search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister velumani"

    உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பற்றி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துள்ளது. #SPVelumani #MKStalin #HighCourt
    சென்னை:

    பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து, மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது. இதுகுறித்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருநாவுக்கரசு என்பவர் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்

    இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை அமைச்சர் வேலுமணி காப்பாற்றுவதாக தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.



    அதேபோல, உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசினார்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வழக்கு தொடர்ந்தார். அதில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும், உள்ளாட்சி துறையில் முறைகேட்டில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதற்கும் மு.க. ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே பேசியதற்காக மு.க.ஸ்டாலின் ரூ 100 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவுக்கு பதிலளிக்கும்படி மு க ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    அமைச்சர் வேலுமணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். #SPVelumani #MKStalin #HighCourt
    அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #MadrasHC
    சென்னை:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள் கட்டமைப்பு பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் வேலுமணி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், தனக்கு ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் நேரத்தில் அவதூறு பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும் என வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

    இதேபோல தடை கோரி ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மார்ச் 8-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு மார்ச் 8-ந் தேதிக்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவிட்டு, ஏற்கனவே ஒப்பந்ததாரர்கள் தாக்கல் செய்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணை தள்ளிவைத்தார். #MadrasHC
    பாதாள சாக்கடைக்கு பதிலாக ரூ.200 கோடி செலவில் கசடு கழிவு அகற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். #TNAssembly #SPVelumani
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அளித்த பதில் வருமாறு:-

    பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் கிடைப்பது இல்லை. இதை கருத்தில் கொண்டு கசடு கழிவு அகற்றும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.

    அதன்படி ரூ.200 கோடி செலவில் 51 நகரங்களிலும், 59 பேரூராட்சிகளிலும், 49 நகரங்களிலும் கசடு கழிவு அகற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடியாத இடங்களில் கழிவுநீர் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly #SPVelumani
    மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு மீது பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. #MinisterVelumani
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், அறப்போர் இயக்கம் சார்பில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோவை மாநகராட்சிக்கு மட்டும் கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் ரூ. 66 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள 188 டெண்டர்கள் குறிப்பிட்ட 2 ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்கள், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள்.

    அதேபோல சென்னை மாநகராட்சியில், ரூ. 20 கோடி வருமானம் ஈட்டிய நிறுவனங்களே மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஒப்பந்த பணியில் பங்கேற்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு, வேண்டப்பட்டவர்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.


    உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, இந்த ஒப்பந்த பணிகள் வழங்குவதில் பெரும் தொகை ஊழல் செய்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.

    எனவே, அமைச்சருக்கு எதிரான புகார் குறித்து தமிழக கவர்னரிடம் ஒப்புதல் பெற்று, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஐகோர்ட்டு உருவாக்கவேண்டும்.

    இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு, குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, தமிழக தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #MinisterSPVelumani #HighCourt
    பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைப்பது குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். #ADMK #MinisterVelumani
    சென்னை:

    டெல்லியில்  மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்த பின் அமைச்சர் வேலுமணி செய்தியார்களிடம் கூறியதாவது:

    கஜா புயல் நிவாரண நிதி, உள்ளாட்சி அமைப்புக்கான நிதி பற்றி பேசவே டெல்லி வந்துள்ளோம்.  வேளாண் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதால் அதிக நிதி கேட்டுள்ளோம்.



    தேவையான நிதியை பெற்றுத்தருமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தோம். மத்திய அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். மேகதாது அணை கட்ட விடமாட்டோம். கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterVelumani
    மாநகராட்சி டெண்டரில் நடைபெறும் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடருவோம் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஊழல், சென்னை மாநகராட்சியில் எவ்வித அச்சம் நாணமுமின்றி தலை விரித்தாடுவது அதிர்ச்சி அளிக்கிறது.

    புதிதாக பேருந்து மற்றும் உள்ளூர் சாலைகள் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் மழைநீர்க் கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல், அமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் கைகோர்த்து அமைத்துள்ள கூட்டணியை உறுதி செய்திருக்கிறது.

