என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. தினந்தோறும் மக்கள் தண்ணீருக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவ- மாணவிகளின் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் வழங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறையால் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது.
காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள சங்குஷா பேட்டை பி.எஸ்.கே. தெருவில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். தண்ணீர் பிரச்சினையில் இந்த பள்ளி சிக்கி தவித்து வருகிறது. மாணவ- மாணவிகளின் அடிப்படை தேவைக்கு கூட தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று முதல் (18-ந் தேதி) பிரி.கேஜி வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 9.30 மணியில் இருந்து மசியம் 12.30 மணி வரை மட்டும் வகுப்புகள் இயங்கும் என்று பள்ளி நிர்வாகத்தினர் அறிவித்து உள்ளனர்.
அவர்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகையை பள்ளி முன்பு நிர்வாகத்தினர் வைத்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நாளுக்கு நாள் குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதுவரையில் குளிக்க தண்ணீர் இல்லாத நிலையில் இன்று குடிக்க தண்ணீர் இல்லாத நிலைமை வந்து விட்டது. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது.
ஆனால் தமிழக குடிநீர் வடிகால் துறை அமைச்சர் தண்ணீர் பிரச்சனை எதுவும் இல்லை என்று பொய் சொல்கிறார். ஒரு அமைச்சர் தவறான தகவல்களை தரக்கூடாது என்பது விதி. ஒரு அரசாங்கம் பொய் சொல்லக்கூடாது. இது சட்டப்படி குற்றம். இதற்காகவே இந்த அரசைக் கலைக்கலாம்.
ஒரு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறதா என்று பார்ப்பதற்கு பாராளுமன்றம், சட்டமன்றம் உறுதி மொழி குழு என்று ஒன்று இருக்கிறது. எல்லோருக்கும் தண்ணீர் கொடுப்போம் என்று சொல்லி இந்த அரசாங்கம் யாருக்கும் தண்ணீர் கொடுக்கவில்லை.
இதற்கு காரணம் ஏரி குளங்களை தூர்வாராததுதான். நீர் நிலைகளை தூர்வாரினால் இந்த அரசுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் அதிகம் லாபம் கிடைக்கும்.
இவர்கள் மழை வரும் காலங்களில் தூர்வருவார்கள். முதல் நாள் தூர்வாரும்போது அடுத்த நாள் மழை வந்துவிடும் உடனே தூர்வாரியதாக கணக்கு காட்டி அதில் லாபம் பெறுவார்கள். இந்த அரசுக்கு மக்கள் முக்கியமல்ல லாபம் மட்டுமே முக்கியம்.
இதனால்தான் சென்னை, கோவை, சேலம் மக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பக்கத்து மாநில முதல்- அமைச்சர்களை சந்தித்து 2 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு பெற்று தந்தாலே குடிதண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும். அதை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பாக நான் இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்பெஷல் பேக்கேஜ் என்று ஒன்று உண்டு. பிரதமர் அதை தமிழகத்திற்கு கொடுக்கலாம். அதற்கு தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும். வறட்சி மாநிலம் என்று அறிவித்தால் பல நிதிகளை மத்திய அரசிடம் இருந்து நாம் பெற முடியும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அதை அறிவிப்பதற்கு தமிழக அரசு சுணக்கம் காட்டி வருகிறது.

மத்திய அரசு என்பது தமிழக அரசுக்கு எஜமானன் அல்ல. நம்மோடு இணையாக இருக்கின்ற ஒரு அரசு. மத்திய அரசு, மாநில அரசை கட்டுப்படுத்த முடியாது. சில விதிமுறைகளை பின்பற்றினால் பிரச்சனை இல்லை. இங்கே இருக்கிற அ.தி.மு.க. அரசுக்கு மடியில கனம் அதனால் கருத்து சொல்ல அச்சப்படுகிறார்கள். மத்திய அரசால் மம்தா பானர்ஜியை மிரட்ட முடியுமா?
தி.மு.க.வை அழித்தால் தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும் என்று எச்.ராஜா சொல்லியிருப்பது அவர் தேர்தல் தோல்வியின் விரக்தியில் பேசுவார். அவர் நல்ல மனநிலையோடு சொல்லி இருந்தால் சொல்லுங்கள் அதற்கு பதில் தருகிறேன்.
