search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold jewel theft"

    பட்டுக்கோட்டையில் பெண்ணிடம், போலீசார் போல் நடித்து மர்ம நபர்கள் 2 பேர், 10 பவுன் நகைகளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ராஜபாளையம் தெருவை சேர்ந்தவர் கணபதிராஜா. இவருடைய மனைவி சந்தானலட்சுமி (வயது50). சம்பவத்தன்று இவர் பட்டுக்கோட்டை புதுமார்க்கெட்டில் உள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். புதுமார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு மர்ம நபர்கள் 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    சந்தானலட்சுமியை வழிமறித்த அவர்கள் 2 பேரும், தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு ஏன் தனியாக செல்கிறீர்கள்? எங்களிடம் நகைகளை கொடுங்கள் காகிதத்தில் மடித்து பத்திரப்படுத்தி தருகிறோம் என கூறினர்.

    மர்ம நபர்கள் கூறியதை நம்பிய சந்தானலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல், 1 பவுன் மோதிரம் என மொத்தம் 10 பவுன் நகைகளை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். நகைகளை வாங்கிய அந்த நபர்கள் 2 பேரும், காகிதத்தில் மடிக்காமல், நகைகளுடன் தப்பி ஓடி விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தானலட்சுமி கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். ஆனால் ஆட்கள் வருவதற்குள் மர்ம நபர்கள், நகையுடன் மாயமாகி விட்டனர்.

    அந்த நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சந்தானலட்சுமி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் போலீசார் போல் நடித்து 10 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 7½ பவுன் நகையை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    கோவை:

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மனைவி ராஜாமணி (வயது 62). சம்பவத்தன்று இவர் பஸ்சில் கோவை வந்தார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், ராஜாமணி அணிந்திருந்த 5½ பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர். அவர் மத்திய பஸ் நிலையத்தில் இறங்கியபோது நகை திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    கணபதி சங்கனூரை சேர்ந்த கருப்புசாமி என்பவருடைய மனைவி துளசி (75). சம்பவத்தன்று இவர் பஸ்சில் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை காணவில்லை. பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் நகையை திருடியது தெரிய வந்தது. 2 சம்பவங்கள் குறித்தும் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருட்டு ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
    பரமக்குடி அருகே வியாபாரியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் 10 பவுன் நகை திருடி சென்றனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி வைகைநகரை சேர்ந்தவர் ராசு. ஆடு வியாபாரம் செய்து வருகிறார். ஆற்றுப்பாலம் அருகே உள்ள கூட்டுறவு வங்கியில் அடகு வைத்திருந்த 10½ பவுன் நகைகளை ராசு திருப்பினார். பின்னர் அந்த நகையை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து புறப்பட்டார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், ராசுவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பி பெட்டியில் இருந்த நகையை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    குன்னம் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் படைகாத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரிதா(வயது 32). இவர் நேற்று காலை அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சரிதா உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு மோதிரம், தங்க சங்கிலி என 5 பவுன் நகைகள் திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள அசோக் மனைவி ஜெயலட்சுமி(35). இவர் நேற்று கூலி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடுபோய் இருப்பது தெரிந்தது. இந்த 2 புகாரின் பேரில் குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தேவதானப்பட்டி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகேயுள்ள நல்லகருப்பன்பட்டியை சேர்ந்தவர் ராதா. எலக்ட்ரீசியன். இவரது மனைவி செல்வி (வயது 36). நேற்று அதிகாலையில் செல்வி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது 2 பேர் மாடிப்படி வழியாக உள்ளே வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் இருட்டில் ஓடி மறைந்து விட்டனர்.

    நல்லகருப்பன்பட்டிக்கு பக்கத்து ஊரான சில்வார்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் முருகன் (40). இவர் குடும்பத்துடன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாததால் வீடு பூட்டிக்கிடந்தது. நேற்று அதிகாலையில் இந்த வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் இருந்த 1 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் இருசம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல்தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    நாமக்கல்லில் அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல்-மோகனூர் சாலை குன்னிமரத்தான் கோவில் அருகே வசித்து வருபவர் ராஜசேகர் (வயது 58). இவர் சேலத்தில் பட்டு வளர்ச்சித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி (55). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலையில் தேன்மொழி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்று விட்டார். பணி நிமித்தமாக சென்னை சென்று இருந்த ராஜசேகர் நேற்று பிற்பகல் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து ராஜசேகர் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

    இது தொடர்பாக ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். அரசு அதிகாரி வீட்டில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    வேலூரில் வக்கீல் மனைவியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் தியாகராஜநகர் பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவர் மனைவியுடன் கொணவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் இரவு காரில் சென்றார்.

    பின்னர் இருவரும் அங்கிருந்து காரில் வீட்டிற்கு புறப்பட்டனர். காரை வக்கீல் ஓட்டினார். அவரது மனைவி பின் இருக்கையில் இடது ஓரத்தில் அமர்ந்திருந்தார். அவர்களை ‘ஹெல்மெட்’ அணிந்தபடி 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    இரவு 11 மணியளவில் கார், வீட்டின் முன்பாக வந்து நின்றது. மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் காரை கடந்து சென்று அருகில் உள்ள ஒரு இடத்தில் நின்றனர்.

    காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வக்கீலின் மனைவி இறங்குவதற்காக கதவை திறந்தார். காரை ஓட்டி வந்த வக்கீலும் இறங்குவதற்காக ஆயத்தமானார்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் சற்று தொலைவில் நின்றவர்கள் மீண்டும் காரை நோக்கி திரும்பினர். அப்போது வக்கீலின் மனைவி காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் செல்ல முயன்றார். ஆனால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரும் அவர் மீது மோதுவதுபோல் நெருங்கினர். அதிர்ச்சியடைந்த வக்கீலின் மனைவி ஒதுங்கி நிற்பதற்குள் அந்த 2 பேரும் அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர்.

    நகையை பறிகொடுத்த பெண் ‘திருடன்’... ‘திருடன்’... என சத்தம் போட்டார். உடனே டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது கணவரும் இறங்கி ஓடி வந்தார். அருகில் வசிப்பவர்களும் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் நகை பறித்த 2 வாலிபர்களும் அதே மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். நகைபறித்த கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வக்கீல் மனைவியிடம் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த கொள்ளையர்கள் மொத்தம் 19 பவுன் நகையை பறித்து சென்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சூசைநாதன். இவருடைய மனைவி மெடில்டா ஜெயகுமாரி (வயது 40). காம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் தனது ஸ்கூட்டரில் எறையூரில் இருந்து காம்பட் அரசு பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம்.

    அதன்படி நேற்று காலை மெடில்டா ஜெயகுமாரி தனது ஸ்கூட்டரில் பள்ளிக்கு புறப்பட்டார். எறையூர்-காம்பட்டு கிராம சாலையில் பில்ராம்பட்டு ஏரிக்கரை அருகே சென்றபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேரில் ஒருவன் திடீரென ஸ்கூட்டரில் சென்ற மெடில்டா ஜெயகுமாரி கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்தான்.

    அப்போது நிலைதடுமாறிய மெடில்டா ஜெயகுமாரி, ஸ்கூட்டருடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனிடையே நகை பறித்த மர்மநபர்கள் 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். மெடில்டா ஜெயகுமாரியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதேபோல், சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி கலைவாணி(45). சின்னசேலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து தனது ஸ்கூட்டரில் கல்லூரிக்கு புறப்பட்டார். நயினார்பாளையம்-சின்னசேலம் சாலையில் பேக்காடு வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென கலைவாணி ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை மோதினர். இதில் கலைவாணி நிலைதடுமாறி ஸ்கூட்டருடன் கீழே விழுந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த மர்மநபர் ஒருவர், திடீரென கலைவாணி கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறிக்க முயன்றான். அப்போது, அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் ஏதும் இல்லாமல், சாலை வெறிச்சோடி கிடந்தது. இதனால் பயந்து போன, கலைவாணி என்னை எதுவும் செய்து விடாதீர்கள் நகையை கழற்றி தருகிறேன் என கூறி கழுத்தில் கிடந்த நகையை எடுத்தார்.

    அந்த சமயத்தில் அந்த வழியாக வாகனம் வரும் சத்தத்தை கேட்ட கலைவாணி நகையை கையில் இறுக்கி பிடித்துக் கொண்டார். உடனே அந்த மர்மநபர்கள், கலைவாணி கையில் வைத்திருந்த நகையை பறித்தபோது, சங்கிலி இரண்டாக அறுந்ததில் ஒரு பகுதி நகையை மட்டும் அவர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். மர்மநபர்கள் பறித்து சென்ற நகை 7 பவுன் ஆகும். இதனிடையே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்ததில் கலைவாணிக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதைபார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக நயினார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இருவேறு இடங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் இந்த இரு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்று போலீசார் கருதுகின்றனர். ஏனெனில் இருவேறு சம்பவத்திலும் தனியாக ஸ்கூட்டரில் செல்லும் பெண்களை குறிவைத்தே நடந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே வேளையில் வேறு ஏதேனும் பகுதியில் இருந்து கொள்ளை கும்பல், விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைந்து விட்டதா என்று பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

