என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கே.வி.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு மடிகணினிகளை வழங்கி பேசினர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏசெங்கோட்டையன் பேசியதாவது:-
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் மடிகணினி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 லட்சத்து 80 ஆயிரம் மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து போட்டி தேர்வுகளையும் எதிர் கொள்ளக்கூடிய வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட பாட திட்டத்தை பார்த்து உத்தரபிரதேச மாநில துணை முதல்வர் பாராட்டி உள்ளார். இது போன்ற திட்டம் தனது மாநிலத்திலும் நிறைவேற்ற உத்தரபிரதேசம் வர அம்மாநில துணை முதல்வர் அழைத்து உள்ளார்.
இன்னும் 3 மாதத்தில் 2017-18-ம் ஆண்டு படித்த மாணவ-மாணவிகளுக்கு மடிகணினிகள் வழங்கப்படும். 2,3,4,5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓரிரு வாரத்தில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும். தேர்தல் விதிமுறை அமலில் இருந்ததால் பள்ளி சீருடைகள் வழங்க காலதாமதமானது. அடுத்த வாரத்துக்குள் வண்ண சீருடைகள் வழங்கப்படும்.

அதாவது ஒரு மாணவன் ஒரு மரத்தை நட்டு பராமரித்தால் 2 மதிப்பெண் வழங்கப்படும்.
அரசு பள்ளிகளில் போதிய தண்ணீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்களுக்கு தேவையான தண்ணீரை வாகனங்கள் மூலம் அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மேலும் விழாவில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ, கோபி கோட்டாட்சியர், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி.ஏ. பழனிசாமி, புளியம்பட்டி நகர செயலாளர் மூர்த்தி, முன்னாள் எம்.பி.க்கள் காளியப்பன், சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனை ரவுண்டான வரையிலும், அரசு மருத்துவமனையில் இருந்து பன்னீர்செல்வம் பார்க் வரையிலும், அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து ஸ்வஸ்திக் கார்னர் வரை கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப் பட்டிருந்தது.
அதன்படி இந்தப்பகுதியில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையை தீவிரம் படுத்திவந்தனர். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற அவர்களை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி வாகனத்தை திருப்பி அனுப்பி வந்தனர்.
தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை நிறுத்தி வழக்கு பதிவு செய்து வந்தனர். இது மட்டுமல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சப் டிவிசன்களில் உள்ள போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரும் வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து விசாரித்து வந்தனர். ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 4000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ 4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (34) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அப்பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவரது மனைவியின் தோழியான 17 வயது சிறுமியுடன் ரமேஷ் நட்பு ரீதியில் பழகி உள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கடந்த 2018-ம் ஆண்டில் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து சிறுமியின் தாய் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை ரமேசை போலீசார் கைது செய்தனர். ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ மாணவிகள் 5 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுவிட்டன. இன்று பிளஸ் 1 மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
2017-18 விடுபட்ட மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். 12 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாட திட்டங்கள் இரண்டு ஆண்டுகளில் மாற்றியமைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. கோபி பகுதியில் புறவழி சாலை அமைக்கப்படும். கோபி நகராட்சியில் ரூ.52 கோடியே 50 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

தமிழகத்தைப் பொருத்த வரை 99 சதவீத மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். ஒரு சதவீதம் மட்டுமே இடை நின்றல் மாணவர்களாக உள்ளனர். அவர்களையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
1-ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வண்ண சீருடைகள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும். மேலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாகவும், உள்ளாட்சித் துறை மூலமாகவும் பள்ளிகளில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தால் அந்தப் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் கவுன்சிலிங் மூலம் இடமாறுதலுக்கு இன்று முதல் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த திருவேங்கிடம் பாளையம், ராஜாஜிவீதி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவரது மனைவி ஆர்த்தி (வயது20).
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் கரூரில் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது இங்கு வசித்து வருகின்றனர். ஆகாஷ் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், ஆர்த்தி அதே பகுதியில் உள்ள ஒரு கேபிள் டிவி ஆபிசிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று மதியம் ஆர்த்தி ஆபிசில் இருந்து வீட்டிற்கு சாப்பிடுவதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று இவருக்கு அருகில் வந்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திரும்பி பார்ப்பதற்குள் காரில் இருந்து இறங்கிய 4 பேர் ஆர்த்தி வாயை பொத்தி காருக்குள் தள்ளி ஏற்றி கடத்தி சென்றனர்.
இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இரு சக்கர வாகனங்களில் காரை துரத்தி சென்றனர். இதனைக் கண்ட காரில் வந்த நபர்கள் காரை வேகமாக ஓட்டிச் சென்று பைபாஸ் ரோட்டில் மின்னல் வேகத்தில் சென்றனர்.
ஆனால் பைக்கில் சென்றவர்கள் விடாமல் துரத்தினர். பெருந்துறை அடுத்த துடுப்பதி பிரிவு அருகே காரில் இருந்த ஆர்த்தியை கீழே தள்ளி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் ஆர்த்தியை மீட்ட பொதுமக்கள் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு அவரை விசாரித்த போது, காரில் தனது அத்தை சாந்தி என்பவருடன் அடையாளம் தெரியாத 4 நபர்கள் வந்து தன்னை தூக்கி கொண்டு சென்று கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். ஆனால் பின்னால் துரத்தி வருபவர்களை கண்டதும் என்னை வழியிலேயே தள்ளி விட்டு சென்று விட்டனர் என்றார்.
இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குபதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் ஆர்த்தி காதல் திருமணம் செய்த விவகாரத்தால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு திண்டல் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 17). ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சண்முகம் (19). ஈரோடு வீரப்பம்பாளையம் ராஜா காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (21). மூன்று பேரும் நண்பர்கள். மூன்று பேரும் கல்லூரி படித்து வருகின்றனர். படித்துக் கொண்டே பகுதி நேரமாக சமையல் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சமையல் வேலை செய்துவிட்டு ஜீவா சண்முகம் முத்துக்குமார் ஆகிய மூவரும் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருந்த வேகத்தடையை கவனிக்காமல் கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.
உயிருக்கு போராடிய மூவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது மாணவர் ஜீவா இறந்துவிட்டதாக தெரிவித்தார். சண்முகம் முத்துக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நிலவுகின்ற வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தமிழக மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. நகரங்கள் கிராமங்கள் என்று வித்தியாசம் இல்லாமல் அனைத்து பகுதிகளிலுமே தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. கல்லூரிகள் தொழிற்சாலைகள் வர்த்தக நிறுவனங்கள் என்று அனைத்து நிறுவனங்களுமே தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எப்போது மூடப்படும் என்கிற பயத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசாங்கமே என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை. மழை வந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என்று வருண பகவானை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தண்ணீர் இல்லாமல் ஓட்டல்களும், விடுதிகளும், பள்ளிகளும், கல்லூரிகளும், மருத்துவமனைகளும் மூடப்படுவது எதார்த்தமாக நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வு. ஆனால் அமைச்சர்கள் தரப்பில் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது போல் ஆகும். உண்மை நிலையை ஒப்புக்கொண்டு தீர்வுகளை காண முயற்சிப்பது தான் இப்போதைய தேவை.
தண்ணீர் பஞ்சத்திற்கு ஒரே காரணம் நன்றாக மழை பெய்யும் காலங்களில் அந்த தண்ணீரை சேமிக்க அதற்கான ஏற்பாடுகள் இல்லாததுதான். வந்திருக்கின்ற தண்ணீர் பிரச்சனை இயற்கையாக உருவானது அல்ல மனிதனால் உருவாக்கப்பட்டது தமிழக அரசு அதிகாரிகளும் தமிழக அமைச்சர்களும் தமிழகத்தை பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு முழு முயற்சி எடுக்க முன் வந்தால் தான் ஓரளவாவது தமிழகத்தை காப்பாற்ற முடியும்.
தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைவருடைய கருத்தையும் கேட்டு தேவையான தண்ணீரை தேவையான இடங்களுக்கு உபயோகிப்பதற்கு தாமதமில்லாமல் திட்டமிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வித்தியாசம் பார்க்கக் கூடிய நேரம் இதுவல்ல அரசாங்கம் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க எந்த வகையில் எங்களை உபயோகப்படுத்திக் கொள்ள முன் வந்தாலும் நாங்கள் அதற்காக பணியாற்ற காத்திருக்கிறோம். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை மட்டும் அல்ல அனைத்து இயக்கங்களையும் உபயோகப்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மத்திய-மாநில அரசுகள் சார்பில் தமிழகத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் இருந்து தொடங்கி தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை மொத்தம் 13 மாவட்டங்களில் இந்த உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சென்னிமலை, சித்தோடு, பெரிய புலியூர், பவானி, அந்தியூர் கண்ணாமூச்சி ஆகிய பகுதிகளில் மொத்தம் 80 கிலோ மீட்டர் தூரத்தக்கு இந்த உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த உயர் மின் கோபுரங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் கடுமையான போராட்டத்தை எதிர்த்து போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தியும் (ம.தி.மு.க.) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விவசாயிகள் நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.
