என் மலர்
கடலூர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்டக்குழு கூட்டம் கடலூரில் மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ.மாதவன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர்கள் கற்பனை செல்வம், ராமச்சந்திரன், மாகலிங்கம், சதானந்தம், துணை செயலாளர்கள் ஜெகதீசன், மூர்த்தி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விவசாய நெருக்கடியை தவிர்க்க விவசாயிகளுடைய தற்கொலையை தடுக்க விவசாயிகளின் தேசிய வங்கி கடன், கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வீராணம் ஏரிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44 கோடியை முழுமையாக செலவிட்டு பணியை முடிக்க வேண்டும். இதில் நடைபெற்று உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
கடலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பெட்ரோலிய - வேதியியல் மண்டலம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு புதிய சட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு, வீட்டிற்கு ஒருவருக்கு வேலை, மாற்று இடம் வழங்க வேண்டும்.
பயிர் இன்சூரன்ஸ் வாங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. இன்சூரன்ஸ் நிலுவைத் தொகை உடனே வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் வேலையை தொடங்கிட வேண்டும். விவசாய பணிகளோடு இதனை இணைத்திட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி கடலூர் மாவட்டத்தில் கடலூர், நடுவீரப்பட்டு, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பெண்ணாடம், காட்டு மன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், புவனகிரி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் செய்து, சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடலூர்:
உடல்நலம் பாதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து பண்ருட்டிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோண்டூர் அருகே சென்றபோது திடீரென மர்ம மனிதர்கள் சிலர் அந்த பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
பின்னர் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பஸ்கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கடலூரில் அரசு பஸ்கள் அனைத்தையும் பணிமனைக்குள் நிறுத்தி வைக்க போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து அரசு பஸ்கள் அனைத்தையும் டிரைவர்கள் பணிமனையில் கொண்டு வந்து நிறுத்தினர்.
அதேபோல் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ்களும் பாதி வழியிலேயே திரும்பி வந்தன. கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த பஸ் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே சென்றபோது திரும்பி மீண்டும் கடலூர் பஸ் நிலையத்துக்கு வந்தது.
அப்பாது பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் தங்களது பயண கட்டணத்தை திரும்ப தரக்கோரி கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் பரணீதரன் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி பயணிகளுக்கு பயண கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படி கூறினார். பயணிகளுக்கு கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று இரவு பதட்டமான சூழ்நிலை நிலவியது. உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் குவிந்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த பஸ்களை மறித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் டிரைவர்கள், வந்த வழியிலேயே பஸ்களை எடுத்து சென்றனர். பஸ்சுக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தி.மு.க.வினரை சமாதானப்படுத்தினர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடிக்கு சென்ற போலீசார் அங்கு பணியில் இருந்த ஊழியர்களின் பாதுகாப்பு கருதி சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு தடுப்பு கட்டை இல்லாமல் திறந்து வைக்கப்பட்டது.
நேற்று இரவில் இருந்தே அனைத்து வாகனங்களுக் கும் கட்டணம் வசூலிக்கப்படாமல் செல்கின்றன.
இதேபோல் திருவெண்ணைநல்லூர் பகுதியிலும் தி.மு.க.வினர் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டி ருந்தது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கபட்டிருந்தனர். #karunanidhi #dmk
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில், மொவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் மொவூர் பகுதிக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முட்டம் மணல் சேமிப்பு கிடங்கில் இருந்து மணல் எடுத்து வருவதாக ரசீதை காட்டினர். அந்த ரசீதை போலீசார் வாங்கி பார்த்தனர். அப்போது அது போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மொவூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 28), ஓமாப்புலியூர் பகுதியை சேர்ந்த தீபக்கணேஷ் (25) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழக ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் படிக்கும் மாணவர்கள் பயிற்சி டாக்டர்களாகவும் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு பயிற்சி நர்சிடம், பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பயிற்சி நர்சின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு அந்த பயிற்சி டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து வேகமாக அவர் காரில் தப்பிசெல்ல முயன்றார்.
இதில் ஆத்திரம் அடைந்த நர்சின் ஆதரவாளர்கள் கார் கண்ணாடியை உடைத்தனர். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். இது குறித்து போலீசாரிடம் யாரும் புகார் தரவில்லை. எனவே போலீசார் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, விவசாயி. இவரது மகள் வித்யலட்சுமி (18). இவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை மாரிமுத்து தனது மனைவியுடன் வயலுக்கு சென்று விட்டார். வித்யலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் உணவு சமைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு குடிசை வீட்டில் தீப்பற்றியது.