    இது தொடர்பாக மெடில்டா ஜெயகுமாரி அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசாரும், கலைவாணி அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசாரும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து, ஹெல்மெட் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
    கோவை பீளமேட்டில் மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம் பணம் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை காந்திமாநகர் ஸ்ரீராம்நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39). இவர் விநாயக புரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சினிமா பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றார். அவர், நள்ளிரவு 1.30 மணிக்கு வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மகேந்திரன் வீட்டை கண்காணித்து திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18¾ பவுன் தங்க நகை திருடி சென்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே சிறுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்குராஜ் மனைவி நிர்மலாதேவி(வயது 34). இவர் வீட்டை பூட்டிவிட்டு அதே கிராமத்தில் உள்ள அவரது சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18¾ பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் அப்பயநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
    சென்னை வந்த ரெயிலில் ஆந்திர திருடர்கள் வங்கி பெண் ஊழியர் மற்றும் அரசு டாக்டரிடம் 57½ பவுன் நகைகளை திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சென்னை:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் பி.வி.ராஜூ. இவரது மனைவி லட்சுமி (வயது 58). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக உள்ளார். நேற்று முன்தினம் லட்சுமி தனது கணவருடன் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். ஐதராபாத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் இருவரும் தூங்க சென்றனர்.

    பின்னர் கூடூர் ரெயில் நிலையம் அருகே லட்சுமி எழுந்து பார்த்தபோது அவரது பையும், அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் செல்போன் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று சென்னை வந்த லட்சுமி, இது குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

    ஆந்திரா மாநிலம் சமல்காட் பகுதியை சேர்ந்தவர் பரக் குமார் (53). இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். நேற்று முன்தினம் விசாகப்பட்டினம் வாராந்திர ரெயில் மூலம் பரக்குமார் மற்றும் அவரது மனைவி சென்னைக்கு புறப்பட்டனர்.

    ரெயில் கூடூர் அருகே வந்தபோது பரக்குமார் ரெயிலில் கழிப்பறைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது தான் வைத்திருந்த பையும், அதில் இருந்த 17½ பவுன் தங்க நகை உள்ளிட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான பொருட்களும் திருட்டுபோனது தெரியவந்தது.

    இதுகுறித்து பரக்குமார் சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார்.

    லட்சுமி மற்றும் பரக்குமாரின் புகாரின் அடிப்படையில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்த சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், இந்த சம்பவம் நடைபெற்றது ஆந்திரா என்பதால், இது குறித்து ஆந்திரா போலீசாரிடம் தகவல் தெரிவித்து வழக்கை ஆந்திராவுக்கு மாற்றம் செய்தார். 
    சென்னை புறநகரில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    பூந்தமல்லி:

    சென்னையில் அரும்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட புற நகர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க அண்ணா நகர் போலீஸ் உதவி கமிஷனர் குணசேகரன், அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.



    மேலும் சம்பவம் நடந்த இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது சம்பவம் நடந்த அனைத்து இடங்களிலும் மொபட்டில் பதிவு எண் இல்லாமல் 2 பேர் வந்து தங்கச்சங்கிலியை பறித்துச் செல்வது போல காட்சிகள் பதிவாகி இருந்தன.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில் நடந்து சென்ற திருப்பதி என்பவரிடம் மொபட்டில் வந்த 2 பேர், அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர்.

    அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டதையடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த 2 பேரை மடக்கிப் பிடித்தனர். மேலும் சங்கிலி பறிப்பு தொடர்பாக ஏற்கனவே கண்காணிப்பு கேமராவில் பதிவான அதே நபர்கள்தான் இவர்கள் என்பது உறுதியானது.

    பிடிபட்டவர்கள் வில்லிவாக்கத்தை சேர்ந்த சபி பாட்ஷா (வயது 27), அண்ணா நகரை சேர்ந்த பிரகாஷ் (29) என்பதும் தெரியவந்தது. இவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி பெரம்பூரை சேர்ந்த ராஜ்குமார் (24) என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், சபி பாட்ஷா, பிரகாஷ் 2 பேரும் மொபட்டில் அமர்ந்து கொண்டு தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நோட்டமிடுவார்கள். இவர்களுக்கு சற்று தூரத்தில் ராஜ்குமார் காரில் அமர்ந்து கொண்டு அந்த வழியே வேறு யாராவது வருகிறார்களா? என்று பார்த்துக் கொண்டு இருப்பார்.

    தங்கச்சங்கிலியை பறித்தவுடன் அதை காரில் இருக்கும் ராஜ்குமாரிடம் கொடுத்து விட்டு சென்று விடுவார்கள். ராஜ்குமார் ஏதும் தெரியாதது போல் நகையுடன் காரை எடுத்து சென்று விடுவார்.

    போலீசார் தங்களை பிடிக்காமல் இருக்க மொபட்டில் பதிவு எண் இல்லாமல் புதிய வாகனம் போல் வலம் வந்துள்ளனர். இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், ஒரு கார், 2 மொபட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் சிக்குவதற்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பெரும் உதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபி பாட்ஷா, பிரகாஷ் ஆகிய 2 பேரும் தங்கச்சங்கிலி பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×