இந்த உயர் மின் கோபுரத்தால் கீழே தரை பகுதி வரை அதன் மின் காந்த அலைகள் எதிரொலிக்கிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். மேலும் அதன் அருகே உள்ள விவசாய நிலத்தில் விவசாயமும் செய்ய முடியாது என்று கணேசமூர்த்தி எம்.பி. கூறினார்.
மேலும் இது குறித்து அவர் டெல்லியிலும் பாராளுமன்ற கூட்டத்தின் போது வலியுறுத்துவேன் என்று கூறினார்.
இதற்கிடையே ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து முழு வீச்சில் போராட தயாராகி வருகிறார்கள்.
இதுகுறித்து தமிழக தற்சார்பு விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் கூறும்போது, ‘‘ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளை ஆட்சியாளர்கள் மதிக்காவிட்டால் அதன் பலனை நிச்சயம் அனுபவிப்பார்கள். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இது மிகவும் வேதனை அளிக்கிறது. விட மாட்டோம்... உயர் மின் கோபுரத்துக்கு எதிராக கடைசி வரை போராடுவோம்’’ என்று கூறினார்.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக சென்னை மாநகரில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடும் சமயத்தில், ஈரோட்டில் கனமழை பெய்ததுபோல நேற்று மாலை தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கணம் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், குடிநீர்தான் சாலையில் வீணாக செல்கிறது என்பதை தெரிந்துகொண்டதும் அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அருகில் செல்லும் பெரிய குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து குடிநீர் ‘குபுகுபுவென’ வெளியேறியது. தொடர்ந்து அதிக வேகத்தில் தண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் சாலையில் மழைவெள்ளத்தைபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 2 மணிநேரம் தொடர்ந்து குடிநீர் வீணாகியதால் ஈரோடு சுவஸ்திக் கார்னர் வரை தண்ணீர் வந்தது.
அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று குடிநீர் வினியோகத்தை நிறுத்திவிட்டு குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “ஈரோடு மாநகரில் பல இடங்களில் சிறிதாக ஏற்படும் குழாய் உடைப்பின் மூலமாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. ஈரோடு வ.உ.சி. பூங்கா நுழைவு வாயில் அருகில் வீரபத்திர வீதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதை சரிசெய்ய வேண்டுமென்று மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அங்கு தினமும் குடிநீர் வீணாக சென்றுகொண்டே இருக்கிறது. இந்தநிலையில் பெரிய குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் ஆறுபோல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே குடிநீர் வினியோகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தனிகவனம் செலுத்தி தண்ணீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் துரைராஜ். தனியார் மருத்துவமனை ஊழியர். இரவு துரைராஜ் மளிகை கடைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் துரை ராஜின் மனைவி சாந்தி, மகள் கிருத்திகா, மாமியார் பழனியம்மாள், உறவினர் மகள் அபிராமி ஆகியோர் இருந்தனர்.
அப்போது முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் வீட்டிற்குள் புகுந்து பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து நகையை தருமாறு மிரட்டினர். இதனால் பயந்து போன அவர்கள் சத்தம் போட்டனர். அப்போது ஒரு கொள்ளையன் கத்தியால் தன் கையை அறுத்தான். இதில் ரத்தம் கொட்டியது. இதே போல் உங்கள் கழுத்தையும் அறுத்து விடுவோம் என மிரட்டினர்.
அதை பார்த்து பயந்து போன பெண்கள் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க நகையை கொடுத்தனர். அதன் பின்னர் வீட்டில் இருந்த பீரோ சாவியை பிடுங்கிய கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். மொத்தம் 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த அவர்கள் வீட்டின் பின் பக்க கதவு வழியாக வெளியேறி கரும்பு காட்டிற்குள் புகுந்து தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் இருந்து கை ரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு கொள்ளையர் குறித்த தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்கள் அனைவரும் 30 வயதிற்குள் இருந்தனர்.
