என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்துவரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அதனான் (வயது 36), மலப்புரத்தை சேர்ந்த ஷிபியுல் ரகுமான் (25) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

    அதில் இருவரும் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 950 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த சீதாலட்சுமி (63) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து தங்க சங்கிலி மற்றும் பிரேஸ்லெட் ஆகியவற்றை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 131 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சீதா லட்சுமியிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் நடத்திய சோதனையில் ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 81 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை யாருக்காக துபாய் மற்றும் கொழும்பில் இருந்து கடத்தி வந்தனர் என இலங்கை பெண் உள்பட 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர் அருகே ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு பிஸ்கெட் கொடுத்து போலீசார் பாராட்டினர். இதனை பொது மக்கள் வரவேற்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த முடியாதா? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

    இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சோழிங்கநல்லூரை அடுத்த அக்கறை சிக்னல் அருகே நீலாங்கரை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மேத்தா தலைமைக் காவலர் சிங்காரவேல் உள்ளிட்ட போலீசார் பந்தல் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.



    அவர்கள் அவ்வழியே செல்லும வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொது மக்களிடம் அரை மணி நேரம் ஹெல்மெட் அணிவது மற்றும் வாகனத்தை பொறுமையாக ஓட்டிச் செல்வதைப் பற்றி எடுத்து கூறினர். மேலும் சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நிறுத்தி கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு மற்றும் பிஸ்கெட் போன்றவைகளை கொடுத்து மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைத்தனர். இதனை பொது மக்கள் வரவேற்றனர்.
    மாமல்லபுரத்தில் வாலிபர் மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லப்புரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த ஓரகடம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சீனிவாசன் (வயது35). கூலித்தொழிலாளி.

    நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சீனிவாசன் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மாமல்லபுரம் கடற்கரை கோல் கார் நிறுத்தும் இடம் அருகே சீனிவாசன் மர்மமாக இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சீனிவாசனின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    சீனிவாசன் எதற்காக இங்கு வந்தார்? அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற காவலாளி உயிரிழந்தார். டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வரவில்லை என்று உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 51). அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 31-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் அதே மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென ரகுபதிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சுகுணா அங்கிருந்த நர்சுகளிடம் டாக்டர்களை அழைத்து வருமாறு தெரிவித்தார்.

    ஆனால் அதிகாலை 2 மணி வரை எந்த டாக்டர்களும் ரகுபதிக்கு சிகிச்சை அளிக்க வில்லை என்று கூறப்படு கிறது. இதனால் ரகுபதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

    இதுபற்றி அறிந்த ரகுபதியின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். டாக்டர்களின் அலட்சியத்தால் ரகுபதி உயிர் இழந்து இருப்பதாக கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


    தொடர்ந்து மருத்துவமனை வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து ரகுபதியின் உறவினர்கள் கூறுகையில், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் ரகுபதி உயிர் இழக்க நேரிட்டது. இதுபோன்ற பாதிப்பு இனி யாருக்கும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    பல்லாவரம் அருகே இன்று காலை குப்பை லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பல்லாவரம்:

    பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், அருணாச்சலம் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவருடைய மனைவி கலைவாணி ( 32). இவர்களது உறவினர் அரவிந்தன் (19)).

    இவர்கள் மூவரும் பல்லாவரம் நகராட்சியில் துப்புரவு ஊழியர்களாக பணி செய்து வந்தனர். இன்று காலை நான்கு மணி அளவில் 3 பேரும் பல்லாவரம் மேம்பாலம் அருகே குப்பை அள்ளும் மினி லாரியில் குரோம்பேட்டை நோக்கி ஜிஎஸ்டி சாலையில் சென்றனர்.

    அப்போது அங்கு மற்றொரு பகுதியில் குப்பையை சேகரிப்பதற்காக மினி லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு 3 பேரும் கீழே இறங்கினர்.

    அந்த நேரத்தில் சென்னையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த டிப்பர் லாரி திடீரென சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த குப்பை லாரி மீது மோதியது. இதில் அருகே நின்றிருந்த துப்புரவு தொழிலாளி முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் அவரது மனைவி கலைவாணி மற்றும் உறவினர் அரவிந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சங்கரை தேடி வருகின்றனர்.
    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை பங்காரு அடிகளார், அவரது மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

    கோவிலில் நடக்கும் தைப்பூசத் திருவிழா புகழ் பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உள்ளது.

