என் மலர்
காஞ்சிபுரம்

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் தனியார் சமையல் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு ஆந்திர மாநிலம் ஆனந்தபூரை சேர்ந்த சவன்குமார்(வயது 20) என்பவர் இளங்கலை கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருடன், அதே ஊரைச் சேர்ந்த ஹரிஹர சண்முகம் (20) என்பவரும் முதலாம் ஆண்டு இளங்கலை கேட்டரிங் படித்து வந்தார். இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
ஹரிஹர சண்முகத்தின் தங்கை முறையான உறவுக்கார பெண்ணை சவன்குமார் காதலித்து வந்தார். இதை அறிந்த ஹரிஹர சண்முகம், தனது தங்கையை காதலிக்க கூடாது என சவன்குமாரை பலமுறை கண்டித்தார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று சவன்குமார், செல்போனில் மீண்டும் அந்த பெண்ணிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஹரிஹர சண்முகம் ஆத்திரம் அடைந்தார். கல்லூரிக்கு வந்த சவன்குமாரை, வாசலிலேயே நிறுத்தி, தனது தங்கையுடனான காதலை கைவிடுமாறு கூறினார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹரிஹர சண்முகம், தன்னிடம் இருந்த கத்தியால் சவன்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சவன்குமார், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், ஹரிஹர சண்முகத்தை மடக்கி பிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்துவந்த துரைப்பாக்கம் போலீசார், கொலையான சவன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக மாணவர்கள் பிடித்து வைத்து இருந்த மாணவர் ஹரிஹர சண்முகத்தை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
ஆலந்தூர்:
கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள தியேட்டர் அருகே கடந்த 3 நாட்களாக கேட்பாரற்று சரக்கு வேன் ஒன்று நின்றது.
இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பரங்கிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் விரைந்து வந்து சரக்கு வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
வேனில் சோதனை செய்த போது அதன் மேல் பகுதியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
அதில் சிறிய பாக்கெட்டுகளாக கஞ்சா இருந்தது. மொத்தம் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேனில் கஞ்சா கடத்தி வந்தவர் யார்? எதற்காக வண்டியை இங்கே நிறுத்தி சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த வேனின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் பற்றிய விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.
போலீசாரின் சோதனைக்கு பயந்து கஞ்சாவுடன் வேனை அங்கு நிறுத்தி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
படப்பையை அடுத்த மணிமங்களம் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் பாலாஜி விஸ்வநாதன் (வயது23). இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வந்தார்.
இவருக்கும், கீழக்கரணையை சேர்ந்த சிவரஞ்சனிக்கும் கடந்த 12 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை பாலாஜி விஸ்வநாதன் மறைமலைநகர் அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே தனியார் பெட்ரோல் பங்க் சர்வீஸ் ரோட்டில் மறைமலைநகர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மறைமலைநகரில் இருந்து செங்கல்பட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சேர்ந்த தினேஷ் (19) என்பவர் வந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் வேகமாக மோதிக்கொண்டன.
இதில் ஆபத்தான நிலையில் பாலாஜி விஸ்வநாதனை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதே போல் பலத்த காயம் அடைந்த தினேஷ் ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் 100 கிலோவுக்கும் மேல் தங்கம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது. இதில் ஏகாம்பரநாதர் கோவில் குருக்கள் ராஜப்பாவுக்கு (வயது 87) தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அறநிலையத்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜப்பா குருக்களை தேடி வந்தனர். இதனால் ராஜப்பா குருக்கள் கனடா நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ராஜப்பா குருக்கள் கனடா நாட்டில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் காலையில் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விமான நிலைய போலீசார், ராஜப்பா குருக்களை கைது செய்தனர். பின்னர் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ராஜப்பா குருக்களை மும்பையில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்று முன்தினம் இரவு போலீசார் அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாதவராமானுஜர் வீட்டுக்கு ராஜப்பா குருக்களை அழைத்து சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, ராஜப்பா குருக்களை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைந்தனர்.