    சென்னை பெருநகர வளர்ச்சித்திட்டத்தின் கீழும், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்புக் கழக நிதியின் கீழும் நடைபெற வேண்டிய பணிகளுக்கான டெண்டர்களில் நிகழ்ந்துள்ள வரலாறு காணாத மோசடியும், முறைகேடுகளும் அ.தி.மு.க. அரசின் “கமி‌ஷன், கலெக்சன், கரெப்‌ஷன்” என்ற ஊழல் சாக்கடை நிரம்பிய நிர்வாகத்திற்கு சான்றாவணமாக நிற்கிறது.

    சென்னை மாநகராட்சி டெண்டர்களில் சிண்டிக்கேட் அமைத்து ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் டெண்டர் போட்டுக் கொண்டுள்ளார்கள்; அந்த டெண்டர்கள் சென்னை மாநகராட்சி விலைப்பட்டியலை விட 30 முதல் 50 சதவீதம் வரை அதிகமாக உள்ளது; பிடுமென் போடுவதற்கு விலைப்பட்டியலை விட 100 சதவீத விலை அதிகமாக போட்டிருக்கிறார்கள்.

    சிமெண்ட் சாலைகள் போட ரெடிமிக்ஸ் எம்30 சிமெண்ட் கான்டிராக்ட் விலை 50 சதவீதம் அதிகம் போடப்பட்டுள்ளது; 30 நாட்கள் டெண்டர் நோட்டீஸ் காலம் ஊழலுக்கு வழி விட 15 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது; சில டெண்டர்களில் கணவனும் மனைவியுமே போட்டியாளர்களாக டெண்டர் போட்டு தங்களுக்குள் பணியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்;

    பல ஒப்பந்ததாரர்கள் ஒரே கணிணியிலிருந்து ஆன்லைன் டெண்டர் போட்டிருக்கிறார்கள் என்று எங்கும் காணாத “இமாலய முறைகேடுகள்” சென்னை மாநகராட்சி டெண்டரில் வெளிவந்து, அ.தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகம் துர்நாற்றத்தில் சிக்கித் தவிக்கிறது.


    “முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் வழக்குகள் அதிகம் பதிவு செய்திருக்கிறோம்” என்று நாளிதழ்களுக்கு செய்தி தானம் செய்து கொண்டிருக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, இந்த மெகா டெண்டர் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. டெண்டர்கள் ரத்து என்று பத்திரிகைகளில் செய்தி வந்த பிறகும் அதிரடி சோதனை நடத்தி இந்த ஊழலை விசாரிக்க முயற்சிக்கவில்லை.

    ஏற்கனவே தன் உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய புகார் அமைச்சர் மீது அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் உறவினர்களுக்கே டெண்டர் வழங்கி ஊழல் செய்து வரும் அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரபூர்வமான ஊழல் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க. அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் ஊழல் புகார் என்றால் அஞ்சி நடுங்கி பதுங்கிக் கொள்வது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல அதன் ஊழல் ஒழிப்பு முழக்கத்தையே சாக்கடைக்குள் தள்ளியிருக்கிறது.

    ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி ஊழலை மறைத்துக் கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் இப்போது இந்த மெகா டெண்டர் ஊழலையும் மூடி மறைக்க உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு துணை போகிறார். டெண்டர் முறைகேடுகளுக்கு அவரே முன் வந்து ஊழல் புகார் கொடுக்காமல், 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் 57 கோடி மதிப்புள்ள டெண்டர்களை மட்டும் “வெத்து வேட்டான” வேறு சில காரணங்களைச் சொல்லி ரத்து செய்திருப்பது, ஊழலில் அமைச்சரும் மாநகராட்சி ஆணையரும் கூட்டுச் சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    “சென்னை மாநகராட்சியில் உள்ள விஜிலென்ஸ் அமைப்பை கூண்டோடு கலைக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவை எதிர்த்து அவசரமாக மேல்முறையீடு செய்து தடையுத்தரவு பெற்றது இப்படி சென்னை மாநகராட்சியில் கொள்ளையடிக்கவா? உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல்களை “பட்டுக் கம்பளம்” போர்த்தி மறைக்கவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    ஆகவே 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி பணிக்கான டெண்டர்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் மீது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை எவ்வித தாமதமும் இன்றி நடவடிக்கை எடுத்து, ஊழலுக்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகள், துறை அமைச்சர் வேலுமணி இந்த ஊழலை இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாநகராட்சி “விஜிலென்ஸ் அதிகாரிகள்” அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    மக்கள் பணியில் குறிப்பாக சென்னைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளில் நடைபெறும் ஊழல்களை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அதையும் மீறி நடவடிக்கை எடுக்கத் தவறினால் தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin
    இந்தியாவிலேயே ஒரு முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி மீதுதான் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #EdappdiPalaniswami
    தஞ்சாவூர்:

