search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanchipuram temple"

    பச்சைப்பசேல் வயல் வெளிகள், தென்றல் வருடும் நெற்கதிர்கள், மெல்லிய ரீங்காரத்துடன் அசைந்தாடும் கரும்புத் தோட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் ஊரின் நடுவே அமைந்துள்ளது இந்த அழகிய காமாட்சிபுரம் ஆலயம்.
    ஒரு சமயம் ஏதோ காரணமாக இறைவனுடன் அன்னை காமாட்சி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.

    இறைவியின் வாக்குவாதம் இறைவனுக்குப் பிடிக்கவில்லை. கோபமடைந்த இறைவன் இறைவியை பூலோகம் செல்லும்படி சபித்தார். வேதனையடைந்த இறைவி, இறைவனிடம் “நான் தங்களை வந்தடைவது எப்போது?” எனக் கேட்டாள்.

    கோபம் தணிந்த ஈசன் “பந்தணைநல்லூருக்கு அருகே நான் விசுவநாதர் என்ற நாமத்துடன் கோவில் கொண்டுள்ளேன். அங்கு வந்து நீ என்னை பூஜிப்பாயாக!” என அருளினார்.

    இதையடுத்து இறைவி, இத்தலம் வந்து இறைவனை நோக்கி தவமிருந்து பூஜை செய்தாள்.

    மனம் குளிர்ந்த இறைவன், அன்னை காமாட்சியை தன்னுடன் இணைத்துக் கொண்டார். அந்தத் தலம் ‘காமாட்சிபுரம்’ என அன்னையின் பெயராலேயே அழைக்கப்படலாயிற்று.

    பச்சைப்பசேல் வயல் வெளிகள், தென்றல் வருடும் நெற்கதிர்கள், மெல்லிய ரீங்காரத்துடன் அசைந்தாடும் கரும்புத் தோட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் ஊரின் நடுவே அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம்.

    சிறிய கோபுரத்துடன் கூடிய அழகிய முகப்பு மண்டபம், நம் கண்களைக் கவரும். கிழக்கு திசை நோக்கி அமைந்த பழமையான இந்த ஆலயத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே சென்றால், விசாலமான பிரகாரம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் இறைவி விசாலாட்சி நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். இறைவியின் கருவறை நுழைவு வாசலின் இருபுறமும் துவாரபாலகியரின் சுதை வடிவத் திருமேனிகள் உள்ளன. இத்தலத்தின் பெயருக்குக் காரணமான அன்னை காமாட்சியை, இறைவி விசாலாட்சியின் கோஷ்டத்தில் தரிசிக்கலாம்.

    விசுவநாதர், விசாலாட்சி

    அர்த்த மண்டபத்தின் முன் நந்தியும், பலி பீடமும் இருக்கிறது. நுழைவு வாசலின் இருபுறமும் துவாரபாலகர்களின் அழகிய திருமேனிகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. கருவறையில் இறைவன் காசி விசுவநாதர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி தன்னைத் தானே பூஜை செய்து கொண்டவர் என பக்தர்கள் கூறுகின்றனர்.

    பிரகாரத்தின் மேற்கு திசையில் விநாயகர், முருகன், வள்ளி- தெய்வானை, மகாலட்சுமி கஜலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. கிழக்கில் சனீஸ்வரனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. எனவே இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. பைரவர், சூரியன் திருமேனிகளும் கிழக்குப் பிரகாரத்தில் உள்ளன.

    தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது. சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி மாதம், சோம வாரம், கார்த்திகை போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுணர்மியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

    ஊடல் காரணமாக கணவனைப் பிரிந்த இறைவி, மீண்டும் அவருடன் சேர்ந்த தலம் இது. எனவே பிரிந்து வாழும் தம்பதியர் இத்தலத்து இறைவன் - இறைவியை பிரார்த்தனை செய்தால் மீண்டும் அவர்கள் இணைந்து வாழ்வர் என்பது நம்பிக்கையாக திகழ்கிறது.

    தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்துத் தடத்தில் பந்தநல்லூருக்கு வடமேற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது காமாட்சிபுரம்.
    வைகுண்ட ஏகாதசி நாளில் காஞ்சீபுரம் கயிலாயநாதர் திருக்கோவிலில் வழிபட்டு, பின்னர் அருகிலுள்ள பரமேஸ்வர விண்ணகரம் எனும் வைகுண்டநாதப் பெருமாள் ஆலயத்திலும் வழிபாடு செய்ய வேண்டும்.
    மோட்சம் என்பதனை சைவர்கள் ‘கயிலாயம்' என்பார்கள். வைணவர்கள் ‘வைகுண்டம்' என்பார்கள். காஞ்சீபுரத்தில் கயிலாயநாதர் திருக்கோவிலும் உள்ளது. அதுபோல வைகுண்டநாதப் பெருமாள் திருக்கோவிலும் இருக்கிறது. இந்த இரண்டு திருக்கோவில்களிலும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் காஞ்சீபுரம் கயிலாயநாதர் திருக்கோவிலில் வழிபட்டு, பின்னர் அருகிலுள்ள பரமேஸ்வர விண்ணகரம் எனும் வைகுண்டநாதப் பெருமாள் ஆலயத்திலும் வழிபாடு செய்ய வேண்டும்.

    வைகுண்டநாதனின் பரமபத வாசலை காப்பவர்கள், ஜெய- விஜயர்கள் ஆவர். இவர்கள் கயிலாயநாதர் அனுக்கிரகத்தால் பூலோகத்தில் பிறப்பெடுத்து, தங்கள் பரமபத நாதனான வைகுண்டநாதருக்கு காஞ்சீபுரத்தில் ஆலயம் அமைத்தனர். வைகுண்ட ஏகாதசி நாளில் இந்த ஆலயத்தில் வழிபடுவது, ஒருவரது ஆயுட்காலத்திற்கு பிறகு வைகுண்ட பதவி பெற்றுத் தரும் என்கிறார்கள்.

    விதர்ப்ப நாட்டின் மன்னன் விரோசனன். இவன் பகவான் கண்ணனின் வம்சம். விரோசனனுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் மன்னன், சில முனிவர்களிடம் சென்று வழி கேட்டான். அதற்கு முனிவர்கள், “கண்ணபிரான், ருக்மணியை திருமணம் செய்த போது அவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. இதையடுத்து கண்ணபிரான், திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வழிபட்டார். சிவனருளால் கண்ணனுக்கும்- ருக்மணிக்கும் ‘ப்ரத்யும்னன்’ என்ற குழந்தை பிறந்தது. அதுபோல கண்ண பிரான் வம்சத்தில் வந்த தாங்களும் திருக்கயிலாயம் சென்று கயிலாயநாதரான சிவபெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்” என்று கூறினர்.

    அதனைக் கேட்ட மன்னன் விரோசனன், “முனிவர்களே! திருக்கயிலாயம் நெடுந்தொலைவில் உள்ளது. அங்கே சென்று வர மாதக் கணக்கில் ஆகுமே” என்று கூறி கலங்கினான்.

    “கவலை வேண்டாம் மன்னா! காஞ்சீபுரத்தில் உள்ள கயிலாயநாதர் ஆலயம் சென்று வழிபட்டாலே திருக்கயிலாயம் சென்று ஈசனை வழிபட்ட நற்பலன் கிட்டும்” என்று முனிவர்கள் ஆலோசனை கூறினர்.

    மன்னனும் அதன்படியே கயிலாயநாதர் ஆலயம் சென்று, ஆலயத் திருப்பணிகளைச் செய்து வழிபாடு செய்தான்.

    மன்னன் கனவில் தோன்றிய ஈசன், “மன்னா! உமக்கு வைகுண்டத்தின் வாசல் காப்பாளர்களான ஜெய- விஜயர்களே குழந்தைகளாக வந்து அவதரிப்பர்” என்று கூறி மறைந்தார்.



