search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழா - பக்தர்கள் வசதிக்கு ரூ.13 கோடி செலவில் சிறப்பு பணி
    X

    காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழா - பக்தர்கள் வசதிக்கு ரூ.13 கோடி செலவில் சிறப்பு பணி

    காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழாவுக்காக பக்தர்கள் வசதிக்காக ரூ.13 கோடி செலவில் சிறப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவ விழா அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெறுகிறது.

    இதையொட்டி அத்தி வரதர் விக்ரகம் அனந்தசரஸ் குளத்தில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு கொண்டு வரப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பக்தர்கள் வசதிக்காக ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    வரதராஜர், தாயார் சன்னதிகளுக்கு செல்லும் வழிக்காக மேற்கு ராஜகோபுரத்தில் இருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தி மூலவர், தாயாரை தடையின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி ஜூலை 1-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு 17-ந் தேதி வரை நடைபெறும் ஆராதனை நிகழ்ச்சியில் முதல் 24 நாட்களுக்கு சயனக் கோலத்திலும், அடுத்த 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சி அளிக்க உள்ளார்.

    அத்திவரதர் விழாவுக்காக காஞ்சிபுரம் நகராட்சி மூலம் ரூ. 4.37 கோடி, மின்வாரியம் மூலம் ரூ. 92.37 லட்சம், நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ. 497 கோடி, அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ. 2.52 கோடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ. 12.89 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    விழாவையொட்டி காஞ்சிபுரம் நகரத்தில் தற்காலிக பஸ் நிலையம் ஒரிக்கை, ஒலிமுக மதுபேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மாலை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் வரதராஜ பெருமாள் கோவிலை அவர்கள் பார்வையிட்டனர்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    அத்திவரதர் வைபவத்திற்கு தினமும் 2 லட்சம் பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர் வழங்கப்படும். 9 மருத்துவ குழு, 14 ஆம்புலன்ஸ், 9 தீயணைப்பு வாகனங்கள், 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    சிறப்பு கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. இலவச தரிசனமும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×