என் மலர்
ஈரோடு
- ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர்.
- மனம் திறந்து பேசப்போகிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார். இதனால் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வருகிற 5-ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்தனர். அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், வருகிற 5-ந்தேதி கோடிசெட்டிப்பாளையத்தில் மனம் திறந்து பேசப்போகிறேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், என்ன கருத்து சொல்லப்போகிறேன் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம், அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.
- செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
- தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.
கோபி:
அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.
மீண்டும் 2011 ஆம் ஆண்டு வரை விவசாயத் துறை அமைச்சராக இருந்தார். அதை த்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
இப்படி அ.தி.மு.க.வின் மிக முக்கிய தலைவராக இருந்து வந்த செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரி 9-ம் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவில், விழா மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி கே.ஏ. செங்கோட்டையன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதன் மூலம் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமி இடையே இருந்த மோதல் நேரடியாக வெளிப்பட்டது.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுடன் எந்த விதத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அனைத்து இடங்களிலும் பேசி வந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சூசகமாக மேடைகளில் பேசி வந்தார். குறிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை மறைமுகமாகவே மேடைகளில் பேசி வந்தார்.
இதற்காக கடந்த காலங்களில் அ.தி.மு.க.வுடன் வைக்கப்பட்ட கூட்டணிகள் குறிப்பாக ஜெயலலிதா, ஜானகி அணி என இரு அணிகளாக பிரிந்து இருந்த காலகட்டங்களில் அப்போதைய கூட்டணிகள் தொடங்கி கடந்த காலங்கள் வரைக்கும் குறிப்பிட்டு பேசினார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி வைத்ததை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் மவுனமானார்.
ஆனால் அதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கிய போது எடப்பாடியிலிருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார்.
கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவருக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில் கட்சியிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட கே.ஏ.செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம் வரும் 5-ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என்று கூறினார்.
மேலும் அந்தக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும், கட்சியில் தொடர்வதா என்பது குறித்தும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2, 3 மாதங்களாக கே.ஏ.செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் கே.ஏ.செங்கோட்டையனின் தற்போதைய நிலைப்பாட்டால் அ.தி.மு.க.வில் மீண்டும் கோஷ்டி பூசல் தலை தூக்க தொடங்கி உள்ளது. அவர் ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா? என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதற்கிடையே இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது தோட்டத்து வீட்டின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர். மேலும் முக்கிய நிர்வாகிகள் வந்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர்.
- தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே வரி அதிகரிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத ஜவுளி ரகங்கள் சலுகை விலையில் விற்பனை என விளம்பரம் செய்யப்பட்டு துணிகள் வீரப்பனை செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தால் எண்ணற்ற மக்கள் துணிகளை வாங்க குவிந்தனர். ஏராளமான மக்கள் குவிந்த நிலையில் தரமற்ற துணிகளே இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதை ஏற்றுமதி துணிகள் என ஏமாற்றுவதாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட துணிகள் விற்பனை நிறுத்தப்பப்பட்டது.
- திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
- திம்பம் மலைப்பகுதியில் 20-வது கொண்டை ஊசி வளைவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை தொடங்குகிறது.
திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து திம்பம் மலைப்பாதையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் ஒரே நேரத்தில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை விடுமுறையை ஒட்டி திம்பம் மலைப்பகுதி சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.
இன்று காலை 6 மணி முதல் திம்பம் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், கரும்பு ஏற்றி சென்ற லாரிகள் என ஒரே நேரத்தில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திம்பம் மலைப்பகுதியில் 20-வது கொண்டை ஊசி வளைவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் திம்பம் மலைப்பகுதியில் இரு புறங்களிலும் பல கிலோமீட்டர் தூரம் வாகனம் வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடர்ந்த வனப்பகுதியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்தடுத்து வாகனங்கள் இருப்பதால் மேற்கொண்டு நகராமல் வாகனங்கள் அனைத்தும் வரிசையில் நிற்கின்றன. இதன் காரணமாக தமிழகம் -கர்நாடக இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். திம்பம் மலைப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தாசில்தார், மீன்வளத்துறை உள்ளிட்டோருக்கு மனு அளித்தனர்.
- இதுவரை எந்த அறிவிப்பும் வராததால், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 100-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. சுமார் 600 உறுப்பினர்களை கொண்ட, பெஸ்தவர் மீனவர் சங்கத்தின் மூலம், அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மற்றும் சுற்று வட்டார ஏரிகளில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்கும் உரிமம், கடந்த மாதம் 22ம் தேதியோடு முடிவடைந்தது.
இந்நிலையில், தந்தை பெரியார் உயிரின சரணாலயத்துக்குள் வரட்டுப்பள்ளம் அணை இருப்பதாக கூறி, மாவட்ட வனத்துறையினர், மீன்பிடிக்க திடீரென அனுமதி மறுத்தனர்.
இதனால் வரட்டுப்பள்ளம் அணையில் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத சூழ்நிலையால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழியில்லை எனக்கூறி, முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தாசில்தார், மீன்வளத்துறை உள்ளிட்டோருக்கு மனு அளித்தனர்.
மனு சம்பந்தமாக எந்தவிதமான, நடவடிக்கையும் இல்லாததால், கடந்த 25-ந்தேதி, குடும்பத்துடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, தாசில்தார் கவியரசு, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், தாலுகா அலுவலகத்தில், மீனவர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், இரண்டு நாட்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், போராட்டத்தை மீனவர்கள் தற்காலிமாக கைவிட்டனர். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வராததால், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, இன்று காலை, அந்தியூரில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், 50-க்கும் மேற்பட்டோர் கொடியை கையில் ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
மீனவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கோடு ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- தி.மு.க.வும்,பா.ஜ.க.வும் மறைமுக கூட்டணி என விஜய் கூறி இருப்பதெல்லாம் வெறும் பிதற்றல்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார்.
பின்னர் எச். ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக 50 சதவீதம் வரி விதித்த பாரபட்சமான நடவடிக்கை இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்குகிறது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் கேட் குழுவில் இந்தியா உறுப்பினராக சேர்க்கப்பட்டது. இப்போது அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாக கேட் உடன்படிக்கை தோற்றுவிட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
சுதேசி உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும் என்றும், ஆன்லைனில் அமெரிக்கா பொருட்களை இந்திய மக்கள் அனைவரும் வாங்க மாட்டோம் என முடிவெடுக்க வேண்டும். ஒரு பொருளாதார நடவடிக்கைக்கு அடி கொடுப்பது என்பது மற்றொரு பொருளாதார நடவடிக்கை மூலமாக மட்டுமே கொடுக்க வேண்டும்.
அமெரிக்காவின் பொருளாதார பாரபட்ச நடவடிக்கைக்கு ஒவ்வொரு இந்திய மக்களும் பதிலடி கொடுக்க வேண்டும். 2024-25-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 825 பில்லியன் டாலர். அதில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 60 பில்லியன் டாலர் மட்டுமே. இது மொத்த ஏற்றுமதியில் 7.25 சதவீதம் மட்டுமே. மற்ற நாடுகளோடு வர்த்தகத்தை அதிகரிப்பதன் மூலமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது மூலமாக வரக்கூடிய இழப்பை சரி முடியும்.
மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கோடு ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது அரசு செய்யும் கடமை என்றால் நாம் அரசுக்கு செய்யும் கடமை என்பது ஆன்லைனில் பொருட்களை வாங்க மாட்டோம் என முடிவெடுக்க வேண்டும். இலங்கைக்கு சொந்த பணத்தில் கப்பல் விட்டவர் தான் வ.உ.சி. அந்த கப்பலில் பணம் வாங்காமல் தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த அளவிற்கு தேச பற்று உள்ளவர்.
சிறுபான்மையினர் வாக்குகள் மட்டுமே போதும் என விஜய் முடிவு செய்துள்ளார். சிறுபான்மை வாக்கிற்காக மட்டுமே அரசியலுக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளது, இந்துக்கள் வாக்கு வேண்டாம் என முடிவு செய்து இருப்பதையே காட்டுகிறது.
தி.மு.க.வும்,பா.ஜ.க.வும் மறைமுக கூட்டணி என விஜய் கூறி இருப்பதெல்லாம் வெறும் பிதற்றல். பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தோம். 1999-ல் தி.மு.க வாஜ்பாய் அரசாங்கத்துடன் கூட்டணி வைத்திருந்தது. முரசொலி மாறன், வாஜ்பாய் அரசில் இடம் பிடித்திருந்தார். இது ரகசிய உறவோ கள்ள உறவோ இல்லை. நல்ல உறவு தான் வைத்து இருந்தது.
கல்வி கொள்கையில் தி.மு.க.வின் வழியை பின்பற்றி வரும் விஜய் முதலில் அரசியலை படியுங்கள்.1974-ல் கச்சத்தீவை இலங்கைக்கு தானம் செய்தது காங்கிரஸ் அரசு. தி.மு.க அரசு மவுனமாக ஆதரித்தது. இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாஜ்பாய் பேசினார்.