    இந்த நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டார்.

    இதற்காக காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் 4 பேர் குழு அமைக்கப்பட்டது. நேற்று மாலை அதிகாரிகள் குழுவினர் மேல்மருவத்தூர் கோவிலில் ஆய்வு செய்ய வந்தனர்.

    அவர்கள் அறநிலையத்துறையின் உத்தரவு நகலை கோவில் ஊழியர்களிடம் காண்பித்து ஆய்வு செய்ய முயன்றனர்.

    ஆனால் கோவிலில் இருந்த ஊழியர்கள் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை கோவிலில் இருந்து வெளியேற்றினர்.

    இதனால் அதிகாரிகளால் கோவிலில் ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி உதவி ஆணையர் ரமணி மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில், வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவின் பேரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை ஆய்வு செய்ய சென்றோம். அப்போது கோவிலில் இருந்த ஊழியர்கள் எங்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

    மேற்படி கோவிலில் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் பணி செய்ய விடாமல் இடையூறு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

    இதுபற்றி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி கூறும்போது, “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை ஊழியர்கள் தடுத்ததாக புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரித்து வருகிறோம்” என்றார்.
    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி தண்ணீரை எடுத்து சென்னைக்கு சப்ளை செய்ய மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    காஞ்சிபுரம்:

    சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு விட்டதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    தினந்தோறும் மக்கள் தண்ணீருக்காக தவித்து வருகிறார்கள். காலி குடங்களுடன் தண்ணீர் லாரிகளுக்காக இரவு, பகல் பாராமல் காத்து கிடக்கும் நிலை உருவாகி உள்ளது.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க காஞ்சிபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று நீர், கல்குவாரி நீரை எடுத்து குடிநீர் வாரிய அதிகாரிகள் சப்ளை செய்து வருகிறார்கள்.

    ஆனால் இது போதுமானதாக இல்லை. சென்னை நகர மக்களின் பாதியளவு குடிநீர் தேவையை மட்டும் பூர்த்தி செய்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் வீராணம் ஏரி தண்ணீர் மட்டுமே கை கொடுத்து வருகிறது

    இந்த நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மற்ற ஏரி தண்ணீரை எடுத்து சென்னைக்கு சப்ளை செய்ய மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், தென்னேரி உள்பட 5 ஏரிகளை அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர்.

    இந்த ஏரிகளில் குழாய்கள் பதித்து தண்ணீரை எடுக்க திட்டமிடப்பட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே ரெட்டேரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் மடிக்கணினிகள், வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த தேவக்கோட்டையை சேர்ந்த பிரசாத் (வயது 26) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 14 பயன் படுத்தப்பட்ட பழைய மடிக்கணினி கள், விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 489 கிராம் தங்கத்தையும், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அதே விமானத்தில் துபாயில் இருந்து வந்த இளையான்குடியை சேர்ந்த அப்துல் ரகுமான்(26) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 259 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 748 கிராம் தங்கம், ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவற்றை யாருக்காக துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்கள் எனவும் பிடிபட்ட 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    எம்.ஜி.ஆர். நகரில் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2 பவுன் செயினை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

    போரூர்:

    எம்.ஜி.ஆர். நகர், சூளைபள்ளம் வெங்கட் ராமன் சாலையில் சுனில் ஜூவல்லர்ஸ் என்கிற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் கெணா ராம்.

    நேற்று மாலை இவரது கடைக்கு டிப் டாப் உடை அணிந்த இளம்பெண் ஒருவர் வந்தார். நகை வாங்குவது போல ஏராளமான நகைகளை வாங்கி பார்த்து கொண்டிருந்தார்.

    சிறிது நேரம் கழித்து அவர் நாளை திரும்பி வந்து நகை வாங்குவதாக கூறி கடையில் இருந்து சென்று விட்டார்.

    அப்போது ஊழியர்கள் நகைகளை சரி பார்த்தபோது 2 பவுன் செயின் மாயமானது தெரிந்தது.

