என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மீனம்பாக்கத்தில் நெருக்கடியை குறைக்க தாம்பரத்தில் இருந்து சிறிய விமானங்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள் நாட்டு முனையம், வெளி நாட்டு முனையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து தினந்தோறும் 470 விமான சேவை இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தற்போது உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே 70 முதல் 80 பயணிகள் வரை பயணம் செய்யும் சிறிய விமானத்தை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து இயக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக விமான நிலைய அத்தாரிட்டி அதிகாரிகள் கூறும்போது, தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்காக சிறிய பயணிகள் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

    இது தொடர்பான ஆலோசனை முக்கிய அதிகாரிகள் தலைமையில் நடந்துள்ளது. இதுபற்றி இந்திய விமானப் படைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் இது தொடர்பான திட்டத்துக்கு அனுமதி அளித்ததும் உடனடியாக பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

    வேலைபார்த்த வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம் நாராயண முதலி தெருவைச் சேர்ந்தவர் பிரியதர்சினி. கடந்த ஆண்டு இவரது வீட்டில் 14பவுன் நகை திருடு போனது. இதேபோல மேல்தளத்தில் வாடகைக்கு இருந்தவர் வீட்டிலும் 6 பவுன் நகை மாயமானது.

    இதுகுறித்து வடபழனி உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசம் உத்தரவின் பேரில் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோமதி விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த இரண்டு வீட்டிலும் வீட்டு வேலை பார்த்த சாலிகிராமம் ஏகாம்பரம் தெருவைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது கடந்த 10 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யா விருகம்பாக்கம் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 11 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தமிழர்கள் உள்ள பகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். வாரணாசி தொகுதியில் கடந்த முறை போட்டி இருந்தது.

    ஆனால் இந்த முறை யாரும் போட்டியாக கருத முடியாது. ஒட்டு மொத்த மக்களும் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். அங்குள்ள சிறுபான்மை மக்கள், இஸ்லாமிய மக்கள் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க இருப்பதாக கூறினார்கள். 5 ஆண்டுகளில் மோடி பல திட்டங்களை செய்துள்ளார். இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி பேசும் கே.எஸ்.அழகிரியின் பார்வையில் கோளாறு இருப்பதாக தெரிகிறது.


    சந்திரசேகரராவை சந்திக்க முதலில் ஸ்டாலின் மறுத்ததாக தகவல் வந்தது. இப்போது சந்தித்து உள்ளார். அப்போது நல்ல டீ குடித்து இருப்பார்கள். அவ்வளவு தான் நடந்து இருக்கும். இதன் பின்னாடி எந்த பலனும் இருக்க போவதில்லை.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற போகிறது. பா.ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க கூடிய வகையில் பலம் பொருந்திய கட்சியாக வர போகிறது. கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி ஆட்சி அமைத்ததோ அதுபோல் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார்.

    பா.ஜனதாவிடம் தி.மு.க. சார்பில் தூது அனுப்பப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாக கூறுகிறீர்கள். ஒருவேளை சந்திரசேகர ராவ் மூலமாக தூது அனுப்பி இருப்பார்.

    திரை மறைவில் எதுவும் பேசுவதற்கு பா.ஜனதா தயாராக இல்லை. இதை யார் சொல்லியிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்போரூரில் வீட்டுக்குள் அரிவாளுடன் புகுந்த கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் வேண்டவராசி அம்மன்கோயில் அருகே வசித்து வருபவர் ரவி. டைலர் கடைவைத்துள்ளார். நேற்று இரவு வீட்டில் ஏ.சி. வேலை செய்யாததால் முன்பக்க வீட்டை பூட்டி விட்டு தூங்கினார்.

    அதிகாலை 3 மணி அளவில் மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்தனர். சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிக்கம் முன்னாள் கவுன்சிலர் வைன் குரல் கொடுத்து கொண்டு எழுந்து வந்தார். அவரை பார்த்தவுடன் கொள்ளையர்கள் 2 பேர் அரிவாளுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனணர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் சாலையில் தீப்பொறி வரும் அளவுக்கு தேய்த்தவாறு மிரட்டியபடி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொள்ளையில் 2 பேர் ஹெல்மெட் அணிந்தும் 4 பேர் முகத்தை மூடியபடியும் இருந்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தியாவில் பா.ஜனதா, காங்கிரஸ் தவிர்த்து 3-வது அணி அமைய வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் 3வது அணி உருவாக்க தமிழகம் வரவில்லை. அவர் ஆலயங்களை வழிபட வந்தார். அவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

    இந்தியாவில் பா.ஜனதா, காங்கிரஸ் தவிர்த்து 3-வது அணி அமைய வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருப்பினும் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரியவரும்.



    சந்திர சேகரராவ் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழிசை சொல்லி இருக்கிறார். அவர் வருகை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, என்று தமிழிசை கூறியதில் ‘ க்’கை எடுத்துவிடுங்கள். அது தாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சோழிங்கநல்லூர் அருகே அமெரிக்க டாலர் தருவதாக கூறி ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடம் ரூ. 1½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    பனையூரை சேர்ந்தவர் ரியாஸ். கானாத்தூரில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இவரது கடைக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றார்.

