search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் போது ரூ.55 லட்சம் மோசடி - 4 ஊழியர்கள் கைது
    X

    ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் போது ரூ.55 லட்சம் மோசடி - 4 ஊழியர்கள் கைது

    ஈரோட்டில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் போது ரூ.55 லட்சம் மோசடி செய்த 4 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    சேலம் நியூ பேர்லேன்ட்ஸ் விவேகானந்தா ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன மேலாளர் சாம் மகேஷ் குமார் (வயது 38) என்பவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் ஒரு பரபரப்பு புகார் மனு அளித்தார்.

    எங்கள் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து பணம் பெற்று அந்தந்த வங்கி ஏ.டி.எம்.களில் தங்களது நிறுவன பண பொறுப்பாளர்களை கொண்டு பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஆர்.டி. 1 வழித்தடத்தில் உள்ள தனியார் வங்கியின் 7 ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி நான் மற்றும் அலுவலக கிளை நிர்வாக பிரதிநிதி செந்தில் குமார் என்பவரும் தணிக்கை செய்தோம்.

    அப்போது ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.8 லட்சம், அதே பகுதியில் உள்ள மற்றொரு ஏடிஎம் எந்திரத்தில் ரூ.6 லட்சம், ஈரோடு மொசுவண்ண வீதியில் உள்ள ஒரு ஏடிஎம் எந்திரத்தில் ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்து 500 பணம் குறைவாக இருந்தது.

    மேலும் பெருந்துறை கோவை மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் எந்திரத்தில் ரூ.9 லட்சம், அதே பகுதியில் உள்ள மற்றொரு ஏடிஎம் மையத்தில் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம், பவானி ரோட்டில் உள்ள ஒரு ஏடிஎம் எந்திரத்தில் ரூ.11லட்சம், ஈரோடு பெருந்துறை ரோடு பழைய பாளையத்தில் உள்ள ஒரு ஏடிஎம் எந்திரத்தில் ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.55 லட்சத்து 78 ஆயிரத்து 500 பணம் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இதன் விவரத்தை தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்து விட்டு அந்த வழித்தடத்தில் பணம் நிரப்பும் பணியை செய்து வரும் பணம் பொறுப்பாளர்களான அழகேசன், பிரகாஷ் ஆகியோரை விசாரித்தோம்.

    அவர்கள் இருவரும் பல நேரங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் போது சொந்த தேவைக்காக பணம் எடுத்து கொண்டதாகவும் அந்த பணத்தை மேற்படி நிறுவனத்தின் சேலம் வழித்தடத்தில் பண பொறுப்பாளராக வேலை செய்து வரும் முருகானந்தம் என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் அவர் சொன்னதன் பேரில் தான் அந்த பணத்தை எடுத்ததாகவும் கூறினர்.

    அதன் பின்னர் நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்கள் 3 பேரும் தங்கள் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் போது எடுத்து கொண்டு பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக வாக்குறுதி கொடுத்தனர்.

    ஆனால் அவர்கள் இதுவரை ரூ.5 லட்சத்து 12 ஆயிரம் மட்டுமே கொடுத்து உள்ளனர். மீதி ரூ.50 லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    மனுவை வாங்கிக் கொண்ட போலீஸ் சூப்பி ரண்டு சக்தி கணேசன் இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் விசாரணையில் இந்த மோசடியில் திரு முருகன் என்பவரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×