என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை காணலாம்.
102 அடியை எட்டிய பவானிசாகர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது.
- பவானி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, துணி துவைக்கவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு , கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 2.47 லட்சம் விளைநிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து நேற்று மதியம் 102 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வந்த நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விட ப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பவானிசாகர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 9,300 கன அடியாக நீர் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த 9 ஆயிரத்து 300 கனஅடி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தொட்டபாளையம், தொப்பம்பாளையம், அய்யன் சாலை, எரங்காட்டூர், சத்தியமங்கலம், அக்ரஹாரம், பாத்திமா நகர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொற்றபடி வெள்ளநீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இதனால் பவானி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, துணி துவைக்கவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக உள்ள கொடிவேரி தடுப்பணையில் 3-வது நாளாக வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 3-வது நாளாக கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.






