என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஓட்டல் அதிபர் மனைவி மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருபவர் நாகலிங்கம் (வயது 46). இவரது மனைவி கலைச்செல்வி (38).

    இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இன்று காலை கலைச்செல்வி பஸ் நிலையம் அருகே உள்ள வயல்வெளிக்கு புல் அறுக்க சென்றார். அப்போது அங்கு மக்காசோளம் பயிரிடப்பட்டிருந்த வயலில் உள்ளே நுழைந்தார்.

    அங்கு காட்டு பன்றிகள் வயலுக்குள் புகாமல் இருக்க சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதனை அறியாமல் கலைச்செல்வி வயலுக்குள் இறங்கினார்.

    அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்தில் பரிதாபமாக கலைசெல்வி இறந்து விட்டார். அந்த வழியாக சென்றவர்கள் கலைச்செல்வி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் வேப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடல் கருகி பிணமாக கிடந்த கலைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வயலில் மின்வேலி அமைத்து யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த அதிமுக பிரமுகர் மீது பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் சாலக்கரையை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 35). இவர் கடலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் சரவணன் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். எனது உறவினரும், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலருமான வினோத்ராஜ் என்பவர் என்னிடம் பேசி வந்தார். பின்னர் என்னிடம் ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்.

    கடலூரில் உள்ள ஒரு லாட்ஜிக்கு வரவழைத்து என்னை வற்புறுத்தி பலாத்காரம் செய்தார். அதனை செல்போனில் படம் பிடித்தார். பின்னர் நாளடைவில் செல்போனில் உள்ள படத்தை வைத்துகொண்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார்

    சிங்கப்பூரில் இருந்து எனது கணவர் அனுப்பிய பணம் மற்றும் பல நபர்களிடம் கடன் வாங்கி சுமார் 1 கோடி ரூபாயை என்னிடம் மிரட்டி வாங்கினார். அதோடு கடலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு கொள்ள வற்புறுத்தினார்.

    தனக்கு கவுன்சிலர் பதவி கிடைப்பதற்காக கடலூரில் உள்ள முக்கிய கட்சி பிரமுகருடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ள மிரட்டி வருகிறார்.

    இது சம்பந்தமாக எனது உறவினர்களிடமும் மற்றும் ஊர் பஞ்சாயத்தாரர்களிடமும் கூறினேன். ஆனால் வினோத்ராஜ் மதிக்கவில்லை. அ.தி.மு.க.வில் இருப்பதால் செல்வாக்கை பயன்படுத்தி கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் என் மீது பொய்யான புகார் கொடுத்தார். என்னை மிரட்டி வெள்ளைத்தாளில் கையொப்பம் வாங்கி கொண்டார்.

    மேலும் கூலிப்படையை கொண்டு என்னையும் எனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். ஆகையால் இது குறித்து முழு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும். அதோடு அவர் எடுத்த ஆபாச படங்களை அழிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.

    கடலூர் முதுநகரில் 10 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதை அறிந்த பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெங்காயம் பெரும் தட்டுப்பாடாக இருந்து வந்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இத்தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு 4 கிலோ முதல் 20 கிலோ வரை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வெங்காயம் வாங்கி சென்றனர்.

    இதனால் 3 மணி நேரத்தில் 20 டன் வெங்காயம் விற்றுதீர்ந்தது.

    வெங்காயம்.

    இன்று காலை கடலூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய் என்றும், 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என விளம்பர பதாகையில் எழுதப்பட்டிருந்தது.

    இன்று காலை உழவர் சந்தைக்கு வந்த மக்கள் ஒரு கடையில் 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்று எழுதப்பட்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்து வாங்கிசென்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடலூர் முதுநகர் பகுதியில் 10 ரூபாய்க்கு வெங்காயம் விற்பதாக வியாபாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடலூர் முதுநகர் விரைந்தனர். அந்த பகுதியில் பக்தவச்சலம் மார்க்கெட்டு முன்பு கடலூர்- சிதம்பரம் சாலையில் வேலு என்பவர் 25 வெங்காய மூட்டைகளை இறக்கி 1 கிலோ வெங்காயம் ரூ. 10-க்கு கிடைக்கும் என்று பதாகையில் எழுதி வைத்திருந்தார்.

