search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையில் குடிநீர் பிரச்சினையை கிளப்பினால் அரசு பதிலடி கொடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
    X

    சட்டசபையில் குடிநீர் பிரச்சினையை கிளப்பினால் அரசு பதிலடி கொடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

    எதிர்க்கட்சிகள் சட்டசபையில் குடிநீர் பிரச்சினையை கிளப்பினால் அதற்கு அரசு உரிய பதிலடி கொடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் நடைபெறும் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும் 35-வது ஜி.எஸ்.டி. கூட்டத்தொடரில் கலந்து கொள்ள செல்கிறேன்.

    மேலும் ஜி.எஸ்.டி மூலமாக நமக்கு சேர வேண்டிய சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி. மூலமாக வரவேண்டிய ஆயிரம் கோடி ரூபாயும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் நாட்டின் பிரதமரிடமும், மத்திய நிதியமைச்சரிடமும், ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார். இந்தக் கூட்டத்தொடரிலும் அதுகுறித்து வலியுறுத்துவோம்.

    ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதற்கான கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதன்படி தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க சட்டத்துறை அமைச்சர் அதில் கலந்துகொள்ள சென்றார். அங்கு சென்ற பின்தான் தெரிந்தது கட்சித் தலைவர்கள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும் என்று. அதனால் சட்டத்துறை அமைச்சர் கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் எங்களுடைய கருத்தை எழுத்துப்பூர்வமாக நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். மேலும் இதே நிலை தான் தி.மு.க.வுக்கும். டி.ஆர்.பாலு கலந்துகொள்ள அங்கே தயாராக இருந்தார். அவரும் கலந்து கொள்ள முடியவில்லை.

    ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பது நல்லதுதான். ஆனால் அதில் சிக்கல்கள் அதிகம். எங்களைப் பொறுத்தவரை இத்திட்டத்திற்கான வரைவுகளை கேட்டிருக்கிறோம். அது கிடைத்த பின் இது குறித்தான கருத்து தெரிவிப்போம்.

    குருமூர்த்தியின் கருத்துக்களுக்கு நமது அம்மா பத்திரிகை மூலமாக கருத்து சொல்லி விட்டோம். குருமூர்த்தி அ.தி.மு.க.வின் எதிர்வினையை தேடாமல் இருந்தால் நல்லது. காய்க்கிற மரம் தான் கல்லடி படும் என்பது போல அனைவரும் அ.தி.மு.க.வை தான் தாக்குகிறார்கள். இன்று தமிழகத்தில் அ.தி.மு.க. மிகப் பெரிய சக்தியாக இருக்கிறது.

    தமிழகத்தைப் பொருத்தவரை வறட்சியிலும், வெள்ளத்திலும் இந்த அரசு எப்படி சமாளித்தது என்று அனைவரும் அறிந்திருக்கிறார்கள். மக்கள் அதை மறக்கவில்லை.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொறுத்தவரை அவர் உலகம் சுற்றும் வாலிபன். தமிழ்நாட்டின் எந்த கஷ்ட நஷ்டத்திற்கும் தி.மு.க.வின் பங்கு எப்போதும் இருந்ததில்லை.

    சட்டசபையில் குடிநீர் பிரச்சினைக்காக கவனயீர்ப்பு கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். எதிர்க்கட்சிகள் என்றால் தீர்மானம் கொண்டுவரப்பட தான் செய்யும் அதற்கு உரிய பதிலை அரசு தெரிவிக்கும்.

    தமிழகத்திற்கு வேண்டிய தண்ணீரை அண்டை மாநிலமான கேரளா அரசு தருகிறோம் என்று கூறியிருப்பது நல்ல வி‌ஷயம் தான். அதற்கு எங்களுடைய நன்றிகளை நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். அதை நாங்கள் மறுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×