுள்களும் அதில் அடங்குவர்.

    அதாவது உயிரில் இருந்து பிராணனில் இருந்து ஓம் மந்திரம் உருவாகி வெளியில் வருகிறது. இதனால்தான் ஓம் மந்திரத்துக்கு பிரணவ மந்திரம் என்ற பெயர் உண்டானது. பிரணவம் என்றால் சுவாசம் என்று பொருள். மனிதன் உயிர் வாழ சுவாசம் அவசியம். இந்த பிரபஞ்சம் உயிர் வாழ ஓம் எனும் மந்திரம் அவசியம். அதனால்தான் ஓம் எனும் பிரணவ மந்திரம் என்கிறோம்.

    • அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கார், வேன், பஸ்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு மேல் பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்து வருகிறார்கள்.

    திருவட்டார்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறந்து வெளியேற்றப்பட்டது. இதனால் குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர்ந்து ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    திற்பரப்பு பேரூராட்சி சார்பாக பல்வேறு வகையில் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். தற்போது மழையின் தாக்கம் குறைந்ததால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கோடை கால விடுமுறை முடிய இன்னும் 5 நாட்கள் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் காலை முதல் அருவியில் வந்து குளித்து செல்கின்றனர். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் அருவி பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது. தற்போது வியபாரம் சூடு பிடித்து உள்ளது.

    தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கார், வேன், பஸ்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இதனால் அருவியின் அருகில் நீண்ட வரிசையில் கார், வேன்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு மேல் பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்து வருகிறார்கள். அருவியின் அருகில் இருக்கும் சிவன் கோவிலையும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மாத்தூர் தொட்டில்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, சிற்றாறு போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். இதனால் அந்த பகுதிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    • சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.
    • நாளை பிற்பகலில் தியானத்தை முடிக்கும் பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிடுகிறார்.

    கன்னியாகுமரி:

    பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வதற்காக நேற்று மாலை குமரிமுனைக்கு வந்தார். அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார்.

    பின்னர் மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.

    பின்னர் பிரதமர் மோடி தியான மண்டபத்துக்கு சென்று விட்டு திரும்பினார். நேற்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்தினார். தனது 3 விரல்களால் விபூதியை தொட்டு நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துக் கொண்டார்.

    பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு ஆகியவற்றை அணிந்து கொண்டு முற்றும் துறந்த துறவி போலவே காட்சி அளித்தார்.


    கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனை விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார். மண்டபத்தின் கிழக்கு பகுதிக்கு சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார். பின்னர் சிறிய சொம்பை எடுத்து அதில் இருந்த தீர்த்தத்தை கடலில் ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.


    சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.

    பின்னர் விவேகானந்தரின் முழு உருவ சிலையுடன் கூடிய மண்டபத்துக்கு சென்ற மோடி சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்தார். விவேகானந்தரின் சிலையை பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அப்போதும் ருத்ராட்ச மாலையை விரல்களால் வருடியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார். இதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவி கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.


    அப்போது தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான... மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இப்படி பிரதமர் மோடி சூரிய வழிபாடு நடத்தியது, கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டது ஆகியவை வீடி யோவாக இன்று வெளியிடப்பட்டது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியினரும் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி வருகிறார்கள்.

    நாளை கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடியின் தியானம் சத்தமில்லாத தேர்தல் பிரசாரமாகவே அமையும். அது கடைசி கட்ட தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுபோன்ற சூழலில்தான் பிரதமரின் தியான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

    பிரதமர் மோடியின் தியானம் நாளையும் தொடர்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கே பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறார். இதன் மூலம் நாளையும் காலையிலேயே பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை பிற்பகலில் தியானத்தை முடிக்கும் பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிடுகிறார். இதன்பிறகு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் விவேகானந்தர் பாறையை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, குமரி கடல் பகுதி முழுவதும் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர். கடலோர காவல் படை போலீசார் கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ×