search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர்மின் கோபுரம் அமைப்பதை கடைசி வரை எதிர்ப்போம் - விவசாயிகள் ஆவேசம்
    X

    உயர்மின் கோபுரம் அமைப்பதை கடைசி வரை எதிர்ப்போம் - விவசாயிகள் ஆவேசம்

    உயர் மின் கோபுரத்துக்கு எதிராக கடைசி வரை போராடுவோம் என்று ஈரோடு விவசாயிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    மத்திய-மாநில அரசுகள் சார்பில் தமிழகத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் இருந்து தொடங்கி தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை மொத்தம் 13 மாவட்டங்களில் இந்த உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சென்னிமலை, சித்தோடு, பெரிய புலியூர், பவானி, அந்தியூர் கண்ணாமூச்சி ஆகிய பகுதிகளில் மொத்தம் 80 கிலோ மீட்டர் தூரத்தக்கு இந்த உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த உயர் மின் கோபுரங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் கடுமையான போராட்டத்தை எதிர்த்து போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தியும் (ம.தி.மு.க.) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விவசாயிகள் நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.

    இந்த உயர் மின் கோபுரத்தால் கீழே தரை பகுதி வரை அதன் மின் காந்த அலைகள் எதிரொலிக்கிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். மேலும் அதன் அருகே உள்ள விவசாய நிலத்தில் விவசாயமும் செய்ய முடியாது என்று கணேசமூர்த்தி எம்.பி. கூறினார்.

    மேலும் இது குறித்து அவர் டெல்லியிலும் பாராளுமன்ற கூட்டத்தின் போது வலியுறுத்துவேன் என்று கூறினார்.

    இதற்கிடையே ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து முழு வீச்சில் போராட தயாராகி வருகிறார்கள்.

    இதுகுறித்து தமிழக தற்சார்பு விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் கூறும்போது, ‘‘ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளை ஆட்சியாளர்கள் மதிக்காவிட்டால் அதன் பலனை நிச்சயம் அனுபவிப்பார்கள். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இது மிகவும் வேதனை அளிக்கிறது. விட மாட்டோம்... உயர் மின் கோபுரத்துக்கு எதிராக கடைசி வரை போராடுவோம்’’ என்று கூறினார்.

    Next Story
    ×