ஆலந்தூர்:
குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 1 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 2 வாலிபர்களின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.
அவர்கள் 2 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரிந்தது. மொத்தம் 593 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 21 லட்சம் ஆகும். தங்கக் கட்டிகள் யாருக்கு கடத்தப்பட்டது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்பது குறித்து பிடிபட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் நடைபெறும் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும் 35-வது ஜி.எஸ்.டி. கூட்டத்தொடரில் கலந்து கொள்ள செல்கிறேன்.
மேலும் ஜி.எஸ்.டி மூலமாக நமக்கு சேர வேண்டிய சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி. மூலமாக வரவேண்டிய ஆயிரம் கோடி ரூபாயும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் நாட்டின் பிரதமரிடமும், மத்திய நிதியமைச்சரிடமும், ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார். இந்தக் கூட்டத்தொடரிலும் அதுகுறித்து வலியுறுத்துவோம்.
ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதற்கான கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதன்படி தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க சட்டத்துறை அமைச்சர் அதில் கலந்துகொள்ள சென்றார். அங்கு சென்ற பின்தான் தெரிந்தது கட்சித் தலைவர்கள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும் என்று. அதனால் சட்டத்துறை அமைச்சர் கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் எங்களுடைய கருத்தை எழுத்துப்பூர்வமாக நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். மேலும் இதே நிலை தான் தி.மு.க.வுக்கும். டி.ஆர்.பாலு கலந்துகொள்ள அங்கே தயாராக இருந்தார். அவரும் கலந்து கொள்ள முடியவில்லை.
ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பது நல்லதுதான். ஆனால் அதில் சிக்கல்கள் அதிகம். எங்களைப் பொறுத்தவரை இத்திட்டத்திற்கான வரைவுகளை கேட்டிருக்கிறோம். அது கிடைத்த பின் இது குறித்தான கருத்து தெரிவிப்போம்.
குருமூர்த்தியின் கருத்துக்களுக்கு நமது அம்மா பத்திரிகை மூலமாக கருத்து சொல்லி விட்டோம். குருமூர்த்தி அ.தி.மு.க.வின் எதிர்வினையை தேடாமல் இருந்தால் நல்லது. காய்க்கிற மரம் தான் கல்லடி படும் என்பது போல அனைவரும் அ.தி.மு.க.வை தான் தாக்குகிறார்கள். இன்று தமிழகத்தில் அ.தி.மு.க. மிகப் பெரிய சக்தியாக இருக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை வறட்சியிலும், வெள்ளத்திலும் இந்த அரசு எப்படி சமாளித்தது என்று அனைவரும் அறிந்திருக்கிறார்கள். மக்கள் அதை மறக்கவில்லை.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொறுத்தவரை அவர் உலகம் சுற்றும் வாலிபன். தமிழ்நாட்டின் எந்த கஷ்ட நஷ்டத்திற்கும் தி.மு.க.வின் பங்கு எப்போதும் இருந்ததில்லை.
சட்டசபையில் குடிநீர் பிரச்சினைக்காக கவனயீர்ப்பு கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். எதிர்க்கட்சிகள் என்றால் தீர்மானம் கொண்டுவரப்பட தான் செய்யும் அதற்கு உரிய பதிலை அரசு தெரிவிக்கும்.