    ரியாசிடம் பேச்சுக் கொடுத்த அவர் தன்னிடம் ரூ. 3 லட்சம் மதிப்பில் அமெரிக்க டாலர்கள் உள்ளன. ரூ. 1½ லட்சம் ரொக்கம் கொடுத்தால் அமெரிக்க டாலரை தருவதாக கூறினார்.

    இதனை நம்பிய ரியாஸ் அமெரிக்க டாலரை வாங்க ஒப்புக்கொண்டார். நேற்று மாலை அவர் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வரவழைத்து அந்த வாலிபரிடம் ரூ. 1½ லட்சத்தை கொடுத்தார்.

    பணத்தை வாங்கிக் கொண்ட வாலிபர் பின்னர் ரியாசிடம் காகிதப் பார்சலை கொடுத்தார். அதில் அமெரிக்க டாலர்கள் இருப்பதாக கூறினார். அதனை பெற்றுக் கொண்ட ரியாஸ் வீட்டுக்கு வந்ததும் பார்சலை பிரித்து பார்த்தார்.

    அதில், வெற்றுக் காகிதங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அமெரிக்க டாலர் கொடுப்பதாக மர்ம வாலிபர் ரூ. 1½ லட்சத்தை பறித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து ரியாஸ் செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்தார். மோசடியில் ஈடுபட்ட வாலிபர் குறித்த மற்ற விபரங்கள் அவருக்கு தெரியவில்லை. மோசடி வாலிபரை பிடிக்க போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிவான அவரது உருவத்தை வைத்து விசாரித்து வருகின்றனர்.
    கூடுவாஞ்சேரி அருகே விபத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பத்ம நாபன் (வயது 72). ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.

    இவர் அதே பகுதியில் காலை சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே வந்த கார் திடீரென பத்மநாபன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பத்மநாபன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விபத்து ஏற்படுத்திய காரின் விபரம் தெரிய வில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர்.

    காஞ்சீபுரம் அருகே மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). மணியாச்சி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (22). சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (21) இவர்கள் 3 பேரும் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தனர்.

    நேற்று காலை ஒரே மொபட்டில், இவர்கள் 3 பேரும் படுநெல்லி கிராமத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு, வந்து கொண்டிருந்தனர். மொபட்டை ரவிக்குமார் ஓட்டி சென்றார். காஞ்சீபுரத்தை அடுத்த புதுப்பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது மொபட்டும், அந்த வழியாக வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

    இதில், ரவிக்குமார் வெங்கடேசன் ஆகியோர் அதே இடத் தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலாஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில், பலியான கல்லூரி மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #opanneerselvam #neet

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெற இருக்கும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.


    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தான் ராஜிவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்த தீர்மானம் மத்திய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி ஏழுபேர் விடுதலையில் தமிழக ஆளுநர் முடிவை எடுக்கும் அதிகாரத்தை அளித்துள்ளது. எனவே நாங்கள் ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தி வருகிறோம்.

    தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது தவறான குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையான அதிகாரம் படைத்த அமைப்பு. அவர்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் எடுத்து செயல்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #opanneerselvam #neet 

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர்கள் வெங்கடேசன் (21), பாஸ்கர்.

    இவர்கள் 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ரவிக்குமார் ஓட்டினார்.

    காஞ்சீபுரம் - அரக்கோணம் சாலையில் புதுப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து காளஹஸ்தி நோக்கி சென்ற தனியார் பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார், வெங்கடேசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இந்த விபத்தில் பாஸ்கர் படுகாயம் அடைந்தார். அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து தொடர்பாக காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மடிப்பாக்கத்தில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி மஞ்சுளா (50). இன்று காலை அருகே உள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறித்துச் சென்று விட்டார்.

    இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    சோழிங்கநல்லூரில் ஏ.டி.எம். கொள்ளையன் பிடிபட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் உள்ள தங்கும் விடுதியில் பல்கேரியா நாட்டை சேர்ந்த பீட்டர் (வயது 47) தனது நண்பருடன் தங்கி இருந்தார். நேற்று காலை அவர்கள் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு வெளியே வரும்போது அவர்களது பையில் இருந்து ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் இந்திய பணம் மற்றும் அமெரிக்க டாலர்கள் கீழே விழுந்தன. இதை பார்த்த விடுதி ஊழியர் சந்தேகத்தின் பேரில் பீட்டரை பிடித்து செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தார்.

    அவருடன் தங்கி இருந்த அவரது நண்பர் தப்பி ஓடி விட்டார். போலீஸ் விசாரணையில் அவர்கள் போலியாக ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவரிடம் இருந்து 50 போலி ஏ.டி.எம்.கார்டுகள், ரூ.10 லட்சம் இந்திய பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க பயன்படும் ‘ஸ்கிம்மர்’ கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

    தப்பி ஓடிய அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். எந்தெந்த ஏ.டி.எம்.களில் அவர்கள் பணத்தை கொள்ளையடித்தனர்?. எவ்வளவு பணம் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    ×