என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், கரடி காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதி உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் மத்தியில் அமைந்து உள்ளது. ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர் போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில்  பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார்.

    சிறிது தூரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது,

    தற்போது பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் சக்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வரும் சிறுத்தை வந்து செல்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரு சில நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து லாரிகளில் உள்ள கரும்புகளை ருசித்தும் வருகின்றன.
    • அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் பலாபபழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் 33 குட் கிராமங்கள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள்வசித்து வருகின்றன.

    இந்த வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிகிறது. இதே போல் மலைலப்பகுதி வழியாக வரும் வாகனங்களை வழி மறித்து கரும்பு உள்ளிட்ட உணவுகள் உள்ளதா எனவும் யானைகள் தேடி வருகிறது. ஒரு சில நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து லாரிகளில் உள்ள கரும்புகளை ருசித்தும் வருகின்றன.

    மேலும் பலாப்பழங்களை யானைகள் அதிகளவில் உண்டு வருகிறது. வனப்பகுதிகளில் வாகனங்களில் பலாப்பழங்கள் எடுத்து சென்றால் அவைகளை ருசிப்பதற்காக யானைகள் கூட்டம், கூட்டமாக குவிய தொடங்கி விடுகிறது. இதே போல் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளில் பலா பழங்கள் உள்ளன. கிராம பகுதிகளில் யானைகள் புகுந்து அவற்றை தின்று வருகிறது.

    தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. இந்த சீசன் ஆனி மாதம் கடைசி வரை இருக்கும். இந்த நிலையில்ஆனி மாதம் தொடங்கி உள்ள நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் பலாபபழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன. பலாப்பழம் வாசனைக்காக வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்களை ருசிப்பதற்காக யானைகள் வந்து பலாபழத்தை ருசித்து செல்கிறது.

    இந்த நிலையில் பர்கூரை அடுத்த துருசன்னம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பலா மரத்தில் பலாப்பழங்கள் பழுத்து தொங்கிக்கொண்டு இருந்தன. இதனை ருசிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது. இதை தொடர்ந்து யானைகள் பலாப்பழத்தை அங்கேயே பறித்து உண்டு ருசித்துச் சென்றது.

    அப்போது யானை மிகுந்த சத்தத்தோடு பிளிரிய படி சென்றது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்கள் குடியிருப்புக்குள் யானை வந்துவிடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு இருந்து வருகிறார்கள்.

    • யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
    • கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது ஆசனூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக ஆசனூர் அருகே யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

    இந்நிலையில் பழைய ஆசனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜ கண்ணா என்பவரது விவசாய தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த ஒற்றை யானை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை முட்டி தள்ளிவிட்டு சென்றது. மேலும் அங்கிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் தண்ணீர் குடித்து சென்றது. பின்னர் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனபகுதிக்குள் விரட்டினர் இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. யானை நடமாட்டாம் காரணமாக ஆசனூர் மலை கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியாவது:-

    கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது. திடீரென விவசாய தோட்டத்திற்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதங்கள் ஏற்படுத்தி வருகின்றன. பொதுமக்கள் ஒன்றிணைந்து பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டி வருகிறோம். இருந்தாலும் பயிர்கள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் வேளாண் துறையினர் ஈரோட்டில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
    • விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் தான் கேள்வி கேட்போம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண் உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

    டெல்டா பாசனத்ததுக்கான தண்ணீரை நாளை மேட்டூர் அணையில் இருந்து திறந்து நான் வைப்பதற்கு முன், இன்று மேற்கு மண்டல வேளாண் குடி மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் வேளாண் துறையினர் ஈரோட்டில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக முதலில் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிரமாண்ட கண்காட்சி அரங்கை பார்வையிட்டபோது என் மகனதில் அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகியது. அதற்காக எனது வணக்கத்தையும் நன்றியும் தெரிவிக்க விரும்புகிறேன். விவசாயிகளால் தான் இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக மன நிறைவோடு இருக்கிறார்கள்

    தமிழ்நாட்டின் வேளாண் துறை மக்கள் எல்லோரும் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இந்த ஈரோட்டில் ஈர மனதுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    கண்காட்சி, கருத்தரங்கை நடத்துவற்கு ஈரோடு மாவட்டத்தை ஏன் தேர்ந்து எடுத்தார்கள் என்றால் ஈரோடு வேளாண்மையில் வளர்ச்சிப்பெற்ற பல முன்னோடி விவசாயிகளை கொண்ட மாவட்டம்.

    குறிப்பாக சொல்ல வேண்டும் வேளாண் உற்பத்தியில் மாநிலத்தில் 8-வது இடம்.

    வேளாண் துறைக்கு என நிதி நிலை ஒதுக்கீடு செய்துள்ளோம். அதன் பயன்களை எடுத்து சொல்ல வேண்டும் என்றால் 4 நான்கு ஆண்டுகளில் 488 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து சாதனைப்படைத்து உள்ளோம்.

    கூட்டுறவு துறையின் மூலம் 81 லட்சம் விவசாயிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் வேளாண் மின் இணைப்பு கொடுக்கு இலக்கு நிர்ணியக்கப்பட்டு 1 லட்சத்து 84 ஆயிரம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    இலவச மின்சாரத்துக்கு 26 ஆயிரத்து 223 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.

    தமிழ்நாட்டில் சிலர்தோளில் துண்டுப்போட்டு கொண்டு ஏமாற்றுகிறார்கள். விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் தான் கேள்வி கேட்போம்.

    விவசாயிகளுக்கு அவர்கள் துரோகம் செய்தனர். 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடியபோது அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதனால் தேர்லில் அவர்கள் தோற்கப்பட்டனர். தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 1.86 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளோம்.
    • 3 வேளாண் சட்டங்களை நாம் எதிர்த்தபோது அதனை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் அ.தி.மு.க.வினர்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:

    * விவசாயிகள் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    * 1.86 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளோம்.

    * இலவச மின்சாரத்திற்காக ரூ.26,223 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

    * கடந்த ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் இருந்தது.

    * 3 வேளாண் சட்டங்களை நாம் எதிர்த்தபோது அதனை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் அ.தி.மு.க.வினர்.

    * தோளில் பச்சை துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல.

    * பயிர்களுக்கு இடையே வளரும் களைகளைப்போன்று தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி இருந்தது.

    * எல்லா வகையிலும் விவசாயத்திற்கு துரோகம் செய்த ஆட்சிதான் கடந்த கால ஆட்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2-ம் இடம் வகிக்கிறது.
    • உழவு என்பது தொழில் மட்டுமல்ல, நம் பண்பாடு.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.15.70 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.159.53 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.25.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4,524 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து பெருந்துறையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் 2 நாட்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * சிறுதானிய உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம்.

    * கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2-ம் இடம் வகிக்கிறது.

    * டெல்டா பாசனத்திற்கான நீரை திறக்கும் முன் வேளாண் கண்காட்சியை தொடங்கியதில் மகிழ்ச்சி.

    * பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

    * ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு மேலும் திட்டங்கள் தருவோம்.

    * உழவு என்பது தொழில் மட்டுமல்ல, நம் பண்பாடு.

    * வேளாண்மையில் வளர்ச்சி பெற்ற முன்னோடிகளை கொண்டது ஈரோடு மாவட்டம்.

    * டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளேன்.

    * முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தி.மு.க. அரசு தாக்கல் செய்தது.

    * கூட்டுறவுத்துறை மூலம் 81 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.62,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    * மண்ணுயிர் காத்து இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 22 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    குறிப்பாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழி மறித்து நிற்பதும், கிராமத்துக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.

    திம்பம் மலைப்பகுதியை 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் யானை சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வபோது சாலை அருகே வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து நின்றது. நீண்ட நேரமாக அங்கு நின்ற ஒற்றை யானை அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் மேற்கொண்டு அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாததால் வாகனத்தை நிறுத்தினர். சிறிது நேரம் திம்பம் மலைப்பாதை வளைவில் நின்ற ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர். இதன் பிறகே அந்த பகுதியில் போக்கு வரத்து சீரானது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    திம்பம் மலைப்பாதையில் யானைகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. யானைகள் உணவு தண்ணீரை தேடி சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
    • போலியாக ஆதார் அட்டை பெற்று பெருந்துறையில் சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பப்லு சர்தார் உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுடன் வங்களாதேசத்தை சேர்ந்த சிலரும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் அவ்வப்போது சிப்காட் பகுதி, பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்களாதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதிக்குட்பட்ட வீரப்பன் சத்திரத்தில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்களாதேச தம்பதியினரை போலீசார் கைது செய்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    ஈரோடு வீரப்பன்சத்திரம், காமராஜ் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தம்பதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த பப்லு சர்தார் (37), அவரது மனைவி ரிபியா காடுன்(37) ஆகியோர் என்பதும், இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் சட்ட விரோதமாக தங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    போலியாக ஆதார் அட்டை பெற்று பெருந்துறையில் சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பப்லு சர்தார் உதவியாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. உரிய பாஸ்போர்ட் விசா எதுவும் இன்றி வசித்து வந்துள்ளனர். இதையடுத்து பப்லு சர்தார், அவரது மனைவி ரிபியா காடுன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே இடத்தில் எங்கும் அசையாமலும், நகராமலும் அந்த ஒற்றை யானை நின்று கொண்டே இருந்தது.
    • யானை வழக்கத்துக்கு மாறாக மிகவும் சோர்வுடன் காணப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவிலை ஒட்டிய சோதனை சாவடி அருகே சத்தி- மைசூர் தேசிய நெடுஞ் சாலை ஆரம்பமாகிறது.

    அடர்ந்த வனப்பகுதியில் இந்த நெடுஞ்சாலை இருப்பதால் இங்கு அடிக்கடி வனவிலங்குகள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்து சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் சுற்றி வருகிறது.

    ஒற்றை யானை நடமாட்டத்தால் பக்தர்கள் ஒரு வித அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று பண்ணாரி அம்மன் கோவில் அருகே வந்து நின்றது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஒரே இடத்தில் எங்கும் அசையாமலும், நகராமலும் அந்த ஒற்றை யானை நின்று கொண்டே இருந்தது.