    அதனை டிப்-டாப் இளம் பெண் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த பெண் கே.கே. நகர் பாரதிதாசன் சாலையில் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர் தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சுமதி என்பது தெரிந்தது. குடும்ப வறுமை காரணமாக நகை திருட்டில் ஈடுபட்டதாக அவர் கூறி உள்ளார்.

    திருப்போரூர் அருகே பார் உரிமையாளர் தற்கொலை சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

    மாமல்லபுரம்:

    திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வசித்து வந்தவர் நெல்லையப்பன். நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த இவர் திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவரிடம் டாஸ்மாக் பார்களை மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் நெல்லையப்பன் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த வழக்கில் அவர் அளித்த மரண வாக்குமூலம் மற்றும் சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜு, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் 3 பேரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவர் தலைமறைவாக இருந்தார். காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.

    அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு மேலும் சில முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக 4 வாரத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்துக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பிரதமர் மோடி முடிவு எடுப்பார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்று கொண்ட அற்புதமான நிகழ்விற்கு கட்சிக்காக உழைத்த தொண்டர்களான மாவட்ட தலைவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் போலவே அழைப்பு விடுத்து அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இது தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தி பணியாற்றுவோம்.

    இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும். மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்லும்.

    இன்னும் பல வெற்றிகள் பல மாநிலங்களில் குவிக்க இருக்கிறது. தமிழகத்திலும் பா.ஜனதா பலம் பெற இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா பலம் பெற பலம் பெற தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

    மக்களுக்கு எதிரான, மக்களுக்குத் துன்பம் தரக் கூடிய பிரச்சனைகளை இந்த அரசு ஆதரிக்க போவதில்லை, பாஜகவிற்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்ற தவறான பிரசாரம் எதிர்கட்சிகளால் செய்யப்படுகிறது. பா.ஜனதா தமிழகத்தின் மீது மிகுந்த அக்கறையோடு இருக்கிறது. பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அடிப்படையில் எங்களுடைய பணி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உங்கள் கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் பெயரை தமிழகத்திலிருந்து மேலிடத்திற்கு பரிந்துரை செய்வீர்களா? என்ற கேள்விக்கு,

    ‘இதுகுறித்து கட்சி தலைமையும், பிரதமர் மோடியும் தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போது அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

    மத்திய மந்திரிசபை பதவியேற்பு விழாவிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளேன்.

    ஒரு மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி மற்றும் முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். முதல்-அமைச்சர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டேன்.


    தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை. இது பா.ஜனதாவின் பிரிவும், பாரபட்சமான மனப்பான்மையைக் காட்டுகிறது. பா.ஜனதா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நாங்கள் எல்லோரையும் சமமாக பாவிப்போம், எல்லாம் மாநிலத்தையும் பாரபட்சமின்றி நடத்துவோம், அனைத்து மாநிலங்கள் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம் என்று சொன்னார்கள்.

    பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் கட்சி பா.ஜனதாவின் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

    பா.ஜனதா சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்வது தான் அரசியல் நாகரீகம்.

    பா.ஜ.க.வின் அமைச்சரவையில் யார்- யார் இடம் பெற வேண்டியது என்று முடிவு செய்ய வேண்டியது பிரதமர் மோடி தான். அதைப் பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. இது சம்பந்தமாக நாங்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

    மேலும் பா.ஜனதா மதவாதத்தை முன்வைத்தும், பாகிஸ்தான் பிரச்சனையை முன்வைத்தும், புல்வாமா தாக்குதலை முன்வைத்தும், மத பெயரால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.

    காங்கிரஸ் கட்சியான நாங்கள் எல்லா மதத்தையும் அரவணைத்து செல்பவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன செய்வோம் என்று தேர்தல் பிரசாரம் செய்தோம். எங்கள் பிரசாரம் எடுபடவில்லை.

    மத பெயரால் பிரசாரம் செய்த பா.ஜனதாவின் தேர்தல் பிரசாரம் எடுபட்டது. பா.ஜனதா சொன்ன நதி நீர் இணைப்பு திட்டத்தை வரவேற்கிறேன். நதிநீர் இணைப்பு நல்லதுதான் காவிரி இணைப்பு தேவை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×