ஒரு அரசியல் இயக்கத்தை அழிக்க முடியும் என்பது எப்படி சாத்தியமாகும். தி.மு.க. வலுவோடு இருப்பதனால் அதற்குரிய இடத்தை பிடித்திருக்கிறது. அழிப்பேன் என்று சொல்வது சர்வாதிகாரத்தனம். அது தவறானது.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க.வின் அகில பாரத செயல் தலைவராக நட்டா செயல்படுவார் என்று பா.ஜ.க உயர்மட்ட குழு அறிவித்துள்ளது. அவர் இன்று மதியம் அதற்கான பொறுப்பு ஏற்க உள்ளார்.
அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநில தலைவர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நானும் செல்கிறேன். அவருக்கு வாழ்த்து சொல்லவும், அவருடைய வழிகாட்டுதலின் படி நடக்கவும் செய்வோம்.
அவர் ஏற்கனவே மத்திய, மாநில அமைச்சராக இருந்துள்ளார். பா.ஜ.க.வின் பொதுச்செயலாளராக பல நாட்கள் பொறுப்பு வகித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் அமித்ஷா வழிகாட்டுதல் அவருக்கு இருக்கும். அவருடைய அனுபவமும் பா.ஜ.க.விற்கு உறுதுணையாக இருக்கும்.
தண்ணீர் பிரச்சனை என்பது நிச்சயமாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போன்றவர்கள் தண்ணீர் பிரச்சனை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருக்கழுக்குன்றம், பரமசிவம் நகரை சேர்ந்தவவர் வெங்கடேசன் (வயது 28). தொழிலாளி.
இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் மேல் அமர்ந்து இருந்தார். அப்போது அவரது ஒரு செருப்பு கழன்று கிணற்றுக்குள் விழுந்தது.
இதையடுத்து வெங்கடேசன் கிணற்றுக்குள் இறங்கி செருப்பை எடுக்க முயன்றார். இதில் அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய வெங்கடேசனை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரி சோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டை அடுத்த கொளவாய் ஏரி பகுதியில் இன்று காலை 8.40 மணி அளவில் மின்சார ரெயில் தண்டவாளத்தில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதனால் செங்கல்பட்டு- சென்னை கடற்கரை மற்றும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு என இரு மார்க்கத்திலும் வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 9.40-க்கு பின்னர் சிக்னல் சரிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்சார ரெயில்கள் வழக்கம்போல் ஓடின.
மின்சார ரெயில் சேவை பாதிப்பால் காலையில் வேலைக்கு சென்றோரும், பள்ளி-கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகளும் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் பஸ்கள், ஷேர் ஆட்டோக்களில் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்ட இடங்களில் இருந்து சென்றனர். இதனால் மாநகர பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
காஞ்சீபுரம்:
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் செட்டியார். இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் பல்வேறு பகுதிகளில் பாக்கி தொகையினை வசூல் செய்ய கடை ஊழியர்கள் முரளி, பாலாஜி, சரவணன் ஆகிய 3 பேரை காரில் வேலூர் அனுப்பி வைத்தார்.
வேலூர் மற்றும் பல்வேறு இடங்களில் ரூ. 69 லட்சத்தை வசூல் செய்துவிட்டு 3 பேரும் காரில் சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
காஞ்சீபுரம் அடுத்த சின்னையன்சத்திரம் பகுதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்தது.
இடிபாடுகளில் சிக்கிய முரளி சம்பவ இடத்திலேயே பலியானார். பாலாஜியும் சரவணனும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து குறித்து அறிந்ததும் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் விரைந்து வந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டனர். அப்போது காருக்குள் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதையடுத்து பணத்தையும், காயம் அடைந்தவர்களையும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மொத்தம் 69 லட்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதுகுறித்து ஆம்புலன்சு டிரைவர் சந்தானம் மருத்துவ உதவியாளர் விஜயன் ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்குக்கு தகவல் அளித்தனர்.
அவரது உத்தரவுபடி போலீசார் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் இருந்த ரூ.69 லட்சத்தை பெற்றுக்கொண்டனர்.

விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு, பணத்தையும் நேர்மையாக ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விஜயன் மற்றும் சந்தானத்தினை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹமதிமானி மற்றும் போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த சாத்துக்கூடல் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. 3 மகள்களை உடைய இவரது கணவர் 16 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த கலைச்செல்வி தன்னுடைய கடைசி மகளான கீர்த்தனா (வயது 19) வை கடந்த மார்ச் மாதம் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த ஆலச்சக்குடி பகுதியை சேர்ந்த ராஜ் (25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
ராஜ் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். கீர்த்தனாவுக்கு திருமணத்தின்போது 10 பவுன் நகை வரதட்சணையாக போடப்பட்டது.
திருமணம் முடிந்த சில நாட்களில் கீர்த்தனா, ராஜ் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சாய் லட்சுமி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து புது வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கினர்.
திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் ராஜ் தன்னுடைய மனைவியிடம் உங்கள் வீட்டில் நகை குறைவாக போட்டுள்ளனர். உன்அம்மாவிடம் நகை அல்லது பணம் வாங்கி வரும்படி கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. கீர்த்தனா இது குறித்து தன்னுடைய தாய் கலைச்செல்வியிடம் செல்போனில் பேசியுள்ளார்.
இதையடுத்து கலைச்செல்வி அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி ரூ.50 ஆயிரத்தை கொண்டு வந்து கொடுத்துள்ளார். மகளை சமாதானப்படுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னர் கீர்த்தனா தாய் கலைச்செல்விக்கு போன் செய்து மீண்டும் பணம் கேட்டு கணவர் துன்புறுத்துவதாக கூறியுள்ளார். நேற்று முன்தினம் கீர்த்தனாவுக்கும் ராஜ்க்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ராஜ் மனைவியை தரக்குறைவாக பேசிவிட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. இரவு ராஜ் வீடு திருப்பியபோது கீர்த்தனா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அறிந்த கலைச்செல்வி தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விநாயகம் கீர்த்தனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசரித்து வருகிறார்.
திருமணம் நடந்து 3 மாதங்களே ஆவதால் காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பரிமளா.
நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு சாவியை தலையணையில் வைத்துக்கொண்டு கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகளும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
நேற்று அதிகாலை மர்ம நபர்கள் மொட்டை மாடிக்கு சென்று பரிமளா அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை நைசாக பறித்தனர். பின்னர், அவர் தலையணையில் வைத்திருந்த சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
அங்கு பீரோவில் இருந்த ஒரு வெள்ளிக்கொலுசு, ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.3 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் காலையில் எழுந்து பார்த்தபோதுதான் மகாலிங்கம் மற்றும் அவரது மனைவிக்கு தெரிந்துள்ளது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்டலம் கிராமத்தில் வீடுகள் அதிகம் சூழ்ந்த இடத்தில் அதிகாலையில் தூக்கத்தில் இருந்தபோது மர்ம நபர்கள் பெண் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்ததோடு, வீட்டில் இருந்த பணத்தையும் திருடிச்சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் பல்கீஸ். இவரது மகன் ரஜிசேக் ஜான் (வயது30).
வேளச்சேரியில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த இவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுபற்றி பல்கீஸ், வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கிண்டி உதவி கமிஷனர் சுப்ராயன், வேளச்சேரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் ஆகியோர் தனிப்படைகளை அமைத்து காணாமல் போன ரஜீசேக் ஜானை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
போலீஸ் விசாரணையில் அவர் கடன் தகராறில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. அ.ம.மு.க. நிர்வாகிகள் சிலரே கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வேளச்சேரி பகுதி அ.ம.மு.க. மாணவர் அணி செயலாளரான பாஸ்கர் என்பவரிடம், ரஜிசேக்ஜான் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை திருப்பிக் கொடுப்பதில் ரஜிசேக்ஜான் தாமதப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், ரஜிசேக்ஜானை காரில் கடத்திச் சென்றுள்ளார்.
பின்னர் அவரை ஒரு வீட்டில் சிறை வைத்துள்ளனர். கடன் தொகையை திருப்பிக் கேட்டு கடத்தல் கும்பல் சரமாரியாக உருட்டுக் கட்டையால் தாக்கி, அரிவாளாலும் வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த ரஜிசேக்ஜான் கடத்தல் கும்பலிடம் இருந்து மீள முடியாமல் தவித்துள்ளார்.
ரஜிசேக்ஜானை வீட்டில் அடைத்து வைத்திருந்த கடத்தல் கும்பல், பின்னர் அவரை காரில் சிறை வைத்துள்ளது. 2 நாட்கள் காருக்குள்ளேயே அடைத்து வைத்து சித்ரவதை செய்த அவர்கள், ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதற்கிடையே அ.ம.மு.க. நிர்வாகியான பாஸ்கரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். ரஜிசேக்ஜான் அதிரடியாக மீட்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
அ.ம.மு.க. நிர்வாகியான பாஸ்கர் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக அ.ம.மு.க. 178-வது வட்ட செயலாளர் ஏழுமலையும் போலீசில் சிக்கினார். அவரையும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். கடத்தல் வழக்கில் கார்த்திக், பச்சுராஜன், பிரகாஷ் உள்பட 8 பேர் கைதானார்கள்.
இந்த கடத்தல் சம்பவம் நேற்று இரவு வேளச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவ விழா அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி அத்தி வரதர் விக்ரகம் அனந்தசரஸ் குளத்தில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு கொண்டு வரப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் வசதிக்காக ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
வரதராஜர், தாயார் சன்னதிகளுக்கு செல்லும் வழிக்காக மேற்கு ராஜகோபுரத்தில் இருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தி மூலவர், தாயாரை தடையின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஜூலை 1-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு 17-ந் தேதி வரை நடைபெறும் ஆராதனை நிகழ்ச்சியில் முதல் 24 நாட்களுக்கு சயனக் கோலத்திலும், அடுத்த 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சி அளிக்க உள்ளார்.
அத்திவரதர் விழாவுக்காக காஞ்சிபுரம் நகராட்சி மூலம் ரூ. 4.37 கோடி, மின்வாரியம் மூலம் ரூ. 92.37 லட்சம், நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ. 497 கோடி, அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ. 2.52 கோடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ. 12.89 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
விழாவையொட்டி காஞ்சிபுரம் நகரத்தில் தற்காலிக பஸ் நிலையம் ஒரிக்கை, ஒலிமுக மதுபேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மாலை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் வரதராஜ பெருமாள் கோவிலை அவர்கள் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
அத்திவரதர் வைபவத்திற்கு தினமும் 2 லட்சம் பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர் வழங்கப்படும். 9 மருத்துவ குழு, 14 ஆம்புலன்ஸ், 9 தீயணைப்பு வாகனங்கள், 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சிறப்பு கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. இலவச தரிசனமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குளத்தில் இருந்து அத்தி வரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் உற்சவ விழா அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தொடங்கி 48 நடைபெறுகிறது.
அத்தி வரதரைக் காண இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கவும், தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வேலூர் மாவட்டம் அரக்கோணத்திற்கு வரும் காவிரி நீரை காஞ்சிபுரத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, அரக்கோணத்தில் இருந்து திருப்பாற்கடல் குழாய் வழியாக காஞ்சிபுரத்திற்கு காவிரி நீர் கொண்டு வரப்பட உள்ளது.
ஒரு நாளைக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் என்று அரசுக்கு நகராட்சி மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான செலவாக நாள் ஒன்றிற்கு குடிநீர் வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் செலுத்தப்பட வேண்டி வரும் என்றனர்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். ஆனால் அவர்கள் தோல்வி அடைந்தனர். அதே போல் வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி அடைவார்கள். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார்.

பிரதமர் மோடி 2-வது முறையாக பிரதமர் ஆகி இருப்பதில் உலக அதிசயம் ஒன்றும் இல்லை. அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனை குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
ஆனால் பொதுவாக அரசியல் கட்சிகள் ஒற்றை தலைமையின் கீழ் இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியும். கட்சியின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






