என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மிரட்டல் கடிதம் எதிரொலி - ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
- கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
- அக்கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 7 தளங்களில், மாவட்ட வழங்கல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 7 தளங்கள் உள்ளடக்கிய கூடுதல் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு தினமும் நூற்று க்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கலெக்டருக்கு நேற்று மாலை தபால் வந்தது. அதனை கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
அதில், கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு சிலர் திட்டமிடுவதாகவும், இந்த மாதத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், அந்த நபர்கள் குறித்த தகவல் தனக்கு தெரியும் என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விபரத்தை தெரிவிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.
அனுப்பியவர் முகவரியில் வக்கீல் ஒருவரின் பெயர் இடம் பெற்று இருந்தது. இக்கடிதத்தை அடிப்படையாக கொண்டு, ஈரோடு சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன், ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், அடையாளம் தெரியாத நபர் கடிதம் எழுதியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அக்கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் தென்காசியில் இருந்து அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் இன்று காலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவு நிபுணர்கள், மோப்பப்படை பிரிவினர் வந்து சோதனையிட்டனர். மோப்பப் படை பிரிவு பவானி நாய் வரவழைக்கப்பட்டது. முதலில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில், கார் பார்க்கிங் பகுதி, ஒவ்வொரு அலுவலகமாக சென்று சோதனையிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் இன்று பரபரப்பாக காட்சியளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொருத்தரமாக சென்று வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.