மேலும் கொள்ளை சம்பவத்தின் போது 5 ரூபாய் மதிப்புள்ள சிறிய கத்தியையே வைத்திருந்துள்ளனர். துரை ராஜ் மகள் கிருத்திகா திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் மகள் திருமணத்திற்காக நகை வைத்திருப்பதை தெரிந்தவர்களே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளையரை பிடிப்பதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பெண்களின் கழுத்தில் கத்தி வைத்து நகை கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் நியூ பேர்லேன்ட்ஸ் விவேகானந்தா ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன மேலாளர் சாம் மகேஷ் குமார் (வயது 38) என்பவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் ஒரு பரபரப்பு புகார் மனு அளித்தார்.
எங்கள் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து பணம் பெற்று அந்தந்த வங்கி ஏ.டி.எம்.களில் தங்களது நிறுவன பண பொறுப்பாளர்களை கொண்டு பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஆர்.டி. 1 வழித்தடத்தில் உள்ள தனியார் வங்கியின் 7 ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி நான் மற்றும் அலுவலக கிளை நிர்வாக பிரதிநிதி செந்தில் குமார் என்பவரும் தணிக்கை செய்தோம்.
அப்போது ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.8 லட்சம், அதே பகுதியில் உள்ள மற்றொரு ஏடிஎம் எந்திரத்தில் ரூ.6 லட்சம், ஈரோடு மொசுவண்ண வீதியில் உள்ள ஒரு ஏடிஎம் எந்திரத்தில் ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்து 500 பணம் குறைவாக இருந்தது.
மேலும் பெருந்துறை கோவை மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் எந்திரத்தில் ரூ.9 லட்சம், அதே பகுதியில் உள்ள மற்றொரு ஏடிஎம் மையத்தில் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம், பவானி ரோட்டில் உள்ள ஒரு ஏடிஎம் எந்திரத்தில் ரூ.11லட்சம், ஈரோடு பெருந்துறை ரோடு பழைய பாளையத்தில் உள்ள ஒரு ஏடிஎம் எந்திரத்தில் ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.55 லட்சத்து 78 ஆயிரத்து 500 பணம் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இதன் விவரத்தை தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்து விட்டு அந்த வழித்தடத்தில் பணம் நிரப்பும் பணியை செய்து வரும் பணம் பொறுப்பாளர்களான அழகேசன், பிரகாஷ் ஆகியோரை விசாரித்தோம்.
அவர்கள் இருவரும் பல நேரங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் போது சொந்த தேவைக்காக பணம் எடுத்து கொண்டதாகவும் அந்த பணத்தை மேற்படி நிறுவனத்தின் சேலம் வழித்தடத்தில் பண பொறுப்பாளராக வேலை செய்து வரும் முருகானந்தம் என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் அவர் சொன்னதன் பேரில் தான் அந்த பணத்தை எடுத்ததாகவும் கூறினர்.
அதன் பின்னர் நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்கள் 3 பேரும் தங்கள் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் போது எடுத்து கொண்டு பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக வாக்குறுதி கொடுத்தனர்.
ஆனால் அவர்கள் இதுவரை ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் மட்டுமே கொடுத்து உள்ளனர். மீதி ரூ.50 லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
மனுவை வாங்கிக் கொண்ட போலீஸ் சூப்பி ரண்டு சக்தி கணேசன் இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் விசாரணையில் இந்த மோசடியில் திரு முருகன் என்பவரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் அந்தியூர் எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த 87 வயது மூதாட்டி முத்தாயி அம்மாள் தனது மூத்த மகனுடன் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார்.
நான் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் பகுதியில் வசித்து வந்தேன். எனது கணவர் பெயர் செல்லப்ப கவுண்டர். எனக்கு 3 மகன்கள் உள்ளனர். எனது கணவர் கடந்த 4 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் எனது சொத்தை எனது 3 மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்தேன். ஆனால் எனது மகன்கள் என்னை முறையாக கவனிக்கவில்லை.

என்னுடைய ஆசை என் கணவர் வாழ்ந்த வீட்டில் நான் இறுதிவரை வாழ வேண்டும். அதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது மகன்களிடம் இருந்து பராமரிப்பு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.