    இதனை அறிந்ததும் பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கினர். ஒருகட்டத்தில் பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த பகுதி பிரதான சாலை என்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கடலூர் பான்பரி மார்க்கெட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1 கிலோ வெங்காயம் ரூ. 25-க்கு விற்கப்பட்டது. இந்த வெங்காயத்தை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் வெங்காயம் வாங்க முடியாமல் பெரும் பாதிப்படைந்து வந்தனர்.

    மேலும் ஓட்டல்களில் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்வு ஏற்பட்டதால் ஆம்லெட் உள்ளிட்ட உணவு வகைகள் விலை அதிகரித்து விற்பனை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெங்காயம் கிடைக்காமல் வியாபாரிகள் அவதி அடைந்து வந்தனர். கடலூர் மாவட்டத்தில் வெங்காயம் பதுக்கப்படுகின்றதா? ? என உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1 கிலோ வெங்காயம் ரூ. 25-க்கு விற்கப்பட்டது. 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என எழுதப்பட்டிருந்தது.

    இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்த கடை உரிமையாளரிடம் மீண்டும் மீண்டும் சென்று இந்த விலை உண்மையா? நாங்களும் 100 ரூபாய் கொடுத்தால் 4 கிலோ வெங்காயம் கிடைக்குமா? என்பதனை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டனர்.

    அப்போது கடை உரிமையாளர் பலகையில் எழுதி இருப்பது போல் 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆகையால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    தகவல் கடலூர் நகர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. பலர் அந்தக் கடையையும் 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்ற வாசகத்தையும் செல்போனில் படம் பிடித்து அனைவருக்கும் அனுப்பி வைத்ததை பார்க்கமுடிந்தது.

    காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்து வெங்காயத்தை போட்டி போட்டுவாங்கி சென்றனர்.

    இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில் நாடு முழுவதும் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணமாக வரலாறு காணாத அளவில் தங்கம் போல் வெங்காயம் விலை ஏறியது. இதன் காரணமாக எங்களுக்கு தினந்தோறும் குறைந்த அளவு வெங்காயம் வந்து கொண்டிருந்தது. மேலும் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவே வெங்காயம் வாங்கி சென்றனர்.

    இன்று காலை பெங்களூர் பகுதியிலிருந்து 2 லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது. பெங்களூரில் இருந்து அனுப்பிய மொத்த வியாபாரி தெரிவித்த தொகையான 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றோம். பலபேர் எங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, வாழ்த்தியும் செல்கின்றனர் என்றார்.

    வேப்பூர் அருகே இன்று காலை விபத்தில் என்.எல்.சி. அதிகாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி 5-வது வட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 59). இவரது மனைவி விஜயா(55). இவர்களுக்கு வர்ஷினி, தீட்சிதா ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் டாக்டர்களாக உள்ளனர்.

    ரமேஷ் நெய்வேலி என்.எல்.சி.யில் நகர நிர்வாக அலுவலகத்தில் சிவில் பிரிவில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து அவர் பெங்களூர் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு அவர் சிகிச்சை முடிந்து ஒரு காரில் வீடு திரும்பினார். அவருடன் அவரது மனைவி விஜயாவும் உடன் வந்தார்.

    காரை நெய்வேலியை சேர்ந்த ராஜ்குமார் (25) என்பவர் ஓட்டி வந்தார். முன்பகுதியில் ரமேஷ் அமர்ந்திருந்தார்.

    இன்று அதிகாலை 5 மணிக்கு வேப்பூர் அருகே சேலம் -கடலூர் சாலையில் விலாம்பூர் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    பின்பு அந்த கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரில் இருந்த ரமேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவரது மனைவி விஜயா மற்றும் கார்டிரைவர் ராஜ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும். வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    விபத்தில் காயம் அடைந்த விஜயா மற்றும் ராஜ்குமாரை மீட்டு வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் மேல் சிகிச்சைகாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம் பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சூடான் நாட்டில் சம்பாதிப்பதற்காக வேலைக்கு சென்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தீ விபத்தில் விருத்தாசலம் வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மனைவி லட்சுமி. இவர்களது 2-வது மகன் ஜெயக்குமார். இவர் சூடான் நாட்டில் பீங்கான் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 4 -ந்தேதி ஜெயக்குமார் வேலைப் பார்த்த கம்பெனியில் நடந்த தீ விபத்தில் இந்தியர்கள் பலர் பலியானார்கள். மேலும் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் விருத்தாசலம் வாலிபர் ஜெயக்குமாரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே அவரது உறவினர்கள் கடலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஜெயக்குமார் சூடான் நாட்டில் உள்ள செராமிகா சீலா என்ற கம்பெனிக்கு கடந்த மாதம் 11-ந் தேதி வேலைக்கு சென்றார்.

    அந்த கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜெயக்குமார் எந்த நிலைமையில் உள்ளார் என்ற விபரம் எங்களுக்கு தெரியவில்லை. தொலைக்காட்சி மூலமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

    எனவே ஜெயக்குமார் உடல்நலன் குறித்து தெளிவாக எங்களுக்கு விளக்கம் தரவேண்டும். ஜெயக்குமார் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு சிறந்த மருத்துவ உதவி அளித்து குணமடைந்த உடன் விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலையில் ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக அவருடன் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலம் ஜெயக்குமாரின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமாரின் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது, ஜெயக்குமார் இறப்பு குறித்து இந்திய தூதரகம் உறுதி செய்ய வேண்டும். அவரது உடலை விரைவில் மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    சூடான் நாட்டில் சம்பாதிப்பதற்காக வேலைக்கு சென்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் விபத்தில் ஜெயக்குமார் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயர்மடத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். (வயது 40). இவரது மகள் திவ்ய ப்ரியா (19).

    இவருக்கு இன்று திருச்சியில் தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க திவ்யப்ரியா தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    இவர்களது மோட்டார் சைக்கிள் வேப்பூர் அருகே ஏ.சித்தூர் சர்க்கரை ஆலை பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பின்னால் கோழி ஏற்றிய மினி லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.

    இந்த விபத்தில் தந்தை- மகள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் திவ்யப்ரியா, வேல்முருகன் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தனர்.

    தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்து போன தந்தை, மகள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மினிலாரியை தேடி வருகிறார்கள்.
    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கப்பலின் பாகம் கடற்கரையில் ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டை கடற்கரை பகுதியில் நேற்று காலை ஏதோ ஒரு ராட்சத பொருள் கடல் நீரில் மிதப்பதை அந்த பகுதி மீனவர்கள் பார்த்தனர். உடன் அங்கிருந்தவர்கள் சிறிய வகை படகில் உள்ளே சென்று அதை கரைக்கு கயிறுகட்டி இழுத்து வந்தனர். அது, கப்பலில் இருக்கும் கண்டெய்னர் ஏர்கூலர் பாகம் என்பது தெரியவந்தது.

    தற்போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வந்ததால், ஆழ்கடல் பகுதியில் இருந்து கரைக்கு அடித்து வந்து இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த கடலோர காவல் குழும போலீசார் சி.புதுப்பேட்டை கடற்கரை பகுதிக்கு வந்தனர். அங்கு கரை ஒதுங்கி கிடந்த பாகத்தை பார்வையிட்ட அவர்கள், இது ஏதேனும் கப்பலில் இருந்து விழுந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

    மேலும் கப்பலின் பாகத்தை அங்கிருந்து லாரியில் ஏற்றி, கடலூருக்கு எடுத்து வந்தனர். இது தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கள்ளக்காதல் விவகாரத்தில் செங்கல்சூளை தொழிலாளி சேற்றில் அமுக்கி கொலை செய்தது தொடர்பாக கடலூரில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    புதுவை மாநிலம் கரிக்கலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்தால்ராயன் (வயது 48). இவர் அங்குள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜமுனா. கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி முத்தால்ராயன் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள புதுக்கடை மேட்டுப்பாளையம் வயல்வெளியில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று வயல்வெளியில் பிணமாக கிடந்த முத்தால்ராயன் உடலை கைப்பற்றினர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் முத்தால்ராயன் சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரெட்டிச்சாவடி அருகே உள்ள டி.குமாரமங்கலத்தை சேர்ந்த அய்யனார் (35), வடப்புறம் கீழ்பாதி வீரையன் (35), புதுக்கடையை சேர்ந்த திருமுருகன் (40) ஆகியோரை நேற்று இரவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில்கள் கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தங்கள் பாணியில் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முத்தால்ராயனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    அய்யனார், கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். முத்தால்ராயனின் மனைவி ஜமுனாவும் சித்தாளாக வேலை பார்த்து வந்தார். நாளடைவில் ஜமுனாவுக்கும், அய்யனாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.

    இந்த விவரம் முத்தால்ராயனுக்கு தெரிய வந்தது. இதனால் முத்தால்ராயனால் பிரச்சனை ஏற்படும் என்று அய்யனார் நினைத்தார். முத்தால்ராயனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    கடந்த மாதம் 7-ந்தேதி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது திடீரென்று ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த அய்யனார், வீரையன் ஆகியோர் முத்தால் ராயனை ஏமாற்றி ஒரு மோட்டார் சைக்கிளில் மது குடிக்க அழைத்து சென்றனர்.

    அங்குள்ள மதுக்கடையில் மது குடித்துள்ளனர். அப்போது திருமுருகன் என்பவரும் அங்கு வந்துள்ளார். குடிப்போதையில் முத்தால்ராயன் தள்ளாடினார். இதைத்தொடர்ந்து அய்யனார், வீரையன் ஆகிய 2 பேரும் சேர்ந்து முத்தால்ராயனை புதுக்கடை மேட்டுப்பாளையம் வயல்வெளிக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்குள்ள சேற்றில் முத்தால்ராயனை அமுக்கினர். இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து விட்டார்.

    அதன் பின்பு அவர்கள் முத்தால்ராயன் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி நிர்வாணமாக வயல்வெளியில் போட்டுள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து பிடிபட்ட 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
    சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் பண்ருட்டியை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் கிராமம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    சூடான் நாட்டில் உள்ள பீங்கான் ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 23 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இவர்களில் 18 பேர் இந்தியர்கள். இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த வாலிபரும் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    பண்ருட்டி அருகே உள்ள மானடிக்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். (வயது 38). செராமிக் டிப்ளமோ முடித்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு சூடான் நாட்டில் உள்ள செராமிக் கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் அங்கு நடந்த தீ விபத்தில் பலியாகி விட்டார். இந்த தகவல் ராஜசேகரின் மனைவி கலைசுந்தரிக்கு எட்டியது. இதனை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து அவர் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவருக்கு மயக்கத்தை தெளியவைத்தனர்.

    அதன்பின்னர் கலைசுந்தரி தனது உறவினர்களுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு கலெக்டர் அன்பு செல்வனிடம் கலைசுந்தரி கண்ணீர் மல்க மனு கொடுத்தார். அந்த மனுவில் எனது கணவர் உடலை சொந்த ஊரான மானடிகுப்பம் கிராமத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தை ஷிவானியின் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அன்புசெல்வன் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார்.

    ராஜசேகர் மனைவி கலைசெல்வி கூறுகையில் எங்கள் பகுதியில் நிரந்தர வேலை வாய்ப்பு இல்லாததால் அவர் சூடான் நாட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு பலியான சம்பவம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனது குடும்பத்தினர் ஆதரவு இன்றி தவிக்கிறோம். எனது மகள் கல்வி மற்றும் அனைத்துக்கும் அரசு தான் உதவி செய்யவேண்டும் என்றார்.

    சூடான் நாட்டில் வேலை பார்த்து வந்த ராஜசேகர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது மனைவி கலைச்செல்வியிடம் செல்போனில் பேசுவார். அதன்படி நேற்று முன்தினம் இந்திய நேரப்படி மதியம் 1 மணி அளவில் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி உள்ளார்.

    பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீர் என ராஜசேகரின் பின்னால் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதை பார்த்து அவரது மனைவி கலைசுந்தரி அதிர்ச்சி அடைந்தார். அடுத்த சில விநாடிகளில் வீடியோ காலும் துண்டித்து விட்டது. மீண்டும் அவருடன் கலை சுந்தரி பேச முற்பட்ட போது சிக்னல் கிடைக்கவில்லை. பின்னர் இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தோம். அதன்பின்னர்தான் ராஜசேகர் தீவிபத்தில் இறந்து விட்டதாக தெரியவந்தது

    இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.

    தீ விபத்தில் ராஜசேகன் பலியானதால் மானடிகுப்பம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். அவர்கள் ராஜசேகர் வீட்டுக்கு வந்து அவரது மனைவியிடம் துக்கம் விசாரித்த படி உள்ளனர். இதனால் கிராமம் முழுவதும் சோகத்தில் காணப்படுகிறது.
    ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய பேரூராட்சி செயல் அதிகாரி குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.
    கடலூர் :

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சேகரித்து தனி இடத்தில் வைத்து வருகிறது. இதை மக்கும், மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரிக்கும் வகையில் குடோன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், இந்த பகுதியில் உள்ள வெள்ளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரை பயன்படுத்தி அதில் நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் செயலில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

    திட்டக்குடியில் அரியலூர் பகுதியை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில், தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதன் மீது பேரூராட்சிக்கு சொந்தமான லாரிகள், குப்பைகளை அள்ளிக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக பயணிக்கின்றன. நடுப்பகுதியை சென்றதும், அதில் இருந்து அப்படியே வெள்ள நீரில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

    இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் இதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் மக்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த பிரச்சினை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    ஆற்றில் குப்பைகள் கொட்டப்பட்டது உண்மை என்பது தெரியவந்ததையடுத்து, பேரூராட்சி செயல் அதிகாரி குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.
    காட்டுமன்னார்கோவில் அருகே நீர் வரத்து குறைந்ததால் வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் இன்று காலை 2,900 கன அடியாக குறைந்தது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50அடியாகும். இந்த ஏரியின் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் குடிநீருக்காவும் இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பபடுகிறது. 

    காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வடவாற்றில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் மழைநீருடன் சேர்ந்து ஏரிக்கு நீர் வரத்து 3100 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் நேற்று  46.60 அடியாக  உயர்ந்தது. பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து  700 கன அடி நீர்  வெளியேற்றப்பட்டது. இதனால் ஏரியை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் புகுந்தது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

    இந்த நிலையில் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்யவில்லை. வடவாற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து இன்று காலை 2,900 கன அடியாக குறைந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டமும் 45. 95 அடியாக குறைந்தது. இதை தொடர்ந்து ஏரியில் இருந்து வெளியேற்றபடும் தண்ணீரும் 2,900 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக ஏரியில் இருந்து வினாடிக்கு 73 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.  

    காட்டுமன்னார் கோவில் பகுதியில் நேற்று மழை பெய்யாததாலும், ஏரியில் இருந்து வெளியேற்றபடும் தண்ணீரின் அளவும் குறைக்கபட்டுள்ளதால் அந்த பகுதியில் தேங்கி இருந்த மழை நீர் வடிய தொடங்கியுள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. அதை அப்புறபடுத்தும் பணியில் அந்த பகுதி பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×