அந்த தீ வீடு முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. அப்போது வித்யலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வர முயன்றார். அதற்குள் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
சிதறிய தீ அருகில் உள்ள பச்சைமுத்து, இளங்கோவன், ஈஸ்வரன், மணிகண்டன் ஆகியோரின் வீட்டிற்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 5 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது.
வீட்டில் பிடித்த தீ கல்லூரி மாணவி வித்யலட்சுமி மீதும் பற்றியது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த அக்கம் பகத்தினர் தீயை அணைத்து வித்யலட்சுமியை மீட்டனர்.
அவரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வித்யலட்சுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியில் வித்யலட் சுமி பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.
தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த நகை-பணம் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் சத்யன் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
இந்த தீ விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.
நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கன மழை காரணமாக காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது.
அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீர் பின்னர் கீழணைக்கு வந்தது. கீழணையில் இருந்து கடந்த 27-ந் தேதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 1,200 கன அடியாக இருந்தது. நேற்று இரவு வரை 1,600 கன அடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக வீராணம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று முன்தினம் ஏரியின் நீர்மட்டம் 37 அடியாக இருந்தது. அது இன்று 39 அடியாக உயர்ந்துள்ளது. படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 45 அடி வரைக்கும் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அதன்பிறகு சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Kallanai #VeeranamLake #Cauvery
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஊரணி பொங்கல் வைக்க அதே பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு சென்றனர்.
ஊரணி பொங்கல் வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் அங்கு இருந்த அரசமரத்தில் இருந்து ஏராளமான விஷ வண்டுகள் கூட்டமாக வந்து ஊரணி பொங்கல் வைத்துக் கொண்டிருந்த பக்தர்களை கடித்தது. இதனால் பக்தர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.
ஆனால் அவர்களை விரட்டி, விரட்டி விஷவண்டுகள் தாக்கியது இதில் மாளிகைமேடு ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த துர்க்கா, ராஜேந்திரன், புவனேஸ்வரி, கோதண்டம், ராமசாமி 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்றார். விஷ வண்டு தாக்கி படுகாயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அனைவருக்கும் பிரட், பிஸ்கெட், பால் வழங்கினார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்துள்ள சின்ன கொசப்பள்ளம் கிராமத்தில் உள்ள விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் விபத்துக்களை தடுக்க நேற்று மாலை புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டது.
இந்த வேகத்தடையின் அருகில் எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. அதன் அருகே மின்வளக்கு வசதியும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாததால் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.
இந்தநிலையில் பெண்ணாடத்தை அடுத்த முருகன் குடியை சேர்ந்த சலீம் என்பவர் நேற்று இரவு பெண்ணாடம் ரெயில் நிலையத்துக்கு சென்று அவரது உறவினர் சாயிரா பானு என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு முருகன்குடி நோக்கி வந்தார். கொசப்பள்ளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடை இருப்பது தெரியாமல் சலீம் வந்து கொண்டிருந்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையை மோட்டார் சைக்கிள் கடந்த போது சலீமின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடு மாறிய சலீமும், அவரது உறவினர் சகீரா பானுவும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் 2 பேரும் வேகத்தடை அமைக்கப்பட்ட கொசப்பள்ளம் பகுதிக்கு வந்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்களும், இளைஞர்களும் ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர். வேகத்தடை உள்ள பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கவேண்டும், காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணி வகுத்துநின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வேகத்தடையின் அருகே அறிவிப்பு பலகை வைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
கடலூரிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் அரசு பஸ் பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு வந்தது. அந்த பஸ்சை பிரபு (43) என்பவர் ஓட்டி வந்தார்.
பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்க வசதியாக பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்சை நிறுத்த முயன்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலு என்பவரது மனைவி ரெஜினா என்பவரை ஓரமாக போய் நிற்கும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த ரெஜினா, டிரைவர் பிரபுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி பிரபு பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா வழக்குப்பதிவு செய்து ரெஜினாவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை நீதிபதி கணேஷ் விசாரித்து அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கடலூர் சிறையில் ரெஜினா அடைக்கப்பட்டார்.
மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 250 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளது. இதில் 2 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அந்த டாக்டர்கள் அனைவரும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், அவசர சிகிச்சை, ஆபரேஷன் போன்ற பணிகள் ஆஸ்பத்திரிகளில் நடந்து வருகிறது.
டாக்டர்களின் இந்த போராட்டத்தால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்திய மருத்துவ அசோசியேஷன் சார்பில் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயசித்ரா மற்றும் டாக்டர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு கொடுத்தனர். #DoctorsStrike