தமிழகத்தில் ஜனசங்க தலைவர் ஜனா கிருஷ்ண மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இதை முதலில் படிக்காமல் கள்ள உறவு குறித்து பேசுகிறார். கச்சத்தீவை தாரை வார்க்கும் முன் காங்கிரஸ் சிந்தித்து இருக்க வேண்டும்.
ஆதரித்த காங்கிரசிற்கும் தி.மு.க.விற்கும் கள்ள உறவு உள்ளதா எனக்கு விஜய் பதில் சொல்லட்டும். காங்கிரசை ஏன் விஜய் கண்டிக்கவில்லை? கொஞ்சமாவது விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு பேசுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யானை வருவதைக் கண்டு டிரைவர் லாரியை நிறுத்தி கொண்டார்.
- காட்டு யானைகள் ரவி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக யானைகள் கரும்பை தின்பதற்காக வனச்சாலையில் வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து சாலையில் சுற்றி திரிகின்றன.
அவ்வாறு கரும்பு பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை சுவைத்து வருகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதியில் செல்கின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்த ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரங்களை ஏற்றி வந்த லாரியை பார்த்ததும் வேகமாக ஓடி வந்தது. யானை வருவதைக் கண்டு டிரைவர் லாரியை நிறுத்தி கொண்டார். உடனே யானை லாரியின் முன்பக்கம் நின்று தும்பிக்கையால் கரும்பை எடுத்த போது லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பின்னர் லாரியில் இருந்து கரும்பை எடுத்துக்கொண்டு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சியை லாரியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேஷன் நகர் கிராமத்தில் ரவி என்கிற விவசாயி தனது வீட்டை ஒட்டி தோட்டம் அமைத்துள்ளார். தோட்டதுக்குள் வாழை, மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் ரவி தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. யானைகள் தோட்டத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவி மற்ற விவசாயிகளுடன் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காட்டு யானையால் சேதம் அடைந்தன.
- கரும்பு லாரியை கண்டதும் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது.
- வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. ஆசனூர் அருகே சாலையில் செல்லும் போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது கரும்பு லாரியை கண்டதும் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த கரும்பை சுவைத்த யானை பின்னர் தானாக வனப்பகுதியில் சென்றது.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
- 1948 ஆம் ஆண்டு பவானிசாகர் அணையின் கட்டுமான பணி தொடங்கி 1955 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
- பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற 21 மதகு அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்துக்கு அடுத்த படியாக மிகப்பெரிய பாசன பரப்பு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2.47 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
1948 ஆம் ஆண்டு பவானிசாகர் அணையின் கட்டுமான பணி தொடங்கி 1955 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜர் அணையை திறந்து வைத்தார். பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற 21 மதகு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரில் 8 மெகாவாட் என 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை தொடக்கத்திலிருந்து தற்போது வரை 23 முறை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த பவானிசாகர் அணை இன்று 70 ஆண்டுகளை கடந்து 71-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
- விஜயாவின் கணவருடன் வேலை பார்த்து வந்த மோகன் கடைசியாக விஜயா வீட்டுக்கு சென்றதும் பின்னர் அவசரமாக வெளியேறியதும் கேமராவில் பதிவாகி இருந்தது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 4-வது வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயா (38). வீட்டிலேயே துணி தைத்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
வெல்டிங் தொழிலாளியான நாகராஜ் பவானி காவல் நிலைய குடியிருப்பு எதிரில் உள்ள பட்டறையில் வேலை செய்து வருகிறார். இதே பட்டறையில் பவானி பெரிய மோளப்பாளையத்தைச் சேர்ந்த மோகன் (50) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் விஜயா வீட்டில் தனியாக இருந்தார். மதியம் அவரது கணவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மீண்டும் பட்டறைக்கு சென்று விட்டார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் தனது துணியை தைக்க கொடுப்பதற்காக விஜயா வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் விஜயா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஜயா தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் இறந்தது தெரிய வந்தது.
மேலும் அவர் காதில் அணிந்திருந்த தங்க சங்கிலி துண்டு துண்டாக சிதறி கிடந்தது. அருகில் கிரைண்டர் குழவி மிளகாய் பொடி பொட்டலம் மற்றும் அரிவாள்மனை கிடந்தது. அதே நேரம் வீட்டில் உள்ள நகை பணம் எதுவும் திருட்டு போகவில்லை. இதனால் இந்த கொலை பணம் நகைக்காக நடைபெறவில்லை என போலீசார் உறுதிப்படுத்தினர். மோப்பநாய் காவிரி வரவழைக்கப்பட்டு அது சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவி பிடிக்கவில்லை.
