என் மலர்
நீங்கள் தேடியது "பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்"
சேதமடைந்த பைப்லைனை மாற்றி தரக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தை அடுத்த ஆலடி அருகே உள்ளது மணக்கொல்லை கிராமம். இங்கு 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் வசதிக்காக மணக் கொல்லை ஊராட்சி சார்பில் ஆழ்துளை மோட்டார் அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது.
அதிலிருந்து தண்ணீரானது பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள பைப்லைன் வழியாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பைப்லைன் சேதமடைந்தது. இதனால் பெரும்பாலான வீடுகளுக்கு சரியான முறையில் குடிநீர் விநியோகிக்க முடிய வில்லை.
இதையொட்டி பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு பள்ளம் தோண்டி தண்ணீர் பிடித்து வந்தனர். சேதம் அடைந்த பைப்லைனை மாற்றி தரக்கோரி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் மணக் கொல்லை கிராம மக்கள் பல முறை புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று திடீரென காலி குடங்களுடன் மணக்கொல்லை பஸ் நிறுத்தம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆலடி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பைப்லைன் மாற்றித்தர அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