    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் தடவையாக நேற்று தஞ்சைக்கு வந்தார்.

    தஞ்சையில் இன்று நடைபெறும் பல்வேறு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் வரும் போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் நேற்று மாலை பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா சிறைக்கு சென்றார். அதன் பின் அதிர்‌ஷடத்தில் விபத்து போல் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார்.

    பொதுப் பணித்துறையையும், நெடுஞ்சாலைத்துறைகளையும் தன்வசம் வைத்து கொண்டு இதன் மூலம் ரூ.3ஆயிரம் கோடி வரை அவருடைய உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி ஊழல் செய்துள்ளார்.

    முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்- அமைச்சர் மட்டுமின்றி அமைச்சர்களும் ஊழலில் திளைத்து வருகின்றனர். அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஐயபாஸ்கர் ஆகியோர் மீது சி.பி.ஐ. விசாரணை வந்து கொண்டிருக்கிறது.

    ஜெயலலிதா இறந்த பிறகு அவர் செய்த ஊழலை விட எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகமாக நடைபெறுகிறது.

    இந்தியாவிலேயே ஒரு முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி மீதுதான். எனவே இதற்கு பிறகாவது எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இதை தான் மாற்று கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களும் விரும்புகின்றனர். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #EdappdiPalaniswami
    சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். #SPVelumani
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.8.50 லட்சம் வரை உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் அதன் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார்.

    மேலும், அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், வீட்டில் தயாரிப்பது போன்ற சுவையில் இருக்க வேண்டும் என ஊழியர்களிடம் தெரிவித்த அமைச்சர் வாடிக்கையாளர்களை நல்ல முறையில் உபசரிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த திட்டத்தை பாராட்டியது மட்டுமின்றி, தங்கள் மாநிலங்களிலும் இதனை செயல்படுத்தியுள்ளன’ என்றார்.

    இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ஆர்.லலிதா, பி.மதுசுதன் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    அக்டோபர் 2-ந்தேதிக்குள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia #SPVelumani
    கோவை:

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவில் முன்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ், நடிகர் விவேக், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் தூய்மை பணி மேற்கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் இளம்பெண்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். தூய்மை பணியை தொடங்கி வைத்த பின் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 584 ஊராட்சிகளிலும் சிறந்த முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 53 லட்சம் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஊராட்சிகள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அக்டோபர் 2-ந் தேதிக்குள் அந்த ஊராட்சிகளும் இந்த திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும்.


    வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை என்ற தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு ஏற்ப பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகிக்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia #SPVelumani
    அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 3 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

    கோவை:

    கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் -அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆணையின்படி நாளை (சனிக்கிழமை)அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் துவி மரியாதை செலுத்தியும் தலைமை கழகம் அறிவித்த பொதுக் கூட்டங்களை நகர, பகுதி, செயலாளர்கள் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி புறநகர் மாவட்டத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) பொள்ளாச்சி திருவள்ளூவர் திடலில் அண்ணா தொழிற் சங்க பேரவை யூ.ஆர். கிருஷ்ணன், மகேந்திரன் எம்.பி., நடிகர் அனுமோகன், பவானி ஜே. எஸ். வாசன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    கோவை சாய்பாபா காலனி பகுதி வேலாண்டி பாளையம் மருத கோனார் வீதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நடிகர் வையாபுரி, ஜெயகாந்தன் ஆகியோர் பேசுகிறார்கள். நாளை மறுநாள் ( ஞாயிற்றுக் கிழமை) குனியமுத்தூர் நகரம் இடையர் பாளையம் பிரிவில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ், டி.பி. குலாப் ஜான், ராம சுப்பிரமணியன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    குறிச்சி நகரம் சங்கம் வீதியில் முன்னாள் எம்.பி. இளவரசன், மார்க்கண்டேயன், நாகராஜன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    17-ந் தேதி தொண்டாமுத்தூர் பகுதி மாரியம்மன் கோவில் வீதி லாலி ரோடு பகுதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் புத்தி சந்திரன், முன்னாள் வாரிய தலைவர் லியாகத் அலிகான், தோவாலா ரவி,விளதை செல்வராஜ், ஆகியோர் பேசுகிறார்கள். வால்பாறையில் முன்னாள் அமைச்சர் அண்ணாவி, ஜலேந்திரன், ஈரோடு சுப்பிரணியம் ஆகியோர் பேசுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்ததாக நிரூபித்தால் அமைச்சர் பதவி மட்டுமல்ல கட்சி பதவியில் இருந்தும் இன்றே விலக தயார் என்று கோவை விமான நிலையத்தில் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். #TNMinister #SPVelumani
    கோவை:

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கே : தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும், மின்துறை அமைச்சர் தங்கமணி மின்வெட்டு துறை அமைச்சராக இருப்பதாகவும் டி.டி.வி. தினகரன் கூறி உள்ளாரா?

    ப : தமிழகத்தை பொறுத்தவரை கடந்த தி.மு.க. ஆட்சியின் போது 16 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு பிரச்சனை இருந்தது. அப்போது நாங்கள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். ஆனால் தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.

    ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபடும் போது உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. மின்துறை அமைச்சர் வாரா வாரம் சிறப்புக்கூட்டம் நடத்தி வருகிறார். யார் கேட்டாலும் மின்இணைப்பு தரப்படுகிறது. மின்சாரத்துறையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இன்று டி.டி.வி.தினகரன் பேசுகிறார் என்றால் அவர் 10 ஆண்டுகள் அம்மாவால் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் இதுவும் பேசுவார். இதற்கு மேலும் பேசுவார். திகார் ஜெயில் உள்பட எல்லா ஜெயிலையும் பார்த்த அவர் மீண்டும் ஜெயிலுக்கு செல்ல தயாராக உள்ளார்.

    கே : உள்ளாட்சி துறையில் ஊழல் குறித்து உரிய ஆதாரங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளாரே?


    ப : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்வதை கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேலை பார்க்கிறார். ஆர்.எஸ். பாரதி பியூன் வேலை பார்க்கிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய கேள்விகளுக்கு பதிலளிக்க எங்கள் கட்சியில் பலர் உள்ளனர்.

    உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்ததாக நிரூபித்தால் அமைச்சர் பதவி மட்டுமல்ல கட்சி பதவியில் இருந்தும் இன்றே விலக தயார். ஊழலை நிரூபித்தால் அரசியலை விட்டே செல்ல தயாராக இருக்கிறேன். அதே சமயம், ஊழலை நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் கட்சி தலைவர் பதவியையும், எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகி துரைமுருகன், அழகிரிக்கு பதவியை கொடுக்க தயாராக இருக்கிறாரா?

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SPVelumani
    கோவையில் இருந்து கேரளாவுக்கு 10 லாரிகளில் அம்மா குடிநீரை அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கேரளாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை மாநிலத்தையே உலுக்கியது. வெள்ளத்தில் சிக்கி 370-க்கும் மேற்பட் டோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

    இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கடந்த வாரம் ரூ.4 கோடி மதிப்பில் 42 வகையான நிவாரணப் பொருட்கள் 30-க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் 10 லாரிகளில் இந்த குடிநீரை கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க் கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், ஓ.கே. சின்னராஜ், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர்கள் மணிமாறன், மணி வண்ணன், கோவை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் முத்து கிருஷ்ணன், பொது மேலாளர்கள் கோவிந்தராஜ், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர்கள் முன்பு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    ×