    யானை வழக்கத்துக்கு மாறாக மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. இதனால் அந்த ஒற்றை யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கருதி வனத்துறையினர் அந்த யானையின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர். இரவு நேரம் முழுவதும் அந்த இடத்தில் இருந்த ஒற்றை யானை காலை ஆனதும் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    • நிரந்தரக் கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்பது அரசாணையில் இருக்கிறது.
    • மார்க்கெட்டில் சுங்க கட்டணத்திற்கு ரசீது கொடுப்பதே இல்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக கடந்த மே 5-ந் தேதி நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தீர்மானங்களை அறிவித்திருந்தார்.

    குறிப்பாக வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1 லட்சம் தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்தி மீண்டும் ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மே 5-ந் தேதியை வணிகர் தினமாக அரசு அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் காய்கறி பழ மார்க்கெட் வாகனம் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதே போன்று சுங்க கட்டணம் வசூலிப்பதற்கும் அரசு அனுமதி அளித்திருக்கிறது.

    சுங்க கட்டணம் என்று சொன்னால் தற்காலிக கடைகளுக்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். நிரந்தரக் கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்பது அரசாணையில் இருக்கிறது. ஆனால் இதை அரசுத்துறை அதிகாரிகள் ஏனோதானோ என்று முடிவு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மார்க்கெட் சுங்கம் வசூலிப்பவர்கள் தானாகவே ரவுடிசத்தை கையில் எடுக்க கூடிய சூழ்நிலையும் தமிழக முழுவதும் பல்வேறு மார்க்கெட்டுகளில் இது போன்ற சூழ்நிலைகள் இருக்கிறது. எனவே அரசு இதனை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆணையாளர், அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மார்க்கெட்டில் சுங்க கட்டணத்திற்கு ரசீது கொடுப்பதே இல்லை. அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதற்கு என்ன உள்நோக்கம் இருப்பது என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கம் கேள்வியாக எழுப்புகிறது. இந்த பிரச்சனைக்கு முறையாக நல்ல தீர்வு ஏற்படும் என நம்பிக்கை உள்ளது.

    இல்லையென்றால் மாவட்டம் தோறும் வணிகர் பேரமைப்பின் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தனியார் கட்டிடங்களில் நாங்கள் கடைகளை நடத்துகிறோம். அதற்கு அரசு முறையாக லைசன்ஸ் வழங்கியுள்ளது. அந்த கடைகளுக்கு சுங்க கட்டணம் தேவையில்லை என்பதை அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

    இதை தாண்டி சுங்க கட்டணம் வசூல் செய்வது தேவையற்றது. தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு வருகின்ற ஜூலை மாதம் 22ம் தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி, லட்சத்தீவு உள்பட 7 அமைப்புகள் சார்பில் தென் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்ட திட்டங்களை மாற்றி அமைத்து விட்டார்கள். மீண்டும் தமிழகத்தில் வால்மார்ட்டு டி மார்ட் உடன் சேர்ந்து நுழைய சதிவலை பின்னிக் கொண்டிருக்கிறது. இது குறித்து முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகள் முதலில் இலவசம் என்ற பெயரில் கொடுப்பார்கள். தமிழர்களின் ஒட்டு மொத்த வருமானத்தையும் கார்ப்பரேட் நிறுவனம் சுரண்டி கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினாலும் மீண்டும் அந்த ஒற்றை யானை கிராமத்துக்குள் வந்தது.
    • நேற்று இரவு தாளவாடி ஊருக்குள் ஒற்றை யானை புகுந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக உணவு, தண்ணீரை தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அடுத்த அருள்வாடி புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தன.

    யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினாலும் மீண்டும் அந்த ஒற்றை யானை கிராமத்துக்குள் வந்தது. இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி ஊருக்குள் ஒற்றை யானை புகுந்தது. அந்த பகுதியில் உள்ள நேதாஜி சர்க்கிள் என்னும் இடத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தி உள்ளது.

    இதுவரை கிராமத்துக்குள் புகுந்த யானை தற்போது முதல் முதலாக தாளவாடி ஊருக்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாழைக் கன்றுகளையும் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
    • தோட்டத்துக்குள் புகுந்த யானைகளால் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக உணவு, தண்ணீரை தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் சாமிநான் (வயது 41) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் நேற்று இரவு 12 மணியளவில் புகுந்த காட்டு 2 யானைகள் வாழைகளை நாசம் செய்தது.

    இதைப்போல் வாழைக் கன்றுகளையும் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதையடுத்து விவசாயி ராமசாமி மற்ற விவசாயிகள் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராடி பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    எனினும் ராமசாமி தோட்டத்துக்குள் புகுந்த யானைகளால் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதே போல் கடந்த வாரம் தோட்டத்தில் புகுந்த யானை வாழையை சேதாரம் செய்தது. தொடர்ந்து வாழையை யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து சேதாரம் செய்து வருவதால் விவசாயி வேதனை அடைந்துள்ளனர்.

    சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், யானையை விரட்ட வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×