என் மலர்
ஈரோடு
நீலகிரி மலையில் பெய்து வந்த மழையால் பவானி சாகர் அணைக்கு தண்ணீர் அதிகரித்து வந்தது. இதனால் பவானிசாகர் அணை கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் நிரம்பியது.
இதனால் 100 அடியை தொட்டதும் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கடந்த 3 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1988 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு மட்டும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழை கடந்த 2 நாட்களாக குறைந்தது.நேற்று இரவு அந்தியூர் பகுதி வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 18.4 மி.மீ மழையும், தாளவாடியில் 3 மி.மீ. மழையும் குண்டேரி பள்ளம் அணையில் 2 மி.மீ. மழையும் பெய்தது. வேறு எங்கும் மழை இல்லை.
இந்த நிலையில் நாளை முதல் மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த இக்கரை நெகமம், தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது63) தொழிலாளி.
கிருஷ்ணன் சம்பவத்தன்று சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம் அடுத்த கோவிந்தராஜபுரம் பகுதியிலுள்ள ஒருவருக்கு சொந்தமான பழைய வீட்டில் மரசாமான்களை ஏற்றிக் கொண்டு இருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் இருந்தனர்.
கிருஷ்ணன் மட்டும் பழைய மண் சுவர் அருகே சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அந்த மண் சுவர் இடிந்து விழுந்து கிருஷ்ணன் மீது அமுக்கியது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு உடன் வேலை வேலை செய்தவர்கள் ஓடி வந்து கிருஷ்ணனை மீட்டனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு கிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்து உள்ள திங்களூர் பிரப் நகரை சேர்ந்தவர் ரிச்சர்டு (வயது42).
இவர் பெருந்துறை அடுத்த சானேட்டேரியம் மருத்துவ கல்லூரி பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டேண்டில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.
இதில் அந்த ஸ்டேண்டில் உள்ள மற்ற ஆட்டோ டிரைவர்கள் வரிசையாக போகாமல் முன் கூட்டியே சென்றதாக கூறப்படுகிறது.
இதை ரிச்சர்டு கண்டித்தார். அப்போது அவர்களுடையே வாய் தகராறு ஏற்பட்டது. வாக்கு வாதமும் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரிச்சர்டு ஆட்டோவுக்கு தீ வைத்தனர்.இதில் அந்த ஆட்டோ தீ பிடித்து எரிந்தது. ஆட்டோவின் முன் பகுதி மற்றும் இருக்கை என முக்கால்வாசி எரிந்து சேதமானது.
இது குறித்து ரிச்சர்டு பெருந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே பகுதியை சேர்ந்த மெல்வின் (29), விஜய பாஸ்கர், மாத்யூ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு:
தீபாவளி பண்டிகை சீர்குலைக்க தமிழகத்தில் பயங்கரவாதிகள் முயற்சிக்க கூடும் என்று உளவுத்துறை போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயிலில் வரும் பயணிகள் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி யாராவது பட்டாசு கொண்டு செல் கிறார்களா? என்பதை கண் காணிக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் ஈரோடு ரெயில் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கும். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ரெயிலில் வரும் பயணிகள் பட்டாசு கொண்டு செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு ரெயில் உள்ள முதல் நடைமேடை 2-வது நடை மேடை 3-வது நடை மேடை மற்றும் 4-வது நடை மேடையில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ரெயில் நிலையம், நுழைவாயில் பகுதி உள்பட ரெயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ரெயில்வே சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி ரெயில் நிலையத்துக்கு உள்ளே அனுமதித்தனர். மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டும் சோதனை செய்யப்பட்டது.
சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்து அவர்கள் முகவரி தொலைபேசி எண்களை வாங்கி கொண்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு கள்ளுக்கடை மேடு, காதர் மைதீன் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 45). இவர் கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள ஒரு மாவு அரைக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
ராஜேஸ்வரி தினமும் காலை வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். அதைப்போல் நேற்று மாலையும் வேலையை முடித்து கொண்டு கடையில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
கள்ளுக்கடை மேடு தங்க பெருமாள் வீதியில் சென்று கொண்டிருந்த போது அவர்களது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர் அதில் பின்னால் உட்கார்ந்து கொண்டு வந்த நபர் திடீரென ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்தான். இதை சற்றும் எதிர்பாராத ராஜேஸ்வரி மற்றும் அவரது தோழி திருடன்.. திருடன்.. என கத்தினர். ஆனால் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் வணிக நிறுவனங்கள் வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு காளைமாட்டு சிலை அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விபரம் தெரிய வில்லை.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாளவாடி:
கர்நாடக மாநிலம் மைசூர் அடுத்த வீரனகெரெ பகுதியைச் சேர்ந்தவர் மாதேவப்பா. இவரது மனைவி மாதேவம்மா (வயது 63). இவர்களுக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாதேவம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கரள வாடி பகுதியில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு வந்தார். அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனியாக இருந்த மாதேவம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனக்குத்தானே உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். எனினும் மாதேவம்மா இறந்து போனார்.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகம் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.
கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் த.ம.மு.க சார்பில் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தி அதில் வெற்றி கண்டுள்ளோம். தமிழகத்தில் இனி தமமுக உதவி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இடைத்தேர்தல் வெற்றி ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றி. இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனதில் வைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணையை மத்திய அரசு பிறப்பிக்க உதவி செய்ய வேண்டும்
பஞ்சமி நிலம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட இடம். அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாலும் கண்டிக்கத்தக்கது. இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி கருப்பண்ணன் போராட்டங்களை நடத்தினார். நானும் பல்வேறு போராட்டம் நடத்தி உள்ளேன். எனவே ஆதிதிராவிட நலத்துறை பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் நோயை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு ரோடுகளை சென்று பார்த்தேன். ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த ரோட்டில் ஏர் உழுது நாற்று நடலாம் போல் உள்ளது. உடனடியாக தமிழ் அரசு போர்க்கால அடிப்படையில் ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமம் பட்டரமங்கலம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 30). பேப்பர் மில் ஒன்றில் ஊழியராக பணிபுரிகிறார்.
அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் மீது வாலிபர் சிவகுமாருக்கு காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
முதலில் அவரை காதலித்த அந்த பெண் பிறகு வாலிபரின் நடவடிக்கை பிடிக்காமல் காதலிப்பதை கைவிட்டார்.
அந்த பெண்ணை தொடர்ந்து தன்னிடம் பேசும்படியும், காதலிக்கும்படியும் சிவகுமார் வலியுறுத்தினார்.
ஆனால் அந்த பெண் காதலிக்க மறுத்ததோடு தன்னுடன் வந்து பேச வேண்டாம் எனவும் கண்டித்தார். இந்நிலையில் வேலைக்கு போக சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற அந்த இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிவக்குமார் “என்னை காதலிக்காவிட்டால் உன்னை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து விடுவேன்” என மிரட்டினாராம்.
இதனால் பயந்து போன இளம்பெண் சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த பாய்ந்தார். அந்த பெண் விலகி கொள்ளவே பெண்ணின் இடது கையில் கத்தி குத்து விழுந்தது. இதனால் வலியால் அவர் அலறினார்.
அப்பகுதியில் இருந்தவர்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க போலீசாரும் அங்கு உடனடியாக விரைந்து வந்தனர். இளம்பெண்ணை கத்தியால் குத்திய சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த பெண் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட வாலிபர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியில் சிப்காட் தொழிற்சாலைகள் வளாகம் செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் சாய தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இங்குள்ள ஒரு தனியார் சாய ஆலை தொழிற்சாலையில் சாய கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த சாய தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரை மழைநீருடன் கலந்து வெளியேற்றி வருவதாக தகவல் வந்தது.
இது குறித்து வீடியோ ஆதாரத்துடன் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆதிகாரிகளுக்கு பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆலையை உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் முத்துராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். இது குறித்து அறிக்கை அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சாயக்கழிவு நீரை மழைநீருடன் கலந்து வெளியேற்றிய அந்த ஸ்பின்னிங் மில்ஸ் ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பு குழுவின் தலைவரும், மாவட்ட கலெக்டருமான கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் சாயக்கழிவு நீரை வெளியேற்றிய அந்த ஸ்பின்னிங் மில்லின் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
நீலகிரி மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணை இந்த ஆண்டு 2-வது தடவையாக நிரம்பியது.
அணை நிரம்பியதையொட்டி நேற்று அதிகாலை முதல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது.
அணைக்கு நேற்றை விட நீர்வரத்து குறைந்தாலும் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரத்து 158 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 102 அடியில் நீடிக்கிறது. இதையொட்டி இன்று 2-வது நாளாக அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 7100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்பவானி பாசன வாய்க்காலுக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டததில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. கோபியில் 10 மி.மீ., கவுந்தப்பாடியில் 8 மி.மீ., வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 5.4 மி.மீ., கொடிவேரியில் 5.2 மி.மீ. மழையும் பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வறண்டு கிடந்த பகுதி எல்லாம் பசுமையாக மாறி உள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து உள்ளது.