பவானி டி.எஸ்.பி ரத்தின குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். விஜயா வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் விஜயாவின் கணவருடன் பட்டறையில் வேலை பார்த்து வந்த மோகன் (50) கடைசியாக விஜயா வீட்டுக்கு மாலை 3 மணிக்கு சென்றதும் பின்னர் 3.30 மணிக்கு அவர் அவசரமாக வெளியேறியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து போலீசார் உஷார் ஆகி பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மோகன் விஜயாவை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீஸ் விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறும் போது,
மோகன் விஜயாவின் கணவர் நாகராஜ் வேலை பார்க்கும் பட்டறையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். விஜயா வீட்டில் துணிகளை தைத்து வந்துள்ளார். அப்போது மோகன் தனது மனைவியின் துணிகளை தைப்பதற்காக விஜயா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதைப்போல் நேற்று மதியமும் சாப்பிட்டு வருவதாக நாகராஜிடம் கூறி விட்டு விஜயா வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விஜயா ஆத்திரத்தில் மோகன் மீது மிளகாய் பொடியை வீசு உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் விஜயாவை தலையில் கல்லால் தாக்கி உள்ளார். மேலும் அருவாள்மனையால் அவரை கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். கொலை செய்ய போது மோகன் சட்டையில் இரத்த கறை படிந்தது. பின்னர் மோகன் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கால்வாயில் சென்று சட்டையை அலசி விட்டு பின்னர் மீண்டும் பட்டறைக்கு வந்து ஒன்றும் தெரியாது போல் வேலை பார்த்து உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் என்ன காரணத்துக்காக மோகன் விஜயாவை கொலை செய்தார் என தெரியவில்லை. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் முழுவிவரம் தெரிய வரும் என்றனர்.
- பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவர்.
- மாட்டுச்சந்தை, குதிரைச்சந்தை உள்ளிட்டவைகளை குடும்பத்துடன் சென்று பார்வையிட்டனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமர்சியாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பண்டிகை கடந்த 13-ந்தேதி தொடங்கியது. புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து குருநாதசாமி, பெருமாள்சாமி, காமாட்சியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனகோவிலுக்கு பக்தர்களால் தோலில் சுமந்து மகமேறு தேரில் குருநாதசாமியும், பெருமாள் சாமியும் சென்றது. சப்பரத்தில் காமாட்சி அம்மன் வனகோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தேர்களை தோள்களில் சுமந்து சென்று வன கோவிலை சென்றடைந்தனர்.
திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் குதிரை சந்தைக்கு தமிழகத்தில் ஈரோடு, மதுரை, திருச்சி, திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை, நாமக்கல்,கோவை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவர்.
இந்த சந்தையில் மார்வார் இன குதிரைகள், நொக்ரா, சப்ஜா, வெள்ளை சட்டை, செவலை சட்டை, கருப்பு, நாசி, முஸ்கி என பல நிற குதிரைகள் 1500 முதல் 3 ஆயிரம் குதிரைகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சந்தையில் 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான குதிரை வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இந்த பண்டிகையை காணவும் சாமி தரிசனம் செய்யவும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் தமிழரசு, அவரது மனைவி மோகனாம்பாள் மற்றும் குடும்பத்தாருடன் அந்தியூர் எம்.எல்.ஏ ஏஜி வெங்கடாஜலம் கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு தரிசனம் செய்தனர். பின், மாட்டுச்சந்தை, குதிரைச்சந்தை உள்ளிட்டவைகளை குடும்பத்துடன் சென்றுபார்வையிட்டனர். அவரை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றனர். அவரிடம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கினர்.
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது.
- ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையில் வந்து கரும்பு வாகனங்களை எதிர்பார்த்து அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அருகே சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்பாரண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது. அந்த வழியாக கரும்புகளை ஏற்றி வாகனம் வருகிறதா என ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி பார்த்தது. அப்போது சத்தியமங்கலம் இருந்து தாளவாடி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. கும்பாரண்டு அருகே செல்லும் போது ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் பயத்தில் லாரியை வேகமாக இயக்கினார். அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவ்வழியாக வந்த லாரியில் கயிற்றை கட்டி பள்ளத்தில் இருந்த லாரியை மீட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமீப காலமாக வனப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை யானைகள் துரத்துவது தொடக்கதையாகி வருவதால் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.