    ஈசன் அருளியபடியே மன்னனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு பல்லவன், வில்லவன் என்று பெயரிட்டு வளர்த்தான். அவர்கள் சிறு வயதில் இருந்து மகாவிஷ்ணுவை பூஜித்து வந்தனர். வாலிப வயது வந்த போது பல்லவனும் வில்லவனும், காஞ்சீபுரத்தில் கயிலாயநாதர் ஆலயத்தின் வடக்கு மூலையில் அஸ்வமேத யாகம் செய்தனர். அவர்களுக்கு வைகுண்டத்தில் இருக்கும் வடிவிலேயே மகாவிஷ்ணு அருள் பாலித்தார். அவர் காட்சி அளித்த இடத்திலேயே பெருமாள் கோவிலும் கொண்டார்.

    அந்த திருத்தலமே தற்போதைய காஞ்சீபுரத்தில் உள்ள ‘பரமேஸ்வர விண்ணகரம்' என்னும் திருத்தலமாகும். ‘விண்ணகரம்’ என்றால் ‘வைகுண்டம்’ என்று பொருள். வைகுண்டத்தில் அருளும் அதே திருக் கோலத்தில், பரமபதநாதராய் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் இறைவன் காட்சி தருகிறார். வைகுந்தவல்லி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் தனிச்சன்னிதியில் அருள்கிறார். இங்கு ஆலயக் கருவறை மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது.

    அதில் பெருமாளின் நின்ற திருக்கோலத்தை மேல் தளத்திலும், பல்லவனுக்கும், வில்லவனுக்கும் காட்சி தந்து அமர்ந்த திருக்கோலத்தை கீழ் தளத்திலும், வடக்கே தலை வைத்து தெற்கில் திருப்பாதம் நீட்டிய வண்ணம் அருளும் சயனித்த திருக்கோலத்தை நடு தளத்திலும் கண்டு வழிபடலாம். மகாவிஷ்ணு மூன்று கருவறைகளில் தனித்தனியாய் அருளும் அமைப்பினைக் கொண்டது இத்தலம். நான்காவது கருவறையும் இங்கு உள்ளதாம். ஆனால் நான்காவது கருவறையில் எதுவும் இல்லை.

    ஏகாதசி மற்றும் சனிக்கிழமைகளில் இத்தல பெருமாளை வழிபட்டால், சகல மேன்மைகளும் நம் வாழ்வில் வந்து சேரும் என்கிறார்கள். மணல் பாறை களால் ஆன, அதிக புடைப்பு சிற்பங்கள் நிறைந்த குடைவரை கோவில் அமைப்பினை உடையது இத்திருத்தலம். பெரும்பாலும் அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசி நாளில் பரமபத வாசல் திறப்பார்கள். ஆனால் இங்கு ஜெய விஜயர்களே ஆலயம் அமைத்ததால், இத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி நாளில் தனியாக சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் கிடையாது.

    வைகுண்ட ஏகாதசி நாளில் இத்தல கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து வைகுண்டநாதரை வழிபடுவதை சிறப்பாகச் சொல்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், பிறந்த குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழவும், குழந்தைகளுக்கு நல்லறிவு, ஒழுக்கம் வாய்க்கவும் முதலில் இங்குள்ள கயிலாயநாதர் ஆலயத்தில் வழிபட்டு, அதன்பின்னர் பரமபத நாதரான வைகுண்ட நாதரை வழிபட வேண்டும் என்கிறார்கள். இத்திருத்தலத்தில் சர்ப்ப தோஷங்கள் உள்ளவர்கள், ஆயில்யம் நட்சத்திர நாட்களில் வந்து வழிபட சர்ப்ப தோஷங்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகில் பரமேஸ்வர விண்ணகரம் எனும் வைகுண்டப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
    ×