தமிழகத்திற்கு வேண்டிய தண்ணீரை அண்டை மாநிலமான கேரளா அரசு தருகிறோம் என்று கூறியிருப்பது நல்ல விஷயம் தான். அதற்கு எங்களுடைய நன்றிகளை நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். அதை நாங்கள் மறுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கூடுவாஞ்சேரிக்கும் வண்டலூருக்கும் இடையில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக சுரங்கபாதை அமைக்கும் பணி ரெயில்வே நிர்வாகத்தால் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் செங்கல்பட்டு ரெயில்வே சந்திப்பில் இருந்து அதிகாலை 3.55 மணியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்கள் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் ரெயில்களும் ரெயில்வே நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அன்று பிற்பகல் 2.25 மணி முதல் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என செங்கல்பட்டு ரெயில்வே நிலைய மேலாளர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இதேபோல் செங்கல்பட்டு வழியாக அன்று காலை பாண்டிச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் புதுச்சேரி ரெயில் (எண். 16116), 8.30 மணிக்கு செல்லும் அந்தோதியா விரைவு ரெயில் (16192), 10 மணிக்கு செல்லும் திருச்செந்தூர் விரைவு ரெயில் (16106), 11 மணிக்கு செல்லும் பல்லவன் விரைவு ரெயில் (12606), 1.20 மணிக்கு செல்லும் வைகை விரைவு ரெயில் (12636) ஆகிய ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெவ்வேறு பாதையில் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
23-ந் தேதி (ஞாயிறு) காலை சென்னை எழும்பூரில் இருந்து 6.40 மணிக்கு புதுச்சேரிக்கு இயக்கப்படும் புதுச்சேரி விரைவு பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வதீர்த்தக் குளம் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ளது.
எப்போதும் நீர் நிரம்பி காணப்படும் இந்த குளம் தற்போது கடும் வெயிலால் வேகமாக வறண்டு வருகிறது.
இதையடுத்து வறண்ட குளத்தின் ஒரு பகுதியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளத்தில் சுமார் 1 அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை கிடந்ததை கண்டு பிடித்தனர்.
இதுபற்றி பெரிய காஞ்சிபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிலையை மீட்டு விசாரணை நடத்தினர். அது பெருமாள் சிலை என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குமரகோட்டம் கோவிலில் இருந்து கச்சியப்ப சிவாச்சாரியார் சிலை ஒன்று காணாமல் போனது.
விசாரணையில் அந்த சிலையை கோவிலின் அர்ச்சகர் கார்த்திக் என்பவர் சர்வ தீர்த்த குளத்தில் வீசியதாகத் தெரிவித்தார்.
தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் திருக்குளத்தில் தேடிய போதும் அந்த சிலை சிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது குளத்தில் இருந்து பெருமாள் சிலை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட பெருமாள் சிலையை போலீசார் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ஆலந்தூர் மண்டலம் 161, 163-வது வார்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் சீராக இல்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீடுகளுக்கு குடிநீர்வந்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டது. இந்தநிலையில் ஆதம்பாக்கம் மஸ்தான்கோரி தெருவில் உள்ள ராட்சத குடிநீர் டேங்கில் இருந்து தண்ணீர் பிடிப்பதற்காக இன்று காலை லாரிகள் வந்தன.
அவற்றை பார்த்ததும் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். வீட்டு இணைப்புகளுக்கே குடிநீர் வினியோகிக்காமல் லாரிகளில் தண்ணீர் பிடித்து எங்கு கொண்டு செல்கிறீர்கள்? என கூறி பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்து குடிநீர் டேங்க் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் தி.மு.க. வட்ட செயலாளர் ஜெகதீஸ்வரன், நிர்வாகிகள் வேலவன், சுப்புராஜ், உதயா காங்கிரஸ் பகுதி செயலாளர் சீதாபதி, விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர் சீராளன் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பேசினர். இன்று மாலைக்குள் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மூவரசம்பட்டு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தினமும் இரவு 9.30 மணிக்குமேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் நள்ளிரவு ஒரு மணியில் இருந்து, அதிகாலை 3 மணிக்கு பிறகே மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதேபோல் நேற்று இரவும் மடிப்பாக்கம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மடிப்பாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலிகளை தள்ளி விட்டு போனை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஊழியர்கள் மின்சார வாரிய கதவை மூடிவிட்டு வெளியேசென்று விட்டனர்.
இதையடுத்து பொதுமக்கள் வேளச்சேரி கைவேலி மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறும் போது, முன்னாள் கவுன்சிலர்கள், வி.ஐ.பி.கள் இருக்கும் ஒரு சில ஏரியாக்களில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட வில்லை இது ஏன்? என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து மின்தடைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






