search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மடிப்பாக்கத்தில் மின்வெட்டை கண்டித்து பொது மக்கள் மறியல் - மின்வாரிய அலுவலகம் முற்றுகை
    X

    மடிப்பாக்கத்தில் மின்வெட்டை கண்டித்து பொது மக்கள் மறியல் - மின்வாரிய அலுவலகம் முற்றுகை

    மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மூவரசம்பட்டு ஆகிய பகுதிகளில் மின்வெட்டை கண்டித்து பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மூவரசம்பட்டு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தினமும் இரவு 9.30 மணிக்குமேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.

    பின்னர் நள்ளிரவு ஒரு மணியில் இருந்து, அதிகாலை 3 மணிக்கு பிறகே மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் நேற்று இரவும் மடிப்பாக்கம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மடிப்பாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலிகளை தள்ளி விட்டு போனை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஊழியர்கள் மின்சார வாரிய கதவை மூடிவிட்டு வெளியேசென்று விட்டனர்.

    இதையடுத்து பொதுமக்கள் வேளச்சேரி கைவேலி மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் கூறும் போது, முன்னாள் கவுன்சிலர்கள், வி.ஐ.பி.கள் இருக்கும் ஒரு சில ஏரியாக்களில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட வில்லை இது ஏன்? என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

    இதையடுத்து மின்தடைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×