search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.1 லட்சம் கடனுக்காக வாலிபரை கடத்தி சிறை வைத்து தாக்குதல் - அ.ம.மு.க. நிர்வாகிகள் கைது
    X

    ரூ.1 லட்சம் கடனுக்காக வாலிபரை கடத்தி சிறை வைத்து தாக்குதல் - அ.ம.மு.க. நிர்வாகிகள் கைது

    வேளச்சேரியில் ரூ.1 லட்சம் கடனுக்காக வாலிபரை கடத்தி சிறை வைத்து அரிவாள், உருட்டு கட்டையால் தாக்கிய அ.ம.மு.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் பல்கீஸ். இவரது மகன் ரஜிசேக் ஜான் (வயது30).

    வேளச்சேரியில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த இவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி பல்கீஸ், வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கிண்டி உதவி கமி‌ஷனர் சுப்ராயன், வேளச்சேரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் ஆகியோர் தனிப்படைகளை அமைத்து காணாமல் போன ரஜீசேக் ஜானை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

    போலீஸ் விசாரணையில் அவர் கடன் தகராறில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. அ.ம.மு.க. நிர்வாகிகள் சிலரே கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    வேளச்சேரி பகுதி அ.ம.மு.க. மாணவர் அணி செயலாளரான பாஸ்கர் என்பவரிடம், ரஜிசேக்ஜான் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த பணத்தை திருப்பிக் கொடுப்பதில் ரஜிசேக்ஜான் தாமதப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், ரஜிசேக்ஜானை காரில் கடத்திச் சென்றுள்ளார்.

    பின்னர் அவரை ஒரு வீட்டில் சிறை வைத்துள்ளனர். கடன் தொகையை திருப்பிக் கேட்டு கடத்தல் கும்பல் சரமாரியாக உருட்டுக் கட்டையால் தாக்கி, அரிவாளாலும் வெட்டியுள்ளனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ரஜிசேக்ஜான் கடத்தல் கும்பலிடம் இருந்து மீள முடியாமல் தவித்துள்ளார்.

    ரஜிசேக்ஜானை வீட்டில் அடைத்து வைத்திருந்த கடத்தல் கும்பல், பின்னர் அவரை காரில் சிறை வைத்துள்ளது. 2 நாட்கள் காருக்குள்ளேயே அடைத்து வைத்து சித்ரவதை செய்த அவர்கள், ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    இதற்கிடையே அ.ம.மு.க. நிர்வாகியான பாஸ்கரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். ரஜிசேக்ஜான் அதிரடியாக மீட்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

    அ.ம.மு.க. நிர்வாகியான பாஸ்கர் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக அ.ம.மு.க. 178-வது வட்ட செயலாளர் ஏழுமலையும் போலீசில் சிக்கினார். அவரையும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். கடத்தல் வழக்கில் கார்த்திக், பச்சுராஜன், பிரகாஷ் உள்பட 8 பேர் கைதானார்கள்.

    இந்த கடத்தல் சம்பவம் நேற்று இரவு